Go to ...

RSS Feed

2016-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் கலக்கியவர்கள் யார்-யார்?


சென்னை :

2016-ம் ஆண்டில் மொத்தம் 47 டெஸ்ட் போட்டிகள் அரங்கேறியுள்ளன. இதில் அதிக வெற்றிகளை குவித்த அணி என்ற மகத்தான பெருமையை இந்தியா பெற்றுள்ளது. 12 டெஸ்டில் விளையாடி அதில் 9-ல் வெற்றியும், 3-ல் டிராவும் கண்டது. இந்த ஆண்டில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி இந்தியா தான். அதே சமயம் வெற்றி பக்கமே செல்லாத அணி ஜிம்பாப்வே (4 டெஸ்டில் ஆடி அனைத்திலும் தோல்வி). ஆஸ்திரேலிய அணி 11 டெஸ்டில் ஆடி 5 வெற்றி, 5 தோல்வி, ஒரு டிரா சந்தித்துள்ளது.

* டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 90 சதங்கள் பதிவாகின. இதில் பாகிஸ்தானின் அசார் அலி (302* ரன்), இந்தியாவின் கருண் நாயர் (303* ரன்) ஆகியோர் முச்சதம் அடித்ததும் அடங்கும். விராட் கோலி (இந்தியா), மொயீன் அலி (இங்கிலாந்து), ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா) ஆகியோர் அதிகபட்சமாக தலா 4 செஞ்சுரிகள் அடித்துள்ளனர்.

* அதிக ரன்கள் எடுத்தவர்களின் வரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட்டும் (1,477 ரன்), அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிவர்களில் இந்தியாவின் அஸ்வினும் (72 விக்கெட்) முதலிடம் பெற்றுள்ளனர். அஸ்வின் இன்னிங்சில் 5-க்கு மேல் விக்கெட்டுகளை 8 முறை வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இந்த ஆண்டில் மொத்தம் 98 ஒரு நாள் போட்டிகள் (இன்றைய நியூசிலாந்து-வங்காளதேசம் கடைசி ஒரு நாள் போட்டியை தவிர்த்து) நடந்துள்ளன. அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி 29 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 17-ல் வெற்றியும், 11-ல் தோல்வியும் சந்தித்துள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை. இந்திய அணி 13 ஒரு நாள் போட்டிகளில் களம் இறங்கி 7-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும் கண்டுள்ளது.

* அதிக ரன்கள் குவித்தவர்களில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரும் (1,388 ரன்), விக்கெட் வீழ்த்தியவர்களில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பாவும் (30 விக்கெட்) முதலிடம் வகிக்கிறார்கள். இந்திய தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 10 ஆட்டத்தில் விளையாடி 3 சதம் உள்பட 739 ரன்கள் சேர்த்துள்ளார்.

* 68 சதங்கள் அடிக்கப்பட்டு இருக்கின்றன. ஆஸ்திரேலிய துணை கேப்டன் டேவிட் வார்னர் 7 சதங்கள் விளாசி அமர்க்களப்படுத்தி இருக்கிறார்.

இந்த ஆண்டில் நடந்த 20 ஓவர் போட்டிகளின் எண்ணிக்கை 100. அதில் இந்திய அணி 21 ஆட்டத்தில் விளையாடி 15 வெற்றி, 5 தோல்வி கண்டுள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை. 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை சுவைத்த அணி இந்தியா தான்.

* 8 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. தனிநபர் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் 145 ரன்கள் (இலங்கைக்கு எதிராக) விளாசினார்.

* சிக்சர் மன்னர்களாக டெஸ்டில் பென் ஸ்டோக்ஸ் (21 சிக்சர், 12 டெஸ்ட்), ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் (28 சிக்சர், 17 ஆட்டம்), 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானின் முகமது ஷாசாத் (25 சிக்சர், 15 ஆட்டம்) ஆகியோர் வலம் வருகிறார்கள்.

Source: Maalaimalar