Press "Enter" to skip to content

அரபுப் பாரம்பரிய உடை சம்பவம்: பாதிக்கப்பட்டவர் வழக்கு தொடரலாம் என்கிறார் ஒஹையோ மேயர்

image

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் தீவிரவாதக் குழுவின் விசுவாசி என்று ஐக்கிய அரபு அமீரக சுற்றுலா பயணி மீது சுமத்தப்பட்டப் போலியான குற்றச்சாட்டுக்கு எதிராக வழக்கு தொடுக்கலாம் என்று ஒஹையோ மேயர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

ஒகியோவின் அவோன் என்ற நகரில், எமிரக வர்த்தகரான அகமட் அல்-மென்ஹாலி ஒரு ஹோட்டலில் , பாரம்பரிய ஆடை அணிந்திருந்ததால் கைது செய்யப்பட்டார்.

துப்பாக்கி முனையில் அவர் மோசமாக விசாரிக்கப்பட்டதை உடலில் பொருத்தப்படும் கேமரா காட்சிகள் காட்டுகின்றன.

அதன் பிறகு, தங்களுடைய பிராந்தியத்திற்கு வெளியே எமீரகக் குடிமக்கள் பாரம்பரிய உடைகளை அணிய வேண்டாம் என்று ஐக்கிய அரபு அமீரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

அகமட் அல்-மென்ஹாலியின் தோற்றத்தை பார்த்து பீதியடைந்த அந்த ஹோட்டலின் பெண் ஊழியர் ஒருவரின் உறவினர்களிடம் இருந்து இரண்டு அவசர அழைப்புகள் வந்தன என்று அவோன் மேயர் பிரயன் ஜென்சன் கூறியுள்ளார்.

அவர் பல செல்பேசிகளை வைத்திருந்ததாகவும், ஐ.எஸ்-இக்கு விசுவாசமானவர் என்றும் காவல்துறையினரிடம் அந்த ஹோட்டல் ஊழியரின் உறவினர்கள் கூறினர்.

இத்தகைய கூற்றுகள் சொல்லப்பட்டதாக யாரும் கேட்டிருக்கவில்லை, யாரும் ஒருபோதும் சொன்னதில்லை என்று தங்கள் விசாரணையில் கண்டறிந்ததாக மேயர் ஜென்சன் கூறினார்.

“இவ்வாறு போலியான குற்றச்சாட்டை சொல்லும் ஒருவர், அந்த மனிதரை ஆபத்தில் உள்ளாக்குவது மட்டுமல்ல, தேவைப்படாத இடத்தில் எங்களது காவல்துறை அதிகாரிகளை கொண்டுவரும் நிலைமைளை ஏற்படுத்துவது எங்களுக்கு வெறுப்பை உருவாக்குகிறது. சினம் ஊட்டுகிறது” என்று அவர் தெரிவித்தார்.

மென்ஹாலி மற்றும் அமெரிக்க இஸ்லாமிய உறவுகள் கவுன்சிலின் உள்ளூர் தலைவர் ஜூலியா ஷியார்சனை மேயர் ஜென்சன் சந்தித்து பேசினார்.

“உங்களுக்கு எதிராக சில தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. அவை வருந்தத்தக்கவை” என்று மேயர் மென்ஹாலியிடம் தெரிவித்தார்.

அவரை சந்தித்த பிறகு, புனித மாதமான ரமலானின் ஒரு பகுதியாக, அவர்களோடு பகல் நோன்பை முடிக்கும் விருந்தில் பங்குகொள்ள அதிகாரிகளை முஸ்லீம் சமூகத் தலைவர்கள் அழைத்தனர்.

‘அவர்கள் கொடூரமானவர்கள்‘

காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட மென்ஹாலியை கைது செய்யும் காணொளியை வெள்ளிக்கிழமை வீவ்ஸ் (WEWS) தொலைக்காட்சி ஒளிப்பரப்பியது.

ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் ஹோட்டலின் வெளியே அவரை நெருங்குகின்றனர். அவரை பரிசோதிப்பதற்கு முன்பே அவரை தரையில் படுக்க கட்டாயப்படுத்துவதை அது காட்டியது.

வெள்ளை அங்கியையும், தலையில் அணியும் துணியையும் அந்த தலைதுணியை சரியாக பிடித்திருக்கும் வடம் போன்ற தலைப்பட்டையையும் அணிந்திருந்த மென்ஹாலி, தன்னை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியிருப்பது ஏன் என்று மீண்டும் மீண்டும் கேட்பது தெரிகிறது.

“என்னிடம் அவர்கள் கொடூரமாக நடந்து கொண்டனர். என்னுடைய முதுகில் பலமாக அழுத்தினர். பல காயங்கள் ஏற்பட்டன. அவர்களுடைய கட்டாய கைதால் இரத்தமும் சிந்தியது” என்று ‘த நேசனல்’ என்ற ஐக்கிய அரபு அமீரகத் செய்தித்தாளிடம் மென்ஹாலி தெரிவித்திருக்கிறார்.

சனிக்கிழமை ஐக்கிய அரபு அமீரக உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தது. அடுத்த நாள் அமீரகக் குடிமக்களுக்கு பயண ஆலோசனையையும் வழங்கியது. அதில் அவர்கள் இருக்கின்ற இடத்தில் முழு முகத்தையும் மறைக்கும் ஆடை அணிதங்கு தடை இருந்தால் அதனை மதிக்க அது வலியுறுத்தியது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியின்மையாலும், போர்களாலும் குறிப்பாக அகதிகள் நெருக்கடியினாலும் சில ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக வெளிநாடுகளில் கவனமாக இருக்க இந்த குறிப்பு அமீரக மக்களை வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக, ஏப்ரல் மாதத்தில் ஒரு தென்மேற்கு ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த இராக் பல்கலைக்கழக மாணவர் ஒருவர், அரேபிய மொழியில் உரையாடியதால் பாதுகாப்போடு விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

More from உலகம்More posts in உலகம் »