Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): சிக்கி தவிக்கும் இத்தாலி; ஜப்பானிலிருந்து திரும்பிய இந்தியர்கள்

கொரோனா வைரஸ் தாக்குதல் பாதிப்பு மற்றும் பரவலை கட்டுப்படுத்த சர்வதேச ரீதியினான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதற்கு மத்தியில், இத்தாலியில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400-ஐ எட்டியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக முக்கிய கவனத்தை பெற்றுள்ள இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

இத்தாலியை தொடர்ந்து தற்போது பல ஐரோப்பிய நாடுகளும் தங்கள் நாட்டில் புதிதாக ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து அறிவித்துள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கிய சீனாவை தாண்டி மற்ற நாடுகளில் முதல்முறையாக இந்த வைரஸ் தாக்குதல் மிக வேகமாக பரவிவருவதாக புதன்கிழமையன்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பரில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட 40 நாடுகளில் 80,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் இதில் பெரும்பான்மையான பாதிப்பு சீனாவில் தான்.

கோவிட்-19 என்றழைக்கப்படும் நுரையீரல் பாதிப்பு தொடர்பான இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை சீனாவில் மட்டும் 2,750க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. மேலும் பல பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இத்தாலியில் இந்த வைரஸ் தாக்குதலின் மையப்புள்ளியாக உள்ள ஏறக்குறைய 55 ஆயிரம் பேர் வாழும் 11 நகரங்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இத்தாலியில் என்ன நிலவரம்?

இதுவரை இத்தாலியில் கிட்டத்தட்ட 400 பேர் அளவுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற அறிவிப்பை அடுத்து, ஒரே நாளில் (புதன்கிழமை) பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 80க்கும் மேலாக அதிகரித்துள்ளது.

தொழில் வளம் அதிகம் உள்ள இத்தாலியின் வடக்கு பகுதிகளில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் மோசமாக உள்ளது.

மிலன் மற்றும் வெனிஸ் அருகே உள்ளே வெனிட்டா ஆகிய பகுதிகளில் இந்த வைரஸ் பாதிப்பு கடுமையாக உள்ளது. இதுவரை இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க தேவையான நடவடிக்கைளை அந்நாட்டு அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. நாட்டு மக்களுக்கும் இது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கைகளை அரசு அளித்து வருகிறது.

மற்ற நாடுகளின் நிலவரம் என்ன?

கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப் புள்ளியாக விளங்கும் வுஹான் நகரத்திற்கு 15 டன்கள் மருத்துவ நிவாரண பொருட்களை இந்திய அரசு வழங்கியுள்ளது.

இந்த உதவிப் பொருட்களை இந்தியாவிலிருந்து கொண்டுசென்ற இந்திய விமானப் படை விமானம், அங்கிருந்து டெல்லி திரும்பியபோது, அந்நகரத்தில் வசித்து வந்த இந்தியாவை சேர்ந்த 76 பேர் மற்றும் வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட ஏழு நாடுகளை இருந்த 36 பேரை அழைத்து வந்துள்ளது. தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, தனிமைப்படுத்தப்பட்ட பின் அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

ஜப்பான் துறைமுகம் ஒன்றில் கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் சிக்குண்டிருந்த இந்தியாவை சேர்ந்த 119 பேர் மற்றும் இலங்கை, தென்னப்பிரிக்கா, நேபாளம், பெரு உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஐந்து பேருடன் டோக்கியோ நகரத்திலிருந்து கிளம்பிய ஏர் இந்திய விமானம் டெல்லி வந்தடைந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஒரு மாதகாலத்தில் இல்லாத அளவுக்கு சீனாவில் மிகவும் குறைவாக நேற்று கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29ஆக குறைந்துள்ளதாக ஏ.எஃப்.பி. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவிற்கு வெளியே கொரோனா வைரஸ் தாக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக விளங்கும் தென் கொரியாவில், புதிதாக 334 பேருக்கு இந்த நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தென் கொரியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,595 பேராக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பணியை நாட்டின் துணை அதிபர் மைக் பென்ஸ் நிர்வகிப்பார் என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக விளங்கும் இரானில் இதுவரை நோய்த்தொற்றால் 139 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 19 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 39 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாக அந்நாட்டை சேர்ந்த பார்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »