Go to ...

RSS Feed

15 ஆண்டுக்குபின் வந்தது நடமாடும் நூலகம் : வீடு தேடி வரும் 40 ஆயிரம் புத்தகங்கள்


மதுரை: மதுரை மாவட்ட மைய நூலகத்தில் நீண்ட இழுபறிக்கு பிறகு ‘நடமாடும் நூலகம்’ பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நூலகமே வீடு தேடி செல்வதால், வாசகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. நூலகத்துறை சார்பில் மதுரை மைய நூலகத்தில் கடந்த 1980ல் ‘நடமாடும் நூலகம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக வாகனம் ஒன்று வாங்கப்பட்டது. கதை, கவிதை, கட்டுரை என பல்வேறு தலைப்புகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் நடமாடும் நூலக வாகனம் மாநகர் முழுவதும் வலம் வந்தது. வாசகர்கள் நன்மதிப்பை பெற்று, சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேல் பயன்பாட்டில் இருந்தது. 2003ல் வாகனத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக இத்திட்டம் முடங்கியது. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களும் வாகனத்துடன் சேர்த்து தனி அறையில் முடங்கிப் போனது. பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று வாசகர்கள் தொடர்ந்து, கோரிக்கை விடுத்தனர்.

பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு, கடந்த 2017ல் பழுதான வாகனம் ஏலம் விடப்பட்டு அதற்கான தொகை நூலகத்துறையிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து, புதிய வாகனம் வாங்குவதற்காக, அறிவிப்பு வெளியிடப்பட்டு புதிய வாகனம் வாங்கப்பட்டது. நீண்ட இழுபறிக்கு பிறகு தற்போது நடமாடும் நூலகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.  இந்த நடமாடும் நூலக வாகனம் மாநகரில், ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சில பகுதிகளில் நிறுத்தி வைக்கப்படுகிறது.
நூலக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘நடமாடும் நூலக வாகனம் ஒவ்வொரு நாளும், சில பகுதிகளில் நிற்கும். வாசகர்கள் உறுப்பினராகி புத்தகத்தை பெற்றுக்கொண்டு, அடுத்த வாரம் வாகனம் வரும்போது, ஒப்படைத்து புதிய புத்தகத்தை பெற்றுக்கொள்ளலாம்.

வெள்ளி அன்று விடுமுறை. இதேபோல், அரசு விடுமுறை மற்றும் இரண்டாம் சனிக்கிழமையும் விடுமுறை. வாகனத்தில் ஒரு ஓட்டுநர், கிளீனர், பதிவு கிளர்க் ஆகியோர் இருப்பார்கள். இதில், நூலகர் பணியிடம் மட்டும் காலியாக உள்ளது. ஏற்கனவே, 32 ஆயிரம் புத்தகங்கள் இருந்தது. கூடுதலாக 8 ஆயிரம் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளது’’ என்றார். வாசகர்கள் கூறும்போது, ‘‘நீண்ட வருடங்களுக்கு பிறகு பயன்பாட்டிற்கு வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இதில், மாணவர்களுக்கான போட்டித்தேர்வு புத்தகங்கள் மற்றும் தினசரி நாளிதழ்கள் இடம்பெற்றால் மேலும் சிறப்பாக இருக்கும்’’ என்றனர்.

எந்த கிழமையில் எந்த இடம்?

திங்கள்: மதுரை கிழக்கு, மாரியம்மன் தெப்பக்குளம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் பள்ளி, பங்கஜம் காலனி, பாலரெங்காபுரம், பழைய குயவர் பாளையம்.

செவ்வாய்: பாண்டியன் நெடுஞ்செழியன் மாநகராட்சி பள்ளி, பார்க் டவுன், மேலபனங்காடி, ஆனையூர், எஸ்.ஆலங்குளம், விஸ்வநாதபுரம், மகாத்மாகாந்தி நகர் பகுதிகள்.

புதன்: இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஆழ்வார்புரம், மதிச்சியம், கே.கே.நகர், அண்ணாநகர், கோமதிபுரம், யாகப்பா நகர், மாநகராட்சி காலனி பகுதிகள்.

வியாழன்: காக்கைப்பாடினியார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, வடமலையான் மருத்துவமனை, ஆயுதப்படை குடியிருப்பு, நரிமேடு, கோரிப்பாளையம் பகுதிகள்.

சனி: பொன்னகரம், வெள்ளிவீதியார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஆரப்பாளையம், கரிமேடு, சேதுபதி பாண்டித்துரை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, எல்லீஸ் நகர், கோச்சடை, டோக் நகர் பகுதிகள்.

ஞாயிறு: டி.வி.சுந்தரம் மேல்நிலைப்பள்ளி, சத்யசாய் நகர், கோவலன் நகர், ஜெய்ஹிந்துபுரம், ஜீவா நகர், அழகப்பன் நகர், பசுமலை பகுதிகள்.

Source: Dinakaran

Tags: