Go to ...

RSS Feed

பணவீக்கம் 14 மாதங்கள் காணாத உயர்வு


மொத்த விலை குறியீட்டெண் அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பொதுப் பணவீக்கம் சென்ற மே மாதத்தில் 4.43 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, 14 மாதங்களில் காணப்படாத அதிகபட்ச அளவாகும்.
இதுகுறித்து மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
பொதுப் பணவீக்கம் கடந்த 2017-ஆண்டின் மே மாதத்தில் 2.26 சதவீதமாகவும், நடப்பாண்டு ஏப்ரலில் 3.18 சதவீதமாகவும் காணப்பட்டது.
இந்த நிலையில், எரிபொருள்களின் விலை அதிகரித்ததையடுத்து சென்ற மே மாதத்தில் பணவீக்கம் 4.43 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பாக, பணவீக்கம் சென்ற ஆண்டு மார்ச் மாதத்தில்தான் மிகவும் அதிகபட்சமாக 5.11 சதவீதம் என்ற அளவில் காணப்பட்டது. 
முந்தைய ஏப்ரல் மாதத்தில் 0.87 சதவீதமாக காணப்பட்ட உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் மே மாதத்தில் 1.60 சதவீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உச்சத்தை எட்டியதையடுத்து உள்நாட்டில் எரிபொருள்களுக்கான பணவீக்கம் 7.85 சதவீதத்திலிருந்து மிகவும் அதிகரித்து 11.22 சதவீதமானது.
மேலும், காய்கறிகளுக்கான பணவீக்கம் 2.51 சதவீதமாகவும், உருளைக்கிழங்கின் விலை உச்சபட்சமாக 81.93 சதவீதமும் அதிகரித்து காணப்பட்டன.
பழங்களின் விலை இரட்டை இலக்கம் அளவுக்கு அதிகரித்து 15.40 சதவீதம் என்ற அளவில் காணப்பட்டது. அதேசமயம், பருப்பு வகைகளின் விலை 21.13 சதவீதம் குறைந்ததாக மத்திய அரசு அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

Source: dinamani

Facebook Comments