Go to ...

RSS Feed

வருமானவரி அதிகாரிகள் ராமமோகன ராவ் மகன் விவேக்கிடம் 5½ மணி நேரம் விசாரணை


சென்னை:

சென்னை அண்ணாநகரில் உள்ள முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், திருவான்மியூரில் உள்ள அவருடைய மகன் விவேக் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் கடந்த சில நாட்களாக சோதனை நடத்தினர். இதில் கணக்கில் காட்டப்படாத பணம், நகை மற்றும் பல லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

அதன் அடிப்படையில் இது குறித்து மேலும் தகவல்களை பெறுவதற்காக ராமமோகன ராவ் மகன் விவேக்குக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் அவர் ஆஜராகாததால் நீதிமன்றத்தை நாட வருமானவரித்துறையினர் திட்டமிட்டிருந்தனர்.

இதற்கிடையில் நேற்று மாலை 3.50 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் வருமானவரித்துறை அலுவலகத்துக்கு விவேக் வந்தார். விவேக் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார் என்று தகவல் அறிந்த உடன் பத்திரிகை மற்றும் ஊடகங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் வருமானவரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் குவிந்தனர்.

வருமானவரித்துறை அலுவலகத்தில் உள்ள வரவேற்பு அறையில் உள்ள பதிவேட்டில் தன்னுடைய பெயர், சந்திக்கும் அதிகாரி பெயர், செல்போன் எண், வருகை தந்த நேரம் மற்றும் கையொப்பம் போன்றவற்றை பதிவு செய்துவிட்டு, வருமானவரித்துறை அதிகாரிகள் அடங்கிய விசாரணை குழு முன்பு விவேக் ஆஜரானார். உடன் கைப்பையில் ஆதாரங்களையும் எடுத்து வந்தார்.

விசாரணை குழுவினரிடம் பணம் மற்றும் நகைகள் வாங்கியது மற்றும் சொத்து ஆவணங்களுக்கான ஆதாரங்களை காண்பித்தார். இதனை பார்வையிட்ட அதிகாரிகள் குழுவினர் அவற்றை போதிய நகல் எடுத்துக் கொண்டனர்.

பின்னர் மூடி முத்திரை வைக்கப்பட்ட சுமார் 85 கேள்விகள் அடங்கிய கவரை திறந்து ஒவ்வொரு கேள்விகளாக விவேக்கிடம் கேட்டனர்.

குறிப்பாக தொழிலதிபர் சேகர் ரெட்டி உடன் உள்ள வர்த்தக தொடர்புகள், ராமமோகன ராவ் தலைமைச் செயலாளராக இருந்த காலத்தில் செய்த வர்த்தக விவரங்கள், மற்றும் அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகளுடனான தொடர்புகள் குறித்தும் வருமானவரித்துறை அதிகாரிகள் விவேக்கிடம் விசாரித்ததாக தெரிகிறது.

அதற்கு விவேக் அளித்த பதில்களை வீடியோவில் பதிவு செய்து கொண்டனர். அதில் பெரும்பாலான கேள்விகளுக்கு விவேக் மழுப்பலாகவே பதில் அளித்ததாகவே கூறப்படுகிறது.

அதனை வருமானவரித்துறை ஏற்கவில்லை. மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை 5½ மணி நேரம் விவேக்கிடம் விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணையில் போதிய தகவல்கள் கிடைக்கப்பெற்ற உடன் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். இதனை தொடர்ந்து பெரிய அளவில் சோதனை தொடர வாய்ப்பு உள்ளது’ என்று வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source: Maalaimalar