Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் பொது இடங்களுக்கு வருவதை தவிர்க்கிறாரா ?

பிரதிக் ஜாக்கர்
பிபிசி மானிட்டரிங்

தென் கொரியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டின் அண்டை நாடான வட கொரியா கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அதனை எப்படி எதிர்கொள்ளும் என்பது ஒரு கேள்வியாகியிருக்கிறது.

வட கொரியா தொற்று நோய்களால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடாக கருதப்படுகிறது, மேலும் அதன் சுகாதார அமைப்பு அவற்றைச் சமாளிக்ககூடிய நிலையிலும் இல்லை.

இதுவரை, கோவிட் -19 பாதிப்பு வட கொரியாவில் இல்லை என்று அந்நாடு கூறுகிறது – ஆனால் இது உண்மையாக இருக்க முடியுமா என்று பல வல்லுநர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஏற்கனவே ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மோசமான உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள வட கொரிய மக்கள், இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் பேரழிவை எதிர்கொள்ள நேரலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

வைரஸ் பாதிப்பு குறித்து வட கொரியர்களுக்கு விழிப்புணர்வு உள்ளதா ?

வழக்கத்திற்கு மாறாக வைரஸ் பரவுவதைத் தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வட கொரியா வலியுறுத்த துவங்கி இருக்கிறது. நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காக புரட்சிகர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வட கொரியாவின் அரசு ஊடகமும் அதிகாரிகளும், அந்நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏதும் இல்லை என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும் அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

கொரோனா வைரஸை தடுக்க எடுக்கப்பட்ட “அதி தீவிர” நடவடிக்கைகள், கடைபிடிக்க வேண்டிய சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் அதன் அவசியம் குறித்த தகவல்களை தினமும் அந்நாட்டு அதிகாரிகள் வெளியிடுகின்றனர்.

சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மருத்துவ ஊழியர்களின் புகைப்படங்களையும் வட கொரியா வெளியிட்டுள்ளது.

வட கொரியா நாட்டு தலைவர் கிம் ஜே ரியோங் முகமூடி அணிந்தபடியே “தொற்றுநோய்க்கு எதிரான” நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினார். வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சீன ஊடகங்கள் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன.

வடகொரியாவின் அரசு ஊடக தொலைக்காட்சி ஒன்று, கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் மருந்துகள் குறித்து நிகழ்ச்சி ஒளிபரப்புகிறது. தடுப்பு மருந்துகள் குறித்து அதிகாரபூர்வமாக இதுவரை எந்த சுகாதார அமைப்பும் கருத்து வெளியிடவில்லை. இந்நிலையில் டெய்சி பூ வகையை சேர்ந்த பர்டாக் என்கிற பூவில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து கொரோனா வைரஸ் நோயை குணப்படுத்தும் என்று வட கொரிய ஊடகங்கள் விளம்பரம் வெளியிடுகின்றன.

வட கொரியாவின் சுகாதார அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது ?

வட கொரியா தனது பொது சுகாதார அமைப்பு உலகத் தரம் வாய்ந்தது என்று கூறுகிறது. ஆனால் சில மருத்துவமனைகளில் மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதி கூட இல்லை என்று சர்வதேச அளவில் சில நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் வட கொரியாவின் கிராமபுறங்களில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்படாமலே போய்விடும் என்றும் கூறுகின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை பரிசோதிக்கும் நடைமுறைகூட வட கொரியாவின் சில பகுதிகளில் உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.

மேலும் அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளால் தேவையான மருத்துவ உபகரணங்களை பெறுவதற்கான சூழலும் தற்போது இல்லை.

தரம் வாய்ந்த மருத்துவ உபகரணங்களின் தேவை அதிகமாக உள்ளது என்று கடந்த ஆண்டு கிம் ஜாங் உன் தெரிவித்திருந்தார்.

இதுவரை மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன ?

கொரோனா வைரஸ் பாதிப்பை ”தேசிய அவசர நிலையாக” வட கொரியா அறிவித்து, பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

சீனாவுடனான எல்லையை அந்நாடு முழுமையாக மூடியது. ரஷ்யா மற்றும் சீனாவில் இருந்து வரும் விமானங்கள் மற்றும் ரயில்வே சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வட கொரியாவை கடந்து செல்லும் அனைத்து சரக்கு பொருட்களும் , தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு 10 நாட்களுக்கு தனிமையை படுத்தப்பட்டு பிறகு தான் அனுப்பப்படுகிறது. இந்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சரக்குகளும் இவ்வாறு கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

வட கொரிய அரசாங்கம் சீனாவுக்கு மருத்துவப் பொருட்களை அனுப்பியதோடு மற்றும் தேவையான சில உதவிகளையும் செய்துள்ளது.

வைரஸ் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

வட கொரியா சீனாவுடனான வர்த்தகத்தை பெரிதும் நம்பியுள்ளது – மொத்தமாக 90% வர்த்தகம் – எனவே எல்லையை மூடியது குறுகிய காலத்திற்கு பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும்.

கிம் ஜாங்-உன் தலைமையின் கீழ் வளர்ந்து வரும் தனியார் சந்தை போலவே, வட கொரியாவின் கடத்தல்காரர்கள் மற்றும் எல்லையில் செயல்படும் வர்த்தகர்களும் கடுமையான தாக்கத்தை உணர்வார்கள்.

வைரஸ் குறித்த அச்சங்களால் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் பொது இடங்களுக்கு வருவதை குறைத்துள்ளார் என்றும் இராணுவ அணிவகுப்புகளை ரத்து செய்துள்ளார் என்றும் சில செய்தி நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

வட கொரியா கடந்த காலங்களில் தொற்று நோயை எவ்வாறு எதிர்கொண்டது ?

2014ல் எபோலா வைரஸ் மற்றும் 2003ல் சார்ஸ் உள்ளிட்ட தொற்றுகளை வட கொரியா கட்டுப்படுத்தியதை விட கொரோனா வைரஸ் பாதிப்பை கடுமையாக கட்டுப்படுத்துகிறது. 2014ம் ஆண்டு எபோலா காய்ச்சல் பரவுவது குறித்து மிகவும் தாமதமாக தெரியவந்தது. இதையடுத்து, வட கொரியர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு முழுமையாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

மேலும் வெளியூர் பயணிகளை 21 நாள் மருத்துவ கண்காணிப்பில் வைத்து பரிசோதித்த பிறகே வெளியில் செல்ல அனுமதித்தனர்.

ஆனால் சார்ஸ் வைரஸ் பாதிப்பின்போது எல்லை முழுமையாக மூடப்படவில்லை.

கடந்த கால தொற்றுநோய்களுடன் ஒப்பிடும்போது வட கொரியா கொரோனா வைரஸை கையாள்வது வழக்கத்திற்கு மாறாக கடுமையாகவே உள்ளது தெரிகிறது என என் கே செய்தி முகமையின் மூத்த ஆய்வாளர் மின்யோங் லீ கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »