Press "Enter" to skip to content

அமெரிக்கா – தாலிபன் இடையே அமைதி ஒப்பந்தம் – முடிவுக்கு வருகிறதா ஆஃப்கன் போர்?

ஆப்கானிஸ்தானில் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவந்து அந்நாட்டில் அமைதியை நிலைநாட்ட வகை செய்யும் ஒப்பந்தத்தில் அமெரிக்கா மற்றும் தாலிபன் அமைப்பினர் கையெழுத்திட்டுள்ளனர்.

தற்போது எட்டப்பட்டுள்ள உடன்பாட்டை தாலிபன்கள் நடைமுறைப்படுத்தினால் ஆப்கானிஸ்தானில் உள்ள தனது நாட்டின் ராணுவம் மட்டுமின்றி நேட்டோ படைகளும் அடுத்த 14 மாதங்களில் வெளியேறும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன.

இதுதொடர்பாக கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்ற நிகழ்வில், அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் பாம்பேயோ மற்றும் தாலிபன் இயக்க தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும், தாலிபன்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

தோகாவில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, அல்-கய்தா அல்லது வேறு எந்த தீவிரவாதக் குழுவைவும் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் செயல்பட அனுமதிக்கக் கூடாது என்ற நிபந்தனையை தாலிபன் தரப்பு ஒப்புக் கொண்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அல்-கய்தா தீவிரவாத இயக்கம் கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலுள்ள இரட்டை கோபுரத்தை தாக்கிய உடனேயே ஆப்கானிஸ்தான் முழுவதையும் அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

அப்போது முதல் இதுவரையிலான காலகட்டம் வரை ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் போரில், 2,400க்கும் அதிகமான அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இன்னுமும்கூட சுமார் 12,000 அமெரிக்க ராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

ஒப்பந்தத்தில் இருப்பது என்ன?

கையெழுத்தான முதல் 135 நாட்களில் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் படையினரின் எண்ணிக்கையை அமெரிக்கா 8,600 ஆக குறைத்துக் கொள்ளும்.

அமெரிக்காவின் கூட்டு நாடுகளும் அமெரிக்கா குறைக்கும் விகிதத்திலேயே தங்கள் படைகளையும் குறைக்கும்.

மார்ச் 10ஆம் தேதிக்குள் தாலிபன் வசம் உள்ள 1,000 ஆஃப்கன் பாதுகாப்பு படையினர் விடுவிக்கப்படுவார்கள். தாங்கள் சிறை வைத்துள்ள 5,000 தாலிபன் அமைப்பினரை ஆப்கானிஸ்தான் அரசு விடுவிக்கும்.

தாலிபன் அமைப்புக்கு தாங்கள் விதித்துள்ள தடைகளை அமெரிக்கா நீக்குவதுடன், ஐ.நா உடன் இணைந்து தாலிபன் மீது உள்ள பிற (நாடுகள் / அமைப்புகளின்) தடைகளையும் நீக்க முற்படும்.

9/11 இரட்டை கோபுர தாக்குதல்

2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று நடந்த இரட்டை கோபுர தாக்குதல் நடந்தது. அத்தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஒசாமா பின்லேடனின் அல்-கய்தா அமைப்புக்கு ஆதரவும், புகலிடமும் அளிப்பதாக அப்போது ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்துகொண்டிருந்த தாலிபனுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் படைகள் ஆப்கானிஸ்தான் சென்றன.

ஆப்கானிஸ்தானில் சுமார் 70% பகுதிகளில் தாலிபன் அமைப்பின் செயல்பாடு இருப்பதை பிபிசி உறுதி செய்துள்ளது.

2001 படையெடுப்பு முதல் சர்வதேச கூட்டுப் படைகளின் சுமார் 3,500 பேர் அங்கு கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா படையெடுப்பு நடத்தியபின் சர்வதேச நாடுகளின் ராணுவ வீரர்கள் மட்டும் சுமார் 3,500 பேர் அங்கு இறந்துள்ளனர். அவர்களில் 2,400க்கும் அதிகமானவர்கள் அமெரிக்கர்கள்.

1996 வரை 2001 வரை நடந்த தாலிபன் ஆட்சியில் மதச் சட்டங்கள் கடுமையாக அமலானதுடன், பெண்கள் மிகவும் மோசமாக நடத்தப்பட்டனர்.

2019 பிப்ரவரியில் வெளியான ஐ.நா தரவுகளின்படி 2001 முதல் 32,000க்கும் மேலான குடிமக்கள் இந்தப் போரால் கொல்லப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »