Press "Enter" to skip to content

மகாதீர் பதவி விலகினார்: மலேசியாவின் அடுத்த பிரதமர் யார்? – விரிவான தகவல்கள்

கடந்த இரு தினங்களாக மலேசிய அரசியல் களத்தில் நிலவி வரும் பரபரப்பு தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. பிரதமர் பதவியில் இருந்து தாம் விலகுவதாக மகாதீர் மொஹம்மத் திடீரென அறிவித்துள்ளார்.

அவர் தமது ராஜினாமா கடிதத்தை மலேசிய மாமன்னருக்கு அனுப்பி உள்ளதாக பிரதமர் அலுவலகம் இன்று மதியம் தெரிவித்தது. மலேசிய நேரப்படி மதியம் 1 மணியளவில் அளிக்கப்பட்ட ராஜினாமா கடிதத்தைப் பெற்றுக் கொண்ட மாமன்னர், அதுகுறித்து என்ன முடிவெடுத்துள்ளார் என்பதை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

நாட்டின் அடுத்த பிரதமர் எனக் கருதப்படும் அன்வார் இப்ராகிம் தரப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகாதீர் அதிருப்தியில் இருப்பதாக அண்மையில் தகவல் பரவியது.

இதனால் அன்வாரைப் புறக்கணித்து, எதிர்க்கட்சிகளுடன் இணைந்து மகாதீர் புதிய ஆட்சியை அமைப்பார் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து மலேசிய அரசியல் களத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அன்வார் இப்ராகிம் தலைமையிலான பிகேஆர் கட்சியின் துணைத் தலைவரும் மத்திய அமைச்சருமான அஸ்மின் அலி தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மகாதீருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் சேர்த்து மகாதீருக்கு நாடாளுமன்றத்தில் 132 எம்பிக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறப்பட்டது.

எனவே அன்வாரைப் புறக்கணித்து புதிய ஆட்சியை அமைக்க பிரதமர் மகாதீர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஆருடங்கள் நிலவின.

இந்நிலையில், நேற்று இரவு வரை மவுனம் காத்த பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், தன் வீட்டில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கூட்டாளிகளே தமக்கு துரோகம் இழைத்துவிட்டதாக வேதனை தெரிவித்தார். மேலும் புதிய ஆட்சி உடனடியாக அமையக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.

மகாதீரை சந்தித்துப் பேசிய அன்வார்

இந்நிலையில் திடீர்த் திருப்பமாக நேற்று காலை அன்வார் இப்ராகிம், தமது மனைவியும் துணைப் பிரதமருமான வான் அஸிஸா, மற்றும் நிதியமைச்சர் குவான் எங், பாதுகாப்பு அமைச்சர் மாட் சாபு ஆகியோருடன் சென்று பிரதமர் மகாதீரை சந்தித்துப் பேசினார்.

மகாதீரின் கோலாலம்பூர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், பிரதமருடனான சந்திப்பு திருப்தி அளித்ததாகக் குறிப்பிட்டார். ஆனால் எந்த வகையில் அவர் திருப்தி அடைந்தார் என்பதை விவரிக்கவில்லை.

இந்தச் சந்திப்பு உணர்ச்சிகரமாக இருந்ததாக நிதியமைச்சர் குவாங் எங் கூறினார்.

வேறு எந்த கூடுதல் விவரமும் அளிக்க இயலாது என்று தெரிவித்த அவர், அடுத்து மாமன்னரை சந்திக்க இருப்பதை மட்டும் உறுதி செய்தார்.

அடுத்து என்ன நடக்கும்? அடுத்த பிரதமர் யார்?

பிரதமர் பதவியில் இருந்து மகாதீர் விலகியுள்ளதை அடுத்த, மலேசியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மகாதீர் விலகியதையடுத்து, அன்வார் இப்ராகிம் தலைமையில் ஆட்சியமைக்க வழியுண்டா? என்று அவர் பிகேஆர் கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றன.

மகாதீர் சார்ந்துள்ள பெர்சாத்து கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 26 எம்பிக்கள் உள்ளனர். பிகேஆர் கட்சியில் இருந்து 10 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களின் ஆதரவை இழந்துவிட்டதால், இயல்பாகவே அன்வார் தலைமையிலான நடப்பு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டது.

எனினும் வேறு ஏதேனும் திருப்பங்கள் நிகழுமா? என்பது தெரியவில்லை. மலேசிய மக்கள் தங்களுடைய அடுத்த பிரதமர் யார் என்பதை அறிய காத்திருக்கின்றனர்.

ஒருவேளை நடப்பு அரசியல் குழப்பங்களை மனதிற்கொண்டு மலேசிய மாமன்னர் மீண்டும் பொதுத்தேர்தலை நடத்த உத்தரவிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »