Go to ...

RSS Feed

ஆண்டிபட்டி பகுதியில் விளைச்சல் இருந்தும், விலை இல்லை… மிளகாய் விவசாயிகள் கவலை


ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா ரக மிளகாய் விளைச்சல் இருந்தும் போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் கவலையடைந்த விவசாயிகள் அரசு, மிளகாய்க்கு நிர்ணய விலையை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி ஒன்றியம் விவசாயத்தை முக்கியத் தொழிலாகாக கொண்டுள்ளது. இந்நகரைச் சுற்றியுள்ள அம்மச்சியாபுரம், அரப்படித்தேவன்பட்டி, திருமலாபுரம், கதிர் நரசிங்கபுரம், ராஜதானி, புள்ளிமான்கோம்பை, அனைக்கரைபட்டி உள்ளிட்ட கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பச்சை மிளகாய் சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் உள்ள விவசாயிகள் கிணற்று பாசானத்தை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் போதிய மழை பெய்யாததால் நீர்நிலைகள் வறண்டு காணப்பட்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டதால் கிணறுகளும் வறண்டு காணப்பட்டது. இதனால் விவசாயிகள் ஆழ்துளை கிணறுகளை அமைத்து விவசாயம் செய்து வந்தனர். மேலும் கடந்த ஆண்டைபோல் இல்லாமல் இந்த ஆண்டு பருவமழை ஓரளவு பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் நிலத்தடி நீர்மட்டம் உயராத சூழலிலும் பல்வேறு வகையான பயிர்களை காப்பாற்ற ஆழ்துளை கிணறுகள் அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் விளைந்த பச்சை மிளகாய்களை அறுவடை செய்து ஆண்டிபட்டி, சின்னமனூர், தேனி, மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் போன்ற மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர். ஆனால் சம்பா மிளகாய் விலை கிலோ ரூ.14லிருந்து ரூ.16க்குள் செல்வதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இது குறித்து விவசாயி ரமேஷ் கூறுகையில், ஒரு ஏக்கர் பரப்பளவில் சம்பா ரக பச்சை மிளகாயை சாகுபடி செய்துள்ளேன். இதற்கு முறையாக உரம், தண்ணீர், மருந்து போன்ற பராமரிப்பு பணிகளை செய்ய ஏக்கர் ஒன்றுக்கு ரூ.60 ஆயிரத்திற்கும் மேல் செலவாகிறது. மிகவும் சிரமப்பட்டு சாகுபடி செய்த பயிர்களை காப்பாற்றி அறுவடை நேரத்தில் விலை குறைவாக செல்கிறது. இதனால் விவசாயிகள் விளைச்சல் இருந்தும் விலை இல்லையே என்ற கவலையில் உள்ளனர். மேலும் வேளாண்மைத் துறையினர் விவசாய நிலங்களுக்கு நேரில் வந்து விவசாயிகளுக்கு ஆலோசனையும், அரசு விவசாயிகள் விளைவிக்ககூடிய பயிர்கள் அனைத்திற்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றார்.

Source: Dinakaran

Tags: