Press "Enter" to skip to content

இந்திய வரவு செலவுத் திட்டம் 2020: சிந்து வெளி நாகரிகத்தை சொந்தம் கொண்டாட நினைக்கிறதா பாஜக?

சிந்து சமவெளி நாகரிகத்தை ‘சரஸ்வதி சிந்து நாகரிகம்’ என்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை குறிப்பிட்டது விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

சிந்து சமவெளி நாகரிகத்தை, இந்து சமய வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சரஸ்வதி நதியின் பெயரைக் கொண்டு அழைப்பதற்கும், அந்த நாகரிக காலத்தின் சித்திர எழுத்துகள் மூலம் எழுதப்பட்டுள்ளவை என்ன என்பது இன்னும் ஆய்வாளர்களாலேயே கண்டு பிடிக்க முடியாத சூழலில், அந்தச் சொற்களின் பொருளை நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததையும் ஒரு தரப்பினர் சமூக ஊடகங்களில் விமர்சித்தாலும், வர்த்தகம் மற்றும் தொழிலில் சிறந்து விளங்கிய அந்த நாகரிகத்தின் கூறுகளை வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நதியின் பெயரால் அழைப்பதை இன்னொரு தரப்பினர் ஆதரிக்கவும் செய்கின்றனர்.

வரலாற்றுப் புனைவுகள் எழுதியதற்காக அறியப்படுபவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காட்சியைச் சேர்ந்த, மதுரை மக்களவை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் இது குறித்து பிபிசி தமிழிடம் பேசினார்.

‘சொற்களைக் கொண்டு தமிழர்களை ஏமாற்ற முடியாது’

நிதியமைச்சர் முதலில் தவறாகப் படிக்கிறார் என்று எண்ணினேன். ஆனால், அவர் மீண்டும் மீண்டும் ‘சரஸ்வதி சிந்து நாகரிகம்’ என்றே குறிப்பிட்டார்.

இது புதிதல்ல. ஆர்.எஸ்.எஸ் தொடர்ச்சியாக இதையே சொல்லிக்கொண்டிருக்கிறது. இந்துத்துவவாதிகள் இந்திய வரலாற்றை கட்டமைக்க இதைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள்.

வேதப் பண்பாடுதான் இந்தியப் பண்பாடு. வேத நாகரிகம்தான் இந்திய நாகரிகம் என்று மீண்டும் மீண்டும் நிறுவ நினைக்கிறார்கள். அதற்கான குறியீடாகத்தான் சரஸ்வதி நதியை பயன்படுத்துகிறார்கள்.

சரஸ்வதி நதி என்று ஒரு நதி இல்லை. அது இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது. சரஸ்வதி நதி இல்லாமல் போன நதி என்று கூறுகிறார்கள்.

அப்படிப்பார்த்தால் தமிழ் இலக்கியத்திலும் பல நதிகள் பற்றி கூறப்பட்டுள்து. பஃறுளியாறு என்று தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள ஆறு இன்று இல்லை. அதைக் கண்டுபிடிக்க 1000 கோடி ரூபாய் ஒதுக்குவார்களா?

சரஸ்வதி நாகரிகம் என்று இவர்கள் கூறுவது வேதகால நாகரிகத்தை, பண்பாட்டை. உலகம் முழுதும் நாகரிகத்தின் அடையாளமாக இரண்டு விஷயங்கள் கூறப்படுகின்றன. ஒன்று செங்கல். இன்னொன்று பானை.

ஆனால் வேதத்தில் செங்கல் மற்றும் பானையின் பயன்பாட்டைப்பற்றி எதுவும் கூறப்படவில்லை. மாறாக, செங்கல் மற்றும் பானையை பயன்படுத்துபவர்களை அசுரர்கள் என்று திட்டுகிறது வேதம்.

எந்த இடத்திலும் கற்களை வைத்து யாகம் நடத்திவிட்டு அங்கிருந்து செல்லக்கூடியதுதான் வேதத்தின் பண்பாடு. ஆனால் சிந்து சமவெளி நாகரிகம் அப்படியானதல்ல. சுட்ட செங்கற்களால் ஆன பிரம்மாண்டமான கட்டடங்களைக் கொண்டிருந்த மிகப்பெரிய நாகரிகத்தின் குறியீடு அது.

வேதகாலத்தில்தான் இந்திய வரலாறு தொடங்கியது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்க நினைக்கிறார்கள்.

சிந்து வெளி நாகரிகத்தை வேத நாகரிகமாக மாற்றுவது அல்லது வேத நாகரித்தின் அம்சங்களை சிந்து வெளி நாகரிகத்தில் பொருத்தி அதை எங்களுடையது என்று உரிமை கோரும் வேலையை பொருளாதார நிதிநிலை அறிக்கையில் செய்கிறார்கள்.

வேதத்தில் வந்த சொல்லை எடுத்து அதை சரஸ்வதி சிந்து நாகரிகத்தில் இருக்கும் சொல் என்று இவர்கள் சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது.

இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுதும் உள்ள தொல்லியல் அறிஞர்கள் 100 ஆண்டுகள் ஹரப்பா, மொஹஞ்சதாரோவில் ஆய்வு செய்துள்ளார்கள். எவ்வளவோ எழுத்துகள் அங்கு கிடைத்துள்ளன. ஆனால் அவை இன்னும் படிக்கப்படவே இல்லை.

ஆனால், போகிறபோக்கில் அதன் பொருளை நிதியமைச்சர் சொல்கிறார். சிந்து நாகரிகம் வேத நாகரிகம் என்று ஆர்.எஸ்.எஸ் சொல்லும் வரலாற்றுத் திரிபை இவர்கள் நிதிநிலை அறிக்கையில் செய்கிறார்கள்.

ஆதிச்சநல்லூர் – கீழடி

தமிழகத்தின் ஆதிச்சநல்லூர் உள்பட இந்தியா முழுவதும் ஐந்து இடங்களில் தொல்லியல் அருங்காட்சயகம் அமைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து வெங்கடேசன் பகிந்துகொண்ட கருத்துகள்.

சரஸ்வதி சிந்து நாகரிகம் என்று மீண்டும் மீண்டும் கூறிவிட்டு, அதன்பின் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட ஐந்து இடங்களில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கூறும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது.

ஆதிச்சநல்லூர் இரண்டாம் கட்ட அகழாய்வை மத்திய தொல்லியல் துறை 2005இல் நடத்தி முடித்து. இப்போது 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதுவரை அந்த அகழாய்வில் அறிக்கை வெளியாகவில்லை.

இந்நிலையில் அருங்காட்சியகம் குறித்து பேசியுள்ளீர்கள். உங்களுக்கு என்று ஓர் அரசியல் உள்ளது. 100 ஆண்டுகள் சர்வதேச சமூகம் விஞ்ஞானபூர்வமாக செய்த ஆய்வையே மறைத்து சரஸ்வதி சிந்து நாகரிகம் என்று சொல்லும்போது ஆதிச்சநல்லூரை அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்ல வாய்ப்புள்ளது. எனவே அதை மிகுந்த எச்சரிக்கையோடும் கவனத்தோடும்தான் அதை அணுக வேண்டும் என்று நினைக்கிறன்.

கீழடி என்பதே மத்திய அரசுக்கு எதிரான ஒரு குறியீட்டுச் சொல். கீழடியில் எதுவுமே இல்லை, அங்கு வரலாற்றுத் தொடர்ச்சி இல்லை என்று கூறி மத்திய அரசு வெளியே வந்தது. அவர்கள் சொன்னது தவறு என்பதை நான்காம் கட்ட அகழாய்வில் தமிழக அரசு நிரூபித்துள்ளது. எனவே அவர்கள் இப்போது கீழடியிடம் நெருங்க முடியாது. அப்படி செய்தல் அவர்கள் சொன்னது பொய் என்று நிரூபணம் ஆகிவிடும் என்பதால் ஆதிச்சநல்லூரிடம் வருகிறார்கள்.

“ஆதிச்சநல்லூரின் அகழாய்வு முடிவுகளே இன்னும் வெளிவராதபோது எதை வைத்து அருங்காட்சியகம் அமைக்கப்போகிறீர்கள். எந்தக் கருத்தில் நின்று அந்த அருங்காட்சியகத்தைக் காட்சிப்படுத்தப் போகிறீர்கள்?”

திருக்குறளை மேற்கோள் காட்டி சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோதி பேசி வரும் சூழலில், நடப்பு நிதியாண்டுக்கான இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கை மற்றும் நிதியமைச்சரின் பட்ஜெட் உரை ஆகியவற்றிலும் திருக்குறள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது குறித்து எழுத்தாளர் வெங்கடேசன் பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டவை இதோ.

வெறும் சொற்களைக் கொண்டு தமிழ் சமூகத்தை ஏமாற்றிவிட முடியாது. பொருளாதார ஆய்வறிக்கை திருக்குறளைக் கொண்டு தொடங்குகிறது. பிரதமரும் எல்லா இடங்களிலும் திருக்குறளை சொல்கிறார்.

ஆனால் ஏன் திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசுகிறார்கள்? தமிழ் மரபை கையகப்படுத்துவது நேர்மையோடு செய்ய வேண்டிய வேலை. அதற்கு குறுக்கு வழிகள் கிடையாது. நீங்கள் குறுக்கு வழிகள் எவ்வளவு கையாண்டாலும் அந்த மரபு உங்களுக்கு எதிரானது.

“வைதீகத்தின்மீது நின்றுகொண்டு, வேதப் பண்பாட்டின்மீது நின்றுக்கொண்டு, இதுதான் இந்திய வரலாறு என்று சொல்லிக்கொண்டே தமிழை அணுகினால் உங்களால் அதை நெருங்க முடியாது,” என்றார் வெங்கடேசன்.

வேறு என்ன பேசினார் நிர்மலா?

“சரஸ்வதி சிந்து நாகரிகத்தின் பட்டறைகளும், ஹரப்பன் முத்திரைகளும் குறிப்பிடத்தக்கவை, ” என்று தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், சிந்து நாகரிக கால சித்திர எழுத்துக்கள் மூலம் எழுதப்பட்ட சில சொற்களுக்கும் அவர் பொருள் கூறினார்.

சரஸ்வதி சிந்து நாகரிகம் சுமார் கி.மு 4000-வது ஆண்டுக்கு முற்பட்டது என்றும் குறிப்பாக இந்த முத்திரைகள் கி.மு 3300-வது ஆண்டைச் சேர்ந்தவை என்றும் கூறினார் நிர்மலா சீதாராமன்.

‘ஷ்ரேனி’ என்றால் ‘பட்டறை’ என்றும் முத்திரையில் காணப்படும் ‘சேட்டி’ எனும் சொல்லுக்கு ‘மொத்த வியாபாரி’ என்றும் பொருள், ‘பொத்தார்’ எனும் சொல்லின் பொருள் ‘கருவூலத்தில் கனிமங்களின் அளவை மதிப்பிடுபவர்’ என்று கண்டறியப்பட்டுள்ளது என்று நிர்மலா தனது உரையில் குறிப்பிட்டார்.

தனது உரையின்போது ஒருமுறை சிந்து நாகரிகம் என்று கூறிய நிதியமைச்சர், பின்னர் அதைத் திருத்தி ‘சரஸ்வதி சிந்து நாகரிகம்’ என்று குறிப்பிட்டார்.

இந்தத் தகவல்களை நிதியமைச்சர் வாசித்தபோது, தமிழக மக்களவை உறுப்பினர்கள் அமர்ந்திருந்த பகுதியில் எதிர்ப்புக் குரல்களும் எழுந்தன.

வர்த்தகம் மற்றும் தொழில் துறையைப் பொறுத்தவரை இந்தியா கடல்சார் சக்தியாக இருந்துள்ளது. ‘தகரா கொலிமி’ எனும் சொல் அந்தக் காலகட்டத்தில் இரும்பு மற்றும் தகரம் உருக்கும் கொல்லர்கள் தொழில் செய்ததை காட்டும் வகையில் உள்ளது என்று பேசினார் நிர்மலா.

“பல்லாயிரம் ஆண்டுகளாகவே இந்தியாவில் இத்தகைய தொழில்கள் இருந்துள்ளது தெரிகிறது. இத்தனை காலமும் அவை இருந்தும் நீடித்து வந்துள்ளன. தொழில் முனைவுதான் இந்தியாவின் வலிமை, ” என்று நிதியமையச்சர் பேசினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from இந்தியாMore posts in இந்தியா »
More from தமிழகம்More posts in தமிழகம் »