Go to ...

RSS Feed

கல்லூரி மாணவிகளிடம் பாலியல் ரீதியாக பேசிய விவகாரம்: பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் 1,160 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்; 6 மாதங்களில் விசாரணையை முடிக்க சிபிசிஐடி தீவிரம்


image

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக அருப்புக்கோட்டை உதவி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்ட வழக்கில் 1,160 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி காவல் துறையினர் விருதுநகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஆத்திபட்டி காவியன் நகரைச் சேர்ந்த நகராட்சி ஒப்பந்ததாரரான பொறியாளர் சரவணபாண்டியன் மனைவி நிர்மலாதேவி (46). அருப்புக்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் கலைக்கல்லூரியில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் கணிதத்துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். இவர், தன்னிடம் படிக்கும் சில மாணவிகளை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பெயரைக் கூறி தவறாக வழிநடத்த முயற்சித்ததாக கைபேசி பேச்சு அடங்கிய ஒலிநாடா கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது.

இது தொடர்பான புகாரின் பேரில் நிர்மலாதேவியை அருப்புக்கோட்டை நகர் காவல் துறையினர் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 3 கைபேசிகள், 5 சிம்அட்டைகளையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

9 தனிப்படைகள் அமைப்பு

அதன் பிறகு இவ்வழக்கு சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி எஸ்.பி. ராஜேஸ்வரி விசாரணை அதிகாரியாகவும், மதுரை சரக டிஎஸ்பி முத்துசங்கரலிங்கம் உதவி விசாரணை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டனர். அதோடு, 9 தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தினர். சுமார் 80-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து நிர்மலா தேவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், முனைவர் பட்ட ஆய்வு மாணவர் கருப்பசாமிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதையடுத்து, இவ்வழக்கில் உதவிப் பேராசிரியரும் கருப்பசாமியும் அடுத்தடுத்து கைதுசெய்யப்பட்டனர்.

பேராசிரியை நிர்மலாதேவி உள்ளிட்ட 3 பேர் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபச்சார தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்ப பரிமாற்ற முறைகேடு தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குரல் மாதிரி சோதனை

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி பேராசிரியை நிர்மலாதேவி உட்பட 3 பேரும் பல முறை மனுத்தாக்கல் செய்தும் அந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் பேராசிரியை நிர்மலாதேவியின் குரல் மாதிரி எடுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை 6 மாதத்துக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று முன்தினம் உத்தரவிட்டது. பேராசிரியை நிர்மலாதேவி வழக்கு விசாரணை நடைபெற்றுவரும் விருதுநகர் 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் 1,160 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை சிபிசிஐடி டிஎஸ்பி.க்கள் முத்துசங்கரலிங்கம், கருப்பையா ஆகியோர் நேற்று தாக்கல் செய்தனர். விரைவில், இக்குற்றப்பத்திரிகை நகல், பேராசிரியை நிர்மலாதேவி உள்ளிட்டோருக்கு வழங்கப்பட உள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதையடுத்து, இவ்வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது.

Source: The Hindu

Facebook Comments

Tags: