Press "Enter" to skip to content

இந்தியாவின் பொக்கிஷமான எல்.ஐ.சி-யின் பங்குகளை மத்திய அரசு விற்பது ஏன்?

பிபிசி ஹிந்தி சேவை
புது டெல்லி

60 ஆண்டுகள் பழமையான அரசாங்க காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சியின் பயணம் மிகவும் அற்புதமானது. இந்தியாவின் காப்பீடு சந்தையில் 70 சதவீதம் எல் ஐ சியின் பிடியில் உள்ளது.

எப்போதெல்லாம் அரசு நிதி நெருக்கடியை சந்திக்கிறதோ அப்போதெல்லாம் ஒரு நல்ல நண்பனை போல வந்து எல்.ஐ.சி காப்பாற்றும். இதனால் பல முறை எல்.ஐ.சி நஷ்டங்களைக்கூட சந்தித்துள்ளது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை தாக்கல் செய்த பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலமாக 2.1 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்போவதாக அறிவித்திருந்தார். இதுவரை பங்குகள் விற்பதன் மூலம் கிடைக்கும் வருவாய்க்கான இலக்குகளில் இதுவே அதிகம்.

இதில் எல்.ஐ.சி மற்றும் ஐடிஆர்பி மூலமாக 90 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதே இந்த திட்டமாகும். மத்திய அரசு ஏற்கனவே பாரத் பெட்ரோலியம் மற்றும் ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

1956ஆம் ஆண்டு காப்பீட்டுத் துறையை தேசியமயமாக்கி, எல்.ஐ.சி சட்டத்தின் கீழ் எல்.ஐ.சி நிறுவனத்தை நிறுவியபோது, நாடாளுமன்றத்தில் எல்.ஐ.சியை விற்பது குறித்து பிற்காலத்தில் விவாதிக்கப்படும் என சிலர் மட்டுமே எதிர்பார்த்திருக்கக்கூடும்.

2015ல் ஓஎன்ஜிசியின் ( ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்) பங்குகளை பங்குசந்தையில் விற்ற போது எல்.ஐ.சி அந்த நிறுவனத்தில் 1.4 பில்லியன் டாலர் முதலீடு செய்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஐடிபிஐ வங்கி வாராக்கடன்களில் மூழ்கியபோது எல்.ஐ.சி மீண்டும் வந்து காப்பாற்றியது.

ஆனால் மத்திய அரசு எல்.ஐ.சியில் தற்போது இருக்கும் 100 சதவீத பங்குகளை குறைக்க யோசிக்கிறது. அதாவது இதுவரை பிற நிறுவனங்களை விற்பதில் எல்.ஐ.சியை பயன்படுத்தி வந்த அரசு தற்போது எல்.ஐ.சியையே விற்க தயாராகிவிட்டது. அவ்வாறு அரசின் பங்குகளை விற்க பங்கு சந்தையில் எல்.ஐ.சியை இறக்க முடிவு செய்துள்ளது.

எல்.ஐ.சியிலிருந்து எவ்வளவு சதவீத பங்குகளை விற்க போகிறது என வெளிப்படையாக கூறவில்லை. ஒருவேளை அரசு எல்.ஐ.சியில் 50 சதவீதத்திற்கும் அதிக பங்குகளை விற்காமல் வைத்திருந்தால் அது அரசு நிறுவனமாகவே இருக்கும்.

சந்தையில் எல்.ஐ.சியின் முக்கியத்துவம்

எல்.ஐ.சியின் பங்குகளை விற்பதாக அறிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ,” பங்கு சந்தையில் இடம் பெறும் நிறுவனங்கள் கட்டுபாடுடன் செயல்படுகிறது மற்றும் நிதி சந்தைக்கான வாய்ப்பையும் அளிக்கிறது. மேலும் நிறுவனத்திற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் சில்லறை முதலீட்டாளர்களுக்கு வருவாயில் பங்கு கொள்ளும் வாய்ப்பை அளிக்கிறது.” என்றார்.

2019, நவம்பர் 30 வரையில் எல்.ஐ.சியின் பங்கு காப்பீட்டு சந்தையில் 76.28 சதவீதம் இருந்தது. 2019 நிதியாண்டில் எல்.ஐ.சி 3.37 ட்ரில்லியன் ரூபாய் வாடிக்கையாளர்களின் பீரிமியத்திலிருந்தும் 2.2 ட்ரில்லியன் ரூபாய் முதலீட்டிலிருந்து கிடைக்கும் ஆதாயத்திலும் வருமானம் ஈட்டியுள்ளது. இந்த நிதி விவரங்கள் தனியார் நிறுவனங்களின் கவனங்களை ஈர்ப்பதுடன் போட்டியை அதிகரிக்கிறது.

2019ஆம் ஆண்டின் நிதியாண்டில் எல்.ஐ.சி பங்கு சந்தையில் 28.32 ட்ரில்லியன் ரூபாயும், கடனாக 1.17 ட்ரில்லியன் ரூபாயும் மற்றும் 34,849 கோடி பண சந்தையிலும் முதலீடு செய்துள்ளது. எல்.ஐ.சியின் பங்குகளை விற்பது மூலமாக 2020-21க்கான பொதுத்துறை பங்குகள் விற்பதற்கான இலக்கை மத்திய அரசு அடைய உதவியாக இருக்கும்.

தற்போது நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை பங்குகள் விற்பதற்கான இலக்கு 1.05 ட்ரில்லியன் ரூபாய் ஆகும். 2020-21க்கான இலக்கு 2.1 ட்ரில்லியன் ரூபாய் ஆகும். சனிக்கிழமையன்று நிதிதுறை செயலாளர் ராஜிவ் குமார், ”எல்.ஐ.சியின் பங்குகளை விற்பதன் மூலமாக மத்திய அரசு 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் எதிர்பார்க்கிறது ” எனக் கூறியுள்ளார்.

வணிக உலகின் வரவேற்பு

வணிக உலகில் எல்.ஐ.சியின் பங்குகளை விற்பதை வரவேற்கின்றனர்.

இந்திய தேசிய பங்கு சந்தை அமைப்பின் தலைவரான விஜய் பூஷன் , ”இந்த பட்ஜெட்டின் மிக முக்கிய அம்சம் எல்.ஐ.சியின் பங்குகளை விற்பதே ஆகும். சௌதியில் அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் பங்குகளை விற்பது போன்றதே எல்.ஐ.சியின் பங்குகளை விற்பது. இந்த தசாப்ததின் மிகப்பெரிய பொதுத்துறை பங்குகளை விற்கும் நிறுவனம் எல்.ஐ.சியே ஆகும்” எனக் கூறியுள்ளார்.

எம்கே உலக நிதி சேவைகளின் மேலாண்மை இயக்குனரான கிருஷ்ண குமார் கர்வா, ”எல்.ஐ.சியின் பங்குகளை விற்பது கார்ப்பரேட் நிறுவனங்களின் செயல்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மை போன்றவற்றுக்கு ஏதுவானதாக அமையும். இதன் மூலம் வருங்காலங்களில் அரசுக்கு நிறைய பணம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் இருக்கும்” என்று கூறினார்.

மெட்ரோபாலிடன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் சிஇஓ பாலு நாயர், ”முதலீட்டாளர்கள் அனைவரும் எல்.ஐ.சியின் இந்த பங்குகளை சந்தை ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். பங்கு சந்தையிலிருந்து பணம் ஈட்ட அரசுக்கு உதவியாக இது அமையும்” என கூறியுள்ளார்.

எல்.ஐ.சியின் நிலை என்ன?

அரசின் நம்பிக்கையாக கருதப்படும் எல்.ஐ.சியின் கடந்த ஐந்தாண்டு கணக்குகளைப் பார்க்கும்போது அவ்வளவு நம்பிக்கையாக இல்லை. கடந்த ஐந்து வருடங்களில் வருவாய் ஈட்டாத சொத்துகளின் மதிப்பு எல்.ஐ.சியில் அதிகமாகியுள்ளது.

2019 மார்ச் மாத ஆண்டு அறிக்கையின் படி முதலீட்டு விகிதத்தில் வருவாய் ஈட்டாத சொத்துகளில் மதிப்பு 6.15 சதவீதமாக மாறியுள்ளது. 2014-15ல் இது 3.30 சதவீதமாக இருந்தது. அதாவது கடைசி ஐந்து நிதியாண்டில் 100 சதவீதமாக உயர்ந்துள்ளது.

2018-19ஆண்டு அறிக்கையின் படி நிறுவனத்தின் வருவாய் ஈட்டாத சொத்துகள் 24,777 கோடி எனவும் நிறுவனத்தின் கடன்கள் 4 லட்சம் கோடிக்கு அதிகமாகவும் இருந்தது. எல்.ஐ.சியின் மொத்த சொத்து 36 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

எல்.ஐ.சியின் இந்த நிலைக்கு காரணம் எல்.ஐ.சி முதலீடு செய்த பெரும்பாலான நிறுவனங்களின் நிலை மோசமாகியிருந்ததும் சில நிறுவனங்கள் வங்கியால் ஜப்தி செய்ய வேண்டிய கட்டாயத்துகுள்ளாகியதுமே ஆகும். இதில் திவான் ஹவுசிங் ரிலையன்ஸ், இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் மற்றும் பிராமல் கேபிடல் ஆகியவையும் அடக்கம்.

தொழிலாளர் சங்கங்களின் எதிர்ப்பு

மத்திய அரசின் பங்குகளை விற்கும் முடிவுக்கு எல்.ஐ.சியில் இயங்கி வரும் தொழிலாளர் சங்கங்கள் எதிர்ப்புகளை தெரிவிக்கின்றனர்.

லைஃப் இன்ஷூரன்ஸ் தொழிலாளர் அமைப்பின் பொது செயலாளர் ராஜேஷ் நிம்பால்கர், ”பிற நிறுவனங்களுக்கு பிரச்சனைகள் வரும்போது எல்.ஐ.சி எப்போதும் அரசின் கடைசி நம்பிக்கையாக இருந்துள்ளது. அரசின் பங்குகளிலொரு பகுதியை விற்கும் இந்த முடிவை நாங்கள் எதிர்கிறோம். இது பாலிசி எடுத்த பொதுமக்கள், முகவர்கள் என அனைவரும் எல்.ஐ.சியின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு எதிராக இருக்கிறது” என்று கூறுகிறார்.

இந்நிறுவனத்தில் அரசின் பங்கில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அது பாலிசி எடுத்திருக்கும் மக்களின் நம்பிக்கையை கெடுக்கும். அரசு எவ்வளவு பங்குகளை விற்கப்போகிறது என்பதை வெளிப்படையாக இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் அரசின் முந்தைய நடவடிக்கைகளைப் பார்த்தால் இந்நிறுவனம் பொதுத்துறை என்னும் அந்தஸ்த்தை இழந்து நிற்கும் என்பதையே காட்டுகிறது எனவும் கூறியுள்ளார் ராஜேஷ் நிம்பால்கர்.

பால் கொடுக்கும் பசு

ராஜேஷ் நிம்பால்கர் கூறியதுபோல, மத்திய அரசுக்கு எப்போதெல்லாம் பணம் வேண்டுமோ அப்போதெல்லாம் எல்.ஐ.சி கொடுக்கும். கடந்தகாலங்களில் இதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது. ஐடிபிஐ பங்கி கடனில் மூழ்க இருந்தபோது கூட எல்.ஐ.சி யே அதை காப்பாற்றியது.

எல்.ஐ.சியிடம் ஐடிபிஐ வங்கியின் 7 முதல் 7.5 சதவீதம் இருந்த போதும் அதன் 51 சதவீதத்தை வாங்க 10 ஆயிரத்திலிருந்து 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்தது.

ஐடிபிஐ என்று கிடையாது, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு என்று வந்தால் எல்.ஐ.சி அதில் அதிக முதலீடு செய்யும். இதில் ஓஎன்ஜிசி போன்ற நிறுவனங்களும் அடக்கம். சராசரியாக அரசு பத்திரங்களிலும் பங்கு சந்தைகளிலும் எல்.ஐ.சி வருடத்திற்கு 55 முதல் 65 ஆயிரம் கோடி முதலீடுகளை செய்கிறது.

2009லிருந்து வருவாய் பற்றாக்குறையைக் குறைக்க அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்றபோதெல்லாம் எல்.ஐ.சிதான் அதை வாங்க முன்வரும் முதல் நிறுவனமாக இருந்தது. 2009லிருந்து 2012 வரை பொதுத்துறையின் பங்குகளை விற்றதில் அரசு 9 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. அதில் மூன்றில் ஒரு பங்கு எல்.ஐ.சியின் பங்கு ஆகும். ஓஎன்ஜிசியின் பங்குகளை விற்கும் முடிவு பெரிய தோல்வியில் முடிய இருந்தது. அதை எல்.ஐ.சியே வெற்றியாக மாற்றியது.

எல்.ஐ.சி சட்டத்தின் திருத்தம்.

எல்.ஐ.சியின் பங்குகளை விற்க துவங்கும்முன் எல்.ஐ.சி சட்டத்தில் அரசு திருத்தம் கொண்டு வர வேண்டும். நாடு முழுவதும் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமே காப்பீட்டுத்துறை கண்காணித்து வந்தாலும் எல்.ஐ.சியை நடத்துவதற்கு நாடாளுமன்றத்தில் தனி சட்டம் ஒன்று உள்ளது.

எல்.ஐ.சி உறுதியளிக்கும் மக்களின் காப்பீட்டு தொகை மற்றும் போனஸுக்கு பின்னால் மத்திய அரசே அதற்கு பொறுப்பாகும் என எல்.ஐ.சி சட்டத்தின் 37வது பிரிவு கூறுகிறது. மற்ற தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் இது கிடையாது.

பொதுமக்கள் காப்பீடு பெறும்போது எல்.ஐ.சியை பெரிதும் விரும்ப இதுவும் ஒரு காரணம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from இந்தியாMore posts in இந்தியா »
More from தமிழகம்More posts in தமிழகம் »