Press "Enter" to skip to content

ஷாஹின்பாக் பெண்கள் போராட்டமும் கூடங்குளம், மெரினா போராட்டமும் – ஓர் அலசல்

மு. நியாஸ் அகமது
பிபிசி தமிழ்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷாஹின்பாக் பகுதியில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து பெண்கள் நடத்தும் தொடர் தர்ணா போராட்டம் 50 நாட்களைக் கடந்து நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்துக்கும் தமிழகத்திற்கும் பல தொடர்புகள் உள்ளன.தொடர்பு என இங்கு குறிப்பிடுவது பௌதீக தொடர்பை அல்ல. போராட்ட வழிமுறை குறித்த தொடர்பு அது.

எப்படி மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம் எந்த தலைமையும் இல்லாமல் நடந்ததோ, எப்படி கூடங்குளம் போராட்டம் பெண்களால் முன்னெடுக்கப்பட்டதோ அப்படியான தொடர்பு இது.

இன்னும் குறிப்பாக இந்த ஷாஹின்பாக் பெண்கள் போராட்டத்தைக் குறித்து சொல்ல வேண்டுமானால் அமெரிக்கா வால்ஸ்டீரீட் போராட்டம் (Occupy Wallstreet) போராட்டம் போல நடக்கிறது.

ஷாஹின்பாக் போராட்டம், வால் ஸ்ட்ரீட்டும்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு இடங்களில் தொடங்கிய போராட்டம் போலத்தான் ஷாஹின்பாக்கிலும் மக்கள் போராடத் தொடங்கினார்கள். ஆனால், மற்ற இடங்களில் அடையாள போராட்டமாக நடக்க இந்த மக்கள் தொடர் போராட்டமாக இதனை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

அமெரிக்காவின் வணிக முகமாக கருதப்படும் வால் ஸ்ட்ரீட்டை 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் மக்கள் கைப்பற்றினார். பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான போராட்டம் அது.

சில நாட்கள் போராடிவிட்டு மக்கள் கலைந்து சென்றுவிடுவார்கள் என்றுதான் அமெரிக்க அரசு அப்போது கருதியது. ஆனால், போராட்டம் மாதக்கணக்கில் தொடர்ந்தது. மக்கள் தற்காலிக கூடாரம் அமைத்தனர், அங்கேயே சமைத்து, உறங்கினர்.

போராட்டத்திற்கென எந்த தலைமையும் இல்லை. போராட்டக்காரர்களே தங்களுக்குள் ஒரு பொதுச்சபையை அமைத்தார்கள். போராட இசைவழியைத் திட்டமிட்டார்கள். பல மாதங்களுக்கு இந்த போராட்டம் தொடர்ந்தது.

இப்படியாகத்தான் இந்த போராட்டமும் நடக்கிறது.

தேசிய தலைநகரில் ஷாஹின்பாக் பகுதியில் நெடுஞ்சாலையைக் கைப்பற்றிய பெண்கள் தொடர்ந்து 50 நாட்களுக்கு மேலாக அங்கேயே தற்காலிக கூடாரம் அமைத்துத் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

கூடங்குளம் போராட்டம்

அமெரிக்க உதாரணம் கூட அந்நியமாக இருக்கும். வடக்கில் நடக்கும் ஷாஹின்பாக் போராட்டம் போலவே ஒரு போராட்டம் இந்தியாவின் தெற்கு முனையில் நடந்தது. அது அணு உலைக்கு எதிராக இடிந்தகரையில் நடந்த போராட்டம்.

பெரிதாக அரசியல் தலைமை எதுவும் இல்லாமல் நடந்த போராட்டம் அது. போராட்டக்காரர்களில் பெரும்பாலானவர்கள் மீனவ மக்கள். அதிலும் அந்த போராட்டத்தில் முன்வரிசையில் நின்று, பின் அந்த போராட்டத்தின் முகமாகிப் போனவர்கள் பெண்கள்.

குறிப்பாக சுந்தரி, மேரி பீட்டர், செல்லம்மாள், செல்வி ஆகியோர் கூடங்குளம் போராட்டக் குழுவிலிருந்து போராட்டத்திற்கான செயல் திட்டத்தை வடிவமைத்தனர்.

அந்த போராட்டம் ஏறத்தாழ 1000 நாட்களுக்கு மேலாக தொடர்ந்தது.

இப்படியாகத்தான் இந்த ஷாஹின்பாக் போராட்டமும் நடக்கிறது.

ஷாஹின்பாக் போராட்டத்திற்கு எந்த அரசியல் கட்சியும் தலைமை இல்லை. அரசியல் கட்சிகள் வருகின்றன, அதரவை நல்குகின்றன, போராட்ட களத்தில் பேசுகின்றன. அவ்வளவுதான்.

கேடயமா பெண்கள்?

போராட்டம் எந்த அரசியல் கட்சிகளின் கரங்களுக்குச் செல்லாமல் இந்த பெண்கள் பார்த்துக் கொள்கிறார்கள். அவர்களே ஒரு குழு அமைத்து போராட்டத்தை நிர்வகிக்கிறார்கள்.

ஷாஹின்பாக்கில் நம்மிடம் ஒரு பெண், “இது எங்கள் வாழ்க்கைக்கான போராட்டம். இது எங்கள் உரிமைக்கான போராட்டம். எங்கள் நிலத்திற்கான போராட்டம். ஏதோவொரு சட்டத்தைக் கொண்டு வந்து எங்களை எல்லாம் எங்கள் நிலத்திலேயே அகதிகளாக்க அரசு முயல்கிறது. அரசு சட்டத்தைத் திரும்பப் பெறும் வரை நாங்கள் பின் வாங்க மாட்டோம்,” என்றார்.

யாரோ போராட்டம் நடத்தி, உங்களை கேடயமாக முன்னிறுத்துகிறார்களா? என்ற கேள்விக்கு, “ஏன் பெண்கள் போராட மாட்டார்களா? பெண்களுக்கு சுய அறிவு இல்லையா? குடும்பத்தைத் தெரிந்த எங்களுக்கு இந்த போராட்டத்தை நிர்வகிக்கத் தெரியாதா?” என்று பதில் கேள்வியை முன் வைக்கிறார் போராட்ட குழுவில் இருக்கும் ஒரு பெண்.

இப்படியான கேள்வியைத்தான் இடிந்தகரையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த போது மேரியும் கேட்டார். அவர், “இந்த சமூகத்தில் ஆண்களுக்கு என்ன பொறுப்பு உள்ளதோ அதே பொறுப்பு எங்களுக்கும் உள்ளது. அதற்காகதான் போராட்டத்தில் முன் வரிசையில் நிற்கிறோம்,” என்றார்.

மெரினா போராட்டம்

மெரினா போராட்டமும் இப்படியான போராட்டமாக இருந்தது. தலைமை ஏதும் இல்லாமல் நடந்த போராட்டம் அது. ஆனால், ஒரு கட்டத்திற்கு மேலே அதுவே அந்த போராட்டத்தின் மீதான விமர்சனமாகவும் இருந்தது.

ஜல்லிக்கட்டுக்காக உணர்ச்சிவேகத்தில் இளைஞர்கள் போராடினார்களே தவிர அவர்கள் அரசியல்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனால், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கிய அளவில் அது வெற்றி போராட்டம்தான் என்றும் அரசியல் விமர்சகர்கள் அப்போது நம்பிக்கையாக பேசினர்.

போராட்டம் மீதான விமர்சனங்கள்

கூடங்குளம் போராட்டம் மீது என்ன விமர்சனம் வைக்கப்பட்டதோ, அதேபோன்ற விமர்சனங்கள்தான் இப்போது இந்த மக்கள் மீதும் வைக்கப்படுகிறது.

பணம் கொடுத்து நடத்தப்படுகிற போராட்டம் இது. அந்நிய சக்திகள் ஊடுருவி இருக்கின்றன என்று.

இடிந்தகரையில் நடந்த போராட்டத்திற்கு கிறிஸ்தவ மிசனரிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இப்போது வெளிநாட்டு இஸ்லாமிய அமைப்புகள் மீது. ஆனால் இதனை மறுக்கிறார்கள் போராட்டக்காரர்கள்.

போராட்ட களத்தில் இருக்கு நஃபிஷா, “இது தன்னெழுச்சியான போராட்டம். அடுத்த தலைமுறையின் எதிர்காலத்திற்கான போராட்டம். இந்த போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதற்காக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். குற்றஞ்சாட்டுபவர்களுக்கே அது பொய்யென தெரியும்” என்கிறார்.

மேலும் அவர், “இது இஸ்லாமிய மக்களின் போராட்டம் அல்ல. அனைத்து சமூகத்தினரும் இங்கே இருக்கிறார்கள். அரசமைப்பு சட்டத்தைக் காப்பதற்காகப் போராடுகிறோம். அரசமைப்பு அனைவருக்குமானது தானே? அதனால் இந்த போராட்டமும் அனைவருக்குமானது,” என்கிறார்.

போராட்டத்தின் எதிர்காலம்

டெல்லி சட்டமன்ற தேர்தல் இன்னும் 5 நாட்களில் நடக்க இருக்கிறது. இப்படியான சூழலில் இந்த போராட்டத்தை எப்படி அரசு எதிர்கொள்ளப் போகிறது, டெல்லியில் இந்த குளிர்காலத்தின் முடிவு எப்படியானதாக இருக்கும் என தெரியவில்லை. போலீஸார் அதிகளவில் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், போராடும் மக்கள் தாங்கள் பின் வாங்குவதில்லை என்பதில் தீர்க்கமாக இருக்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from இந்தியாMore posts in இந்தியா »
More from தமிழகம்More posts in தமிழகம் »