Press "Enter" to skip to content

குவேடன் பெயில்ஸ்: பழங்குடி ரக்பி அணிக்கு தலைமை தாங்கிய ஆஸ்திரேலிய சிறுவன் மற்றும் பிற செய்திகள்

ஆஸ்திரேலியாவின் அபோரிஜினல் இனத்தை சேர்ந்த குவேடன் பெயில்ஸ், தான் கிண்டல் செய்யப்படுவதால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அழுத வீடியோவை அவரது தாய் பதிவேற்றி இருந்தார்.

சித்திரக் குள்ளராக இருக்கும் அவர் தன் உருவத்தால் கிண்டலுக்கு உள்ளாவதாகவும், வாழப்பிடிக்கவில்லை என்றும் அந்த காணொளியில் கூறி அழுது இருந்தார்.

அதே சிறுவன், பழங்குடிகள் பங்கேற்ற ரக்பி போட்டிகளில் `Indigenous All Stars` அணிக்கு தலைமை தாங்கினார்.

ஒருநாள் மிகப் பெரிய ரக்பி வீரராக வேண்டும் என்பது குவேடனின் வாழ்நாள் கனவு என்று அவரது தாய் யாரகா பெயில்ஸ் கூறினார்.

ஆஸ்திரேலியாவின் தேசிய பழங்குடிகள் ரக்பி அணி, குவேடனை தங்கள் அணிக்கு தலைமை தாங்க அழைப்பு விடுத்திருந்தது.

அந்த அணியின் ரபிட்டோ லாட்ரல் மிட்செல் குவேடனுக்கு அழைப்பு விடுத்து வெளியிட்டிருந்த காணொளியில், “உனக்கு நாங்கள் இருக்கிறோம்… நீ நலமாக இருக்கிறாயா என்று எங்களுக்கு தெரிய வேண்டும். இந்த வார இறுதியில் நாங்கள் விளையாட உள்ள ரக்பி போட்டிக்கு நீ தலைமை தாங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறியிருந்தார்.

அழைப்பை ஏற்று மைதானத்திற்கு வந்த குவேடன், அங்கு மக்களின் ஆரவாரத்துடன், அணியின் கேப்டன் ஜோயல் தாம்சனின் கையை பிடித்தவாறு வீரர்களை வழிநடத்தி சென்றார்.

பின்னர் ரக்பி பந்தை கையில் பிடித்தவாறு அணி வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட குவேடன், பின்னர் பந்தை நடுவரிடம் கொடுத்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த குவேடனின் தாய் யாரகா, “அவன் வாழ்வின் மோசமான நாளை தொடர்ந்து, அவன் வாழ்க்கையின் சிறந்த நாளுக்கு சென்றுள்ளான்” என்று தெரிவித்தார்.

விரிவாக படிக்க: உலகை உலுக்கிய ஆதிக்குடி சிறுவன், கண்ணீர் துடைக்க கரம் கோர்த்த மனிதநேயர்கள்

சீனா வீகர் முஸ்லிம்கள்: தாடி வளர்த்தால், பர்தா அணிந்தால் கைதா?

சீனாவில் கட்டுப்பாடு நிறைந்த முகாம்களில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை கையாள கடைப்பிடிக்கப்படும் கொள்கைகள் தொடர்பான ஆவணங்களை பிபிசி பார்வையிட்டுள்ளது.

அதில், முக்காடு அணிவது, நீளமாக தாடி வைப்பது போன்ற காரணங்களுக்காக, வீகர் இனக்குழுவினரை தடுத்து வைக்க பரிசீலிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

அங்குள்ள ஷின்ஜியாங் மாகாணத்தை சேர்ந்த மக்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை, அந்த ஆதாரங்கள் தெளிவாக வெளிப்படுத்துவதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

விரிவாக படிக்க: சீனா வீகர் முஸ்லிம்கள்: தாடி வளர்த்தால், பர்தா அணிந்தால் கைதா? – நடப்பது என்ன?

டொனால்ட் டிரம்ப் இந்திய வருகை: கங்கை நீரால் சுத்தம் செய்யப்படும் யமுனை நதி

உலக புகழ்பெற்ற தாஜ்மஹாலின் அழகின் அடிப்படை, சிறந்த கட்டடக்கலை மற்றும் வெண் பளிங்குக் கற்களும்தான். அதிலும், தாஜ்மஹால் அமைந்திருக்கும் யமுனை ஆறும் இந்த காதல் சின்னத்தின் அழகுக்கு மெருகூட்டுகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

அந்த யமுனையின் நீர் இப்போது மிகவும் அழுக்காக இருக்கிறது.

ஆற்றின் அருகே யாரும் நிற்கவே முடியாது, ஏனென்றால் யமுனை துர்நாற்றம் வீசும் அசுத்தமான நதியாகிவிட்டது.

ஆனால் இந்த கசப்பான உண்மையை சொற்ப காலத்திற்காக மாற்றியமைக்க மாநிலத்தில் ஆளும் யோகி ஆதித்யநாத் அரசாங்கமும் உத்தர பிரதேசத்தின் உள்ளூர் நிர்வாகமும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன.

விரிவாக படிக்க: டிரம்ப் இந்திய வருகை: கங்கை நீரால் சுத்தம் செய்யப்படும் யமுனை நதி

உத்தர பிரதேசம்: “3000 டன் தங்க சுரங்கம் இல்லை”

உத்தர பிரதேச சோனபத்ர மாவட்டத்தில் 3000 டன்கள் தங்கம் உள்ள சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது என செய்திகள் பரவிய நிலையில், அதனை மறுத்துள்ளது இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம்.

உத்தர பிரதேசத்தின் சோன்பத்ர மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான டன் தங்கம் நிலத்தில் புதைந்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் கனிம வளத்துறை இதை உறுதி செய்ததுடன், விரைவில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என அறிவித்தது.

இப்படியான சூழலில், இதனை மறுத்துள்ளது இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம்

விரிவாக படிக்க: உத்தர பிரதேசம்: “3000 டன் தங்கம் இல்லை” – புவியியல் ஆய்வு நிறுவனம் மறுப்பு

“நரேந்திர மோதி பல்துறை மேதை”: உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்

“இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பல்துறை வித்தகர். ஆகச் சிறந்த அறிவாளி. உலகளவில் சிந்திக்கிறார், அதை நம் மண்ணுக்கு ஏற்றப்படி செயல்படுத்துகிறார்” என உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா புகழ்ந்துள்ளார்.

டெல்லியில் சர்வதேச நீதித்துறை மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நன்றியுரை ஆற்றிய அருண் மிஸ்ரா, பிரதமரை மோதியையும், அவரது செயல்பாடுகளையும் புகழ்ந்தார்.

விரிவாக படிக்க: “நரேந்திர மோதி ஒரு பல்துறை மேதை”: உச்ச நீதிமன்ற நீதிபதி புகழாரம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »