Go to ...
RSS Feed

தமிழக அரசு, வருமான வரி அதிகாரிகளை விமர்சித்ததை திரும்ப பெறுகிறேன்: ராமமோகனராவ்


சென்னை:

சென்னை தொழில் அதிபர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி பல கோடி ரூபாய் பணம் மற்றும் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

அவருடன் தொடர்பு வைத்திருப்பதாக கருதி தலைமை செயலாளர் ராமமோகனராவ் வீட்டிலும், அவரது மகன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து ராமமோகனராவ் தலைமை செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

தனது வீட்டில் சோதனை நடந்ததால் கோபம் அடைந்த ராம மோகனராவ் இது சம்பந்தமாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது வருமான வரித்துறையினர் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், துப்பாக்கி முனையில் மிரட்டியதாகவும், அரசியல் சட்டத்தை மீறி நடந்ததாகவும் கூறினார். மேலும் அவர் என்னை தலைமை செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதாக கூறி இருக்கிறார்கள். ஆனால், அந்த உத்தரவைகூட என்னிடம் வழங்குவதற்கு தமிழக அரசுக்கு தைரியம் இல்லை. நான்தான் தொடர்ந்து தலைமை செயலாளராக நீடிக்கிறேன் என்று கூறினார்.

ஒரு உயர் அதிகாரி இவ்வாறு அரசு மீதும், வருமான வரித்துறையினர் மீதும் விமர்சனங்களை கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வற்புறுத்தினார்கள்.

இந்த நிலையில் தமிழக அரசு மீதும், வருமான வரித்துறை மீதும் தான் கூறிய கருத்துக்களை திரும்ப பெறுவதாக ராமமோகனராவ் கூறி உள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-

நான் மாநில அரசு மற்றும் மத்திய அரசு மீது மிக உயர்ந்த மரியாதை வைத்துள்ளேன். நான் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எதிராக எந்த எண்ணத்தையும் வைத்திருக்கவில்லை. அவர்கள் தங்களுடைய கடமையை செய்தார்கள். நானும், எனது குடும்பத்தினரும் ஒரு வாரமாக அடைந்த வேதனையில் சில கருத்துக்களை கூறி விட்டேன்.

புதிய தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மீது அதிக மரியாதை வைத்துள்ளேன். அவர் மிகச்சிறந்த அதிகாரி. எனது பெயரில் அசையும் சொத்தோ, அசையா சொத்துக்களோ இல்லை. எனது மனைவி பெயரில்தான் அசையும் சொத்துக்கள் உள்ளன. இதுபற்றி எல்லா விவரங்களையும் கொடுத்துள்ளேன்.

எனது மகன் விவேக் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். பெரிய நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்ந்தெடுத்து அனுப்பும் பணி, நிலக்கரி, சிமெண்டு போன்றவற்றை ஏற்றி அனுப்பும் சரக்கு போக்குவரத்து பணி ஆகியவற்றை அவர் செய்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source: Maalaimalar

Facebook Comments