Go to ...
RSS Feed

சமாஜ்வாடி கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு அகிலேஷ் யாதவ் சஸ்பெண்ட்: முலாயம்சிங் அதிரடி


லக்னோ:

உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் தேர்தல் அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் ஆளும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே நான்கு முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் இந்த நான்கு கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதித்துள்ளன. ஆட்சியைப் பிடிப்பதற்காக 6 மாதங்களுக்கு முன்பே பிரசாரங்களும் தொடங்கி விட்டன.

ஷீலா தீட்சித்தை முதல்- மந்திரி வேட்பாளராக அறிவித்து காங்கிரஸ் கட்சி முதலில் பிரசாரத்தை தீவிரப்படுத்தியது. பா.ஜ.க. முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்யாமலே மூத்த தலைவர்களை களத்தில் இறக்கி விட்டுள்ளது. பிரதமர் மோடியும் 3 தடவை உத்தரபிரதேசத்துக்கு சென்று வந்து விட்டார்.

இந்தநிலையில் முலாயம் சிங் யாதவின் ஆளும் சமாஜ்வாடி கட்சியில் அதிகார மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. முலாயம் சிங்கின் மகனும், முதல்- மந்திரியுமான அகிலேஷ் யாதவுக்கும், முலாயம்சிங்கின் தம்பியும், மாநில சமாஜ்வாடி தலைவருமான சிவபால் யாதவுக்கும் அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது.

கட்சியில் தங்கள் செல்வாக்கை நிலை நிறுத்துவதற்காக அகிலேஷ், சிவபால் இருவரும் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்து பட்டியல் கொடுத்தனர். அந்த இரு பட்டியல்களையும் ஆய்வு செய்த சமாஜ்வாடி நிறுவனர் முலாயம்சிங் யாதவ் 325 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டார்.

அந்த 325 வேட்பாளர்களில் தனது ஆதரவாளர்களுக்கு டிக்கெட் கொடுக்காமல் புறக்கணிக்கப்பட்டிருப்பதை கண்டு அகிலேஷ் கடும் ஆவேசம் அடைந்தார். முலாயம்சிங்கை சந்தித்து அவர் தனது அதிருப்தியை வெளியிட்டார். அதற்கு போட்டியாக முழுக்க முழுக்க தனது ஆதரவாளர்களைக் கொண்ட புதிய வேட்பாளர் பட்டியலை அகிலேஷ் தயாரித்தார். அதில் 235 போட்டி வேட்பாளர்கள் இடம் பெற்றிருந்தனர். அந்த போட்டி வேட்பாளர் பட்டியலை அகிலேஷ் நேற்று வெளியிட்டார்.

இதை அறிந்ததும் முலாயம்சிங்கும், சிவபால் யாதவும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அகிலேசின் போட்டி வேட்பாளர்கள் அறிவிப்பால் சமாஜ்வாடி தொண்டர்கள் மத்தியிலும் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது சமாஜ்வாடியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இந்நிலையில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக உத்தர பிரதேச மாநில முதல்வரும், தனது மகனுமான அகிலேஷ் யாதவை 6 ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்வதாக முலாயம் சிங் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முலாயம் சிங் கூறுகையில் “சமாஜ்வாடி கட்சியிலிருந்து அகிலேஷ் யாதவ்வை 6 ஆண்டுகள் இடைநீக்கம் செய்கிறேன். ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக அகிலேஷின் ஆதரவாளர் ராம் கோபால் யாதவையும் 6 ஆண்டுகள் இடைநீக்கம் செய்கிறேன்.

கட்சியை காப்பாற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார். முதல்வராக இருக்கும் நிலையில் அகிலேஷ் யாதவ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது சமாஜ்வாடி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Source: Maalaimalar

Facebook Comments