Go to ...

RSS Feed

13 பிள்ளைகள் இருந்தும் அனாதையான மூதாட்டி…வேலூர் கலெக்டரிடம் முறையீடு


வேலூர்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை சேர்ந்தவர் மூதாட்டி அந்தோணியம்மாள் (95). இவரது கணவர் தேவராஜ். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கணவரின் கொடுமை தாங்க முடியாமல் வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள தனது மகள் ஜெய்சிராணி வீட்டுக்கு வந்தார். அவரை மருமகன் நந்தகுமார் நன்றாக கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் நந்தகுமார் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அதன்பிறகு மகள் ஜெய்சிராணியால் கைவிடப்பட்ட அந்தோணியம்மாள் கடந்த 5 ஆண்டுகளாக வேலூர் விண்ணரசி மாதா கோயிலில் பிச்சை எடுத்து வந்துள்ளார். அந்த பணத்தையும் அவரது மகள் வாங்கி சென்றாராம்.

கடந்த மாதம் அந்தோணியம்மாள் கீழே விழுந்ததில் அவரது வலதுகால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவதிப்பட்டு வந்த அவரை அங்கிருந்த ஒரு பெண் பாதுகாத்து வந்தாராம்.இதுகுறித்து தகவலறிந்த சமூக ஆர்வலர் மணிமாறன் என்பவர் மூதாட்டியை அழைத்து வந்து மாவட்ட ஆட்சியர் ராமனிடம் நேற்று மனு அளித்தார். அதில் அந்தோணியம்மாளுக்கு உணவு, தங்க இடம் வழங்க வேண்டும். இவரை கைவிட்ட உறவுகள் மீது முதியோர் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ராமன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சாந்திக்கு தெரிவித்து, முதியோர் காப்பகத்தில் மூதாட்டியை ஒப்படைக்க உத்தரவிட்டார்.இதுகுறித்து மூதாட்டி அந்தோணியம்மாள் கூறுகையில், ‘எனக்கு 13 பிள்ளைகளும், பேரன்களும் உள்ளனர். அவர்கள் என்னை கைவிட்டு விட்டதால் அனாதையாக உள்ளேன்.

எனக்கு அந்த ஆண்டவன் மட்டுமே துணை. நான் இறக்கும்வரை என்னை பாதுகாத்து எனக்கு உணவு வழங்கினால் போதும். கால் உடைந்திருப்பதால் என்னால் நடக்க முடியாததால் கழிவறைக்கு செல்வது சிரமமாக உள்ளது. இதனால் நான் சரியான உணவு உட்கொள்வது இல்லை. நான் உயிரோடு இருக்கும்போது என்னை கவனிக்காத மகன், மகள் மற்றும் உறவுகள் நான் இறந்த பிறகு வந்து என்னை பார்க்கக்கூடாது’ என்றார்.

Source: Dinakaran

Facebook Comments

Tags: