Press "Enter" to skip to content

‘டொனால்டு டிரம்ப் மத சுதந்திரம் குறித்து மோதியுடன் பேசுவார்’ – அமெரிக்க அதிகாரி

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து முதன்முறையாக வரும் 24ஆம் தேதி இந்தியா வருகிறார் டொனால்டு டிரம்ப்.

அப்போது இந்தியா – அமெரிக்கா நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக போகிறது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், அதிபர் டிரம்ப் இந்தியாவில் என்ன பேச உள்ளார் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார் அமெரிக்காவின் மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர்.

இந்தியா அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் ஜனநாயகம் மற்றும் மத சுதந்திரம் போன்ற விஷயங்கள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடம் டொனால்ட் டிரம்ப் பேச உள்ளதாக கூறுகிறார் அந்த அமெரிக்க அதிகாரி.

இதுதொடர்பாக பொது வெளியிலும், அதோடு தனிப்பட்ட முறையிலும் பிரதமர் மோதியுடனும் டிரம்ப் பேசுவார் என்கிறார் அந்த மூத்த அதிகாரி.

முக்கியமாக அமெரிக்க நிர்வாகம் மிக முக்கியமானதாக கருதும் மத சுதந்திரம் பற்றி டிரம்ப் பேச உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் ஜனநாயக அமைப்பு மீது அமெரிக்காவிற்கு பெரும் மரியாதை இருப்பதாகவும், இந்தியா ஜனநாயகத்துடன் செயல்பட அமெரிக்கா தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

“நரேந்திர மோதியை சந்திக்கும்போது இது குறித்து டிரம்ப் நிச்சயம் பேசுவார் என்று நினைக்கிறேன். ஜனநாயகம் மற்றும் மத சிறுபான்மையினரின் நலனை இந்தியா தொடர்ந்து காக்க வேண்டும் என இந்த உலகம் விரும்புகிறது என்பதை மோதியின் கவனத்திற்கு எடுத்து செல்வார். அனைத்து மதத்தினரையும் ஒன்றாக நடத்த வேண்டும் என்று இந்திய அரசமைப்பு கூறுகிறதுதானே,” என்று அவர் கூறுகிறார்.

சமீபத்தில் இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் விவகாரம் தொடர்பாக பேசப்படலாம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

மேலும் டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்தியா பாகிஸ்தான் இடையே இருக்கும் பதற்றங்களை குறைக்க வேண்டும் என்பதில் அமெரிக்க அதிபர் ஆர்வமாக உள்ளார். பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளும் தங்கள் வேற்றுமையை தீர்த்துக் கொள்ள ஊக்குவிப்பார்,” என்று தெரிவித்தார்.

வர்த்தக பேச்சுவார்த்தைகள்

அரசியல் மற்றும் கேந்திர விவகாரங்களில் மிக நெருங்கிய கூட்டாளிகளாக இருக்கும் இந்தியாவும் அமெரிக்காவும் சமீபத்திய ஆண்டுகளில் ஒன்றுக்கு ஒன்று அதிக வரிகளை விதித்துள்ளன.

கடந்த சில மாதங்களாக இரு நாட்டு அதிகாரிகளும் வர்த்த ஒப்பந்தத்தை செயல்படுத்த முயற்சித்து வந்தாலும், இதுகுறித்து இன்னும் எந்த முடிவும் எட்டப்பட்டதாக தெரியவில்லை.

இந்நிலையில், இந்தியாவின் பெரும் தொழில்களாக விளங்கும் கோழிப்பண்ணை மற்றும் பால் சந்தையில் நுழைய அமெரிக்கா அனுமதி கேட்டு வருகிறது. அதே வேளையில், அமெரிக்காவில் இருந்து வந்து இங்கு விற்கப்படும் மருத்துவ உபகரணங்களுக்கு இந்தியா விலை கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

இதே நேரத்தில் இந்தியா அதன் மருந்து பொருட்கள் மற்றும் விவசாய பொருட்களை அமெரிக்க சந்தையில் இறக்க வேண்டும் என்று நினைக்கிறது.

அமெரிக்கா – இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயும் பல வேறுபாடுகள் இருப்பதை இவை காண்பிக்கின்றன. சீனாவின் பொருளாதாரம் இந்தியாவைவிட ஐந்து மடங்கு பெரியது என்பதால், சீனாவை வைத்து அமெரிக்கா தங்களை எடைபோடக் கூடாது என்கிறது இந்தியா.

Inside Donald Trump’s car ‘The beast’ | Trump visit to India

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »