Go to ...

RSS Feed

உள்ளாட்சி தேர்தல் நடத்த தடையாக இருப்பது எது?- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி


image

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தடையாக இருப்பது எது என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவிட் டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2017 நவம்பர் 17-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதிகள் எம்.சத்தியநாரா யணன், எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘‘இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட வில்லை. தவிர, 1996-ம் ஆண்டு வார்டு வரையறைப்படி கடந்த 2011-ல் உள்ளாட்சி தேர்தல் நடத் தப்பட்டுள்ளது. அப்படி இருக்க, தற்போதைய சூழலில் உள்ளாட்சி தேர்தலை நடத்த எது தடையாக உள்ளது?’’ என்று கேள்வி எழுப் பினர்.

மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.துரைசாமி, ‘‘உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவே, அவகாசம் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. வார்டு மறுவரை யறை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை’’ என்றார்.

திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘‘உள்ளாட்சி தேர்தலை நடத்த எந்த சட்டமும் தடையாக இல்லை.

இந்த அவமதிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்காவிட்டால், தேர்தல் நடத்த இனிமேலும்கூட அக்கறை காட்ட மாட்டார்கள்’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘ஏற்கெனவே அவகாசம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான நிலவரம் குறித்து மாநில தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Source: The Hindu

Tags: