Go to ...
RSS Feed

வங்கிகளில் பழைய ரூ.500, 1000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய இன்றே கடைசி நாள்


டெல்லி: வங்கிகளில் பழைய ரூ.500, 1000 நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. ஜனவரி 1ம் தேதி முதல், பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு தளர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்தார்.

புழக்கத்திலிருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி வாயிலாக அறிவித்தார்.

மேலும் நவம்பர் 10ம் தேதி முதல், வங்கி கணக்கில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30ம் தேதி வரை செலுத்தலாம் என்ற வாய்ப்பையும் அவர் தெரிவித்தார். மோடி கூறியபடி, அரசு வழங்கிய 50 நாள் கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

வங்கிகளில் செல்லாத பழைய ரூபாய்களை டெபாசிட் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைந்தாலும், ரிசர்வ் வங்கியில் மார்ச் 31ம் தேதி வரை மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் பழைய ரூபாய் நோட்டுகளை இவ்வளவு நாட்கள் ஏன் வைத்திருந்தீர்கள் என்பதற்கான உரிய காரணத்தை கூறி ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

வங்கி கணக்கில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கு கடைசி நாளான இன்று மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு, ஜனவரி 1ம் தேதியில் இருந்து தளர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்தார்.

மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான 4 அச்சகங்களிலும் புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. தினந்தோறும் 25 கோடி முதல் 30 கோடி எண்ணிக்கை கொண்ட புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

எனவே, பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள், டிசம்பர் 30ம் தேதிக்கு பிறகு குறையும். ஜனவரி 1ம் தேதியில் இருந்து, பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் நீடிக்க வேண்டிய அவசியம் இருக்காது. அந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.

முற்றிலும் ரொக்கம் இல்லா பரிமாற்றத்தை கொண்டு வருவது அரசின் நோக்கம் அல்ல. குறைந்த அளவில் ரொக்கத்தை பயன்படுத்தும் முறையை கொண்டு வருவதற்கே முயன்று வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Source: OneIndia

Facebook Comments