Go to ...

RSS Feed

சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுகிறது: உயர் நீதிமன்றம் கண்டனம்


image

கோயில் சிலைகள் பாதுகாப்பு விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவதாக கண்டனம் தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், அதுதொடர்பாக இந்து அறநிலையத் துறை தாக்கல் செய்த அறிக்கையையும் நிராகரித்து புதிய அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

கோயில் சிலைகள் காணாமல் போவது, கடத்தல் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தமிழகத்தில் உள்ள கோயில் சிலைகளை பாதுகாப்பது தொடர்பாகவும், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை அதிகாரிகளுக்கு செய்து தரவேண்டிய வசதிகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்தது. ஸ்ட்ராங் ரூம் அமைக்க அட்டவணை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

சிலைகளை பாதுகாக்க களம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தும் வகையில் அட்டவணை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு இரண்டு நாட்களுக்கு முன் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, அப்போது வழக்கில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்யவேண்டிய கூடுதல் வழக்கறிஞர் ஆஜராகததால் அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மகாதேவன் கூடுதல் வழக்கறிஞர் ஆஜராகும்போது அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதால் வழக்கை ஒத்திவைக்க அவகாசம் கேட்டார்.

அப்போது கருத்து தெரிவித்த நீதிபதி, சிலை கடத்தல் குறித்த வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே தினந்தோறும் சிலைகள் மாயமாகி வருவதை உயர் நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என்று எச்சரித்தார். தொடர்ந்து சிலைகள் திருடப்படும்போது அதுகுறித்த புகார்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று அறநிலையத்துறை சிறப்பு வழக்கறிஞர் மகாராஜனிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக ரங்கராஜன் தொடர்ந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறையை எதிர் மனுதாரராக சேர்க்க நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்து அறநிலையத்துறை சார்பில் அதன் அலுவலர் ஜெயா என்பவர் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்,

அந்த அறிக்கையில், தமிழகம் முழுவதும் கோவில்களில் வலுவான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட 11 ஆயிரத்து 500 அறைகள் உள்ளது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட வேண்டியுள்ளது. இதற்கு 2021-ம் ஆண்டு வரை காலஅவகாசம் தேவை என்று கோரியிருந்தார்.

அறநிலையத்துறை 2021-ம் ஆண்டு வரை காலஅவகாசம் கேட்டிருப்பது பற்றி நீதிபதி, கடும் அதிருப்தி தெரிவித்தார். கோயில் சிலைகள் பாதுகாப்பு விவகாரத்தில் தமிழக அரசும், இந்து அறநிலையத்துறையும் மெத்தனம் காட்டுவதாகக் குறிப்பிட்ட நீதிபதி, பாதுகாப்பு அறைகள் அமைப்பதற்கு இவ்வளவு காலம் தேவையா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் அதுவரை கோயில் சிலைகள் திருடுபோவது தொடரத்தானே செய்யும் என்று கேட்டார். கோயில் சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக, 23 வழிமுறைகளுடன் கடந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததாகவும், ஓராண்டாகியும் தமிழக அரசு அதை அமல்படுத்தவில்லை என்றும் நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

இதை ஏன் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதக் கூடாது? என அரசு தலைமை வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி, இதேநிலை தொடர்ந்தால் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று எச்சரித்தார்.

இந்து அறநிலையத் துறை தாக்கல் செய்த அறிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்து நீதிபதி மகாதேவன், அடுத்த இரண்டு வாரங்களில் முழுமையாகவும் விரிவாகவும் புதிய அறிக்கையை இந்து அறநிலையத்துறை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Source: The Hindu

Facebook Comments

Tags: