Go to ...

RSS Feed

பெண் காவலர் தற்கொலையில் புதிய திருப்பம்: கடிதத்தின் அடிப்படையில் கணவர் கைது; 4 பேருக்கு வலைவீச்சு


image

சேலம் எஸ்பி அலுவலகத்தில் பணியாற்றி வந்த பெண் காவலர் புவனேஸ்வரி தற்கொலையில் புதிய திருப்பமாக அவரது கடிதம் போலீஸாரிடம் சிக்கியுள்ளது. கணவர், அவரது வீட்டார் கொடுமை காரணமாக தற்கொலை என்ற தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் கணவரைக் கைது செய்தனர்.

சேலம் ஜங்ஷனை அடுத்துள்ள போடிநாயக்கன்பட்டியில் வசித்தவர் புவனேஸ்வரி (24). இவர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் கவுதமன் என்பவருக்கும் கடந்த 2014 -ம் ஆண்டு திருமணமானது.

கவுதமன் எந்தவொரு வேலையும் இல்லாமல் தன்னை ஏமாற்றிக் கல்யாணம் செய்துகொண்டதாக குற்றம் சாட்டிய புவனேஸ்வரி, திருமணமாகி 2 மாதங்கள் மட்டுமே கணவர் கவுதமனுடன் சேர்ந்து வாழ்ந்தார். அதன்பிறகு பிரிந்து வந்து தன் பெற்றோர் வீட்டில் வசித்தார். இத்தம்பதியருக்கு குழந்தை இல்லை.

இந்நிலையில், தன் கணவர் இரண்டாம் திருமணம் செய்துகொள்வதாக வந்த தகவலையடுத்து, புவனேஸ்வரி கணவர் வீட்டுக்குச் சென்று விசாரித்துள்ளார். அப்போது, புவனேஸ்வரியின் மாமியார் அவரைத் திட்டி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த புவனேஸ்வரி நான்கு நாட்களுக்கு முன் அதிகாலை 4 மணியளவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதுதொடர்பாக வந்த புகாரின் பேரில் சூரமங்கலம் காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வந்தனர். புவனேஸ்வரியின் தற்கொலைக்குக் காரணமான கணவர் கவுதமன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புவனேஸ்வரியின் உறவினர்கள் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில் புதிய திருப்பமாக புவனேஸ்வரி தான் இறப்பதற்கு முன் எழுதிய கடிதம் சிக்கியுள்ளது. அதில் தனது கணவரும், அவரது குடும்பத்தினரும் தன்னை அடித்து துன்புறுத்தியதாக புவனேஸ்வரி குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில், கவுதமனை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவான மாமியார், மாமனார், கணவரின் சகோதரிகள் இருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Source: The Hindu

Tags: