Go to ...

RSS Feed

ஊட்டி அருகே இன்று அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 2 பெண்கள் உட்பட 6 பேர் பலி


ஊட்டி: ஊட்டி அருகே இன்று காலை அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்தில் பலியாயினர்.
ஊட்டியிலிருந்து இன்று காலை 11.30 மணி அளவில் குன்னூருக்கு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் 12 பெண்கள் உட்பட 34 பயணிகள் பயணம் செய்தனர். டிரைவர் ராஜ்குமார் பஸ்சை ஓட்டினார். ஊட்டி-குன்னூர் மலைபாதையில் மந்தாடா காணிக்கை நகர் அருகே செல்லும் போது எதிர்பாராதவிதமாக சாலையோர 100 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து உருண்டு சென்று காய்கறி தோட்டத்தில் விழுந்தது. இதில் பஸ் முழுமையாக சேதமடைந்தது.

இதில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் படுகாயம் அடைந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், சாலையில் சென்றவர்கள் ஓடி வந்து அவர்களை மீட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கேத்தி போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் 2 பெண்கள், 4 ஆண்கள் உள்பட 6 பேர் பலியாயினர். அவர்களது பெயர், வயது, ஊர் உள்ளிட்ட விவரம் உடனடியாக தெரியவில்லை. மேலும் பலத்த காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு, ஊட்டி, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

Source: Dinakaran

Facebook Comments

Tags: