Press "Enter" to skip to content

மலேசியா: “எனக்குதான் பெரும்பான்மை உள்ளது”: மகாதீர் – தொடரும் குழப்பம், அடுத்து என்ன?

மலேசியாவின் எட்டாவது பிரதமராக மொகிதின் யாசின் பதவியேற்க உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் தங்களுக்குத் தான் பெரும்பான்மை உள்ளது என மகாதீர், அன்வார் தரப்பு திட்டவட்டமாக அறிவித்திருப்பது மலேசியாவில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு 114 எம்பிக்களின் ஆதரவு இருப்பதாக அதன் தலைமை அறிவித்துள்ளது. எனவே தங்கள் கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துவிடவில்லை என்று பக்காத்தான் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சனிக்கிழமை நள்ளிரவு வரை பக்காத்தான் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கோலாலம்பூரில் தங்குவிடுதி ஒன்றில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். தங்களுக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை நிரூபிப்பதற்குத் தேவைப்படும் ஆவணங்களை மாமன்னரிடம் ஒப்படைக்க இருப்பதாக அவர்கள் கூறினர்.

கடந்த ஒரு வாரமாக மலேசிய அரசியல் களத்தில் நிலவி வந்த குழப்பங்களுக்கு முடிவுகட்டும் விதமாக நாட்டின் 8ஆவது பிரதமராக பெர்சாத்து கட்சித் தலைவரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான மொகிதின் யாசினை நியமித்துள்ளார் மலேசிய மாமன்னர்.

இதனால் மகாதீர் மற்றும் அன்வார் தரப்பு ஏமாற்றம் அடைந்துள்ளது. எனினும் பெரும்பான்மை உறுப்பினர்கள் மகாதீரை ஆதரிப்பது தங்களுக்கு உறுதியாகத் தெரியும் என்பதால் முயற்சிகளை கைவிடவில்லை என அன்வார் தரப்பு கூறுகிறது.

114 எம்பிக்களின் ஆதரவு உள்ளது: பக்காத்தான் கூட்டணி அறிவிப்பு

மொத்தம் 114 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு இருப்பதாக அன்வார் தலைமையிலான பிகேஆர் கட்சியின் தொடர்புக் குழு இயக்குநரும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான பாஹ்மி பாட்சில் அறிவித்துள்ளார்.

மகாதீருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக 114 எம்பிக்களும் சத்யபிரமாணத்தை வழங்கியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

மொகிதின் யாசின் சார்ந்துள்ள பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த 5 எம்பிக்கள் மகாதீரை ஆதரிக்கின்றனர் என்றும், அவர்களும் சத்யபிரமாணம் வழங்கியுள்ளனர் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மேலும் அன்வாருக்கு எதிராக பத்து எம்பிக்களுடன் பிகேஆர் கட்சியில் இருந்து வெளியேறிய அஸ்மின் அலி தரப்பில் இருந்து தற்போது ஒவ்வொருவராக விலகி வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ள பாஹ்மி பாட்சில், அவர்களில் பாரு பியானும் ஒருவர் என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பாரு பியான் மகாதீர் பிரதமராக ஆதரவு தெரிவித்து சத்தியபிரமாணத்தில் கையெழுத்திடும் புகைப்படம் ஒன்றையும் பாஹ்மி பாட்சில் சனிக்கிழமை இரவு வெளியிட்டார்.

114 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு ஒன்று கூடுகிறார்கள்

மலேசியாவின் எட்டாவது பிரதமராக மொகிதின் யாசின் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் பதவியேற்க உள்ள நிலையில், இடைக்கால பிரதமர் மகாதீர், தனக்கு ஆதரவாக உள்ள எம்பிக்களின் பட்டியலை வெளியிட்டது பரபரப்பை அதிகப்படுத்தி உள்ளது.

சனிக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்தார் மகாதீர். அப்போது தமக்கு ஆதரவு தெரிவித்துள்ள 114 எம்பிக்களின் பட்டியலை அவர் வெளியிட்டார்.

இதையடுத்து தமக்குள்ள ஆதரவு குறித்து மாமன்னரிடம் தெரிவிக்க இருப்பதாகவும், இது தொடர்பாக கடிதம் ஒன்றை தயார் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமது இந்தக் கடிதத்தையும் விளக்கத்தையும் மாமன்னர் ஏற்றுக் கொள்வார் என்று மகாதீர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை காலை மகாதீரை ஆதரிக்கும் எம்பிக்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூட உள்ளனர். இதன் மூலம் தமக்குள்ள ஆதரவை மகாதீர் வெளிப்படுத்துவார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே வேளையில் மாமன்னரின் முடிவு தெரியும் வரை காத்திருக்கப் போவதாகவும், ஞாயிற்றுக்கிழமை மொகிதின் யாசின் பதவியேற்பு விழாவுக்கு தடை கோரப் போவதில்லை என்றும் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் கூறியுள்ளனர்.

மக்களின் வீதிப் போராட்டம் தொடங்கியது

இந்நிலையில் எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி கொல்லைப்புறம் வழியாக புதிய அரசை அமைப்பதை ஏற்க முடியாது என்று பொது மக்களில் ஒரு பிரிவினர் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கோலாலம்பூரில் உள்ள ‘சுதந்திர சதுக்கம்’ எனப்படும் ‘மெர்டேக்கா’ திடலில் சனிக்கிழமை இரவு சிலர் திடீரென திரண்டனர்.

அப்போது “பின்கதவு அரசாங்கம்” அமைவதை தாங்கள் விரும்புவதில்லை என்று அவர் குறிப்பிட்டனர்.

சமூக ஊடகங்களின் வழி விடுக்கப்பட்ட அழைப்புகளைத் தொடர்ந்து பல இளைய வயது ஆர்ப்பாட்டக்காரர்கள் டத்தாரான் மெர்டேக்கா திடலில் திரண்டனர். புதிய அரசாங்கம் அமைவதற்கு முன்பே அவர்கள் அதற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி பின்னர் அழைத்துச் சென்றனர்.

நள்ளிரவு வரை ஆலோசனையில் ஈடுபட்ட பக்காத்தான் கூட்டணித் தலைவர்கள்

இதற்கிடையே புதிய பிரதமரை நியமித்து மாமன்னர் அறிவிப்பு வெளியிட்ட சில மணிநேரங்களில் மொகிதின் யாசினுக்கு உள்ள ஆதரவு குறித்து பக்காத்தான் கூட்டணித் தலைவர்கள் சந்தேகம் எழுப்பினர்.

இதையடுத்து கோலாலம்பூரில் உள்ள தங்குவிடுதியில் அவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இரவு எட்டு மணிக்கு மேல் அன்வார் இப்ராகிம், லிம் குவான் எங், மாட் சாபு உள்ளிட்ட தலைவர்கள் ஒவ்வொருவராக அந்த ஆலோசனையில் அடுத்தடுத்து பங்கேற்றனர்.

இச்சமயம் செய்தியாளர்களிடம் பேசிய அமானா கட்சியின் துணைத் தலைவர் சலாஹுதீன் அயுப், பக்காத்தான் கூட்டணிக்கு குறைந்தபட்ச பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் அளவுக்கு எம்பிக்களின் ஆதரவு உள்ளது என்றார். இது தொடர்பான ஆவணங்களை மாமன்னரிடம் ஒப்படைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார்.

“சனிக்கிழமை இரவு இது தொடர்பாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும். குறிப்பாக பக்காத்தான் கூட்டணிக்கு எத்தனை எம்பிக்களின் ஆதரவு உள்ளது என்பதை உறுதி செய்வோம். ஆதரவு எம்பிக்களின் எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கும்,” என்றார் சலாஹுதீன் அயுப்.

“சொந்தக் கட்சியினரே மொகிதின் யாசினை ஆதரிக்கவில்லை”

இதற்கிடையே, அடுத்த பிரதமராக பொறுப்பேற்க உள்ள மொகிதின் யாசினுக்கு அவரது சொந்த கட்சி எம்பிக்களின் ஆதரவே முழுமையாக கிடைக்கவில்லை என முக்ரிஸ் மகாதீர் தெரிவித்துள்ளார்.

இவர் மொகிதின் தலைமையிலான பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவரும், மகாதீரின் மகனும் ஆவார். செய்தியாளர்களிடம் பேசிய முக்ரிஸ், பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த மகாதீர் உள்ளிட்ட ஆறு பேர் மொகிதின் யாசினுக்கு ஆதரவு அளிக்கவில்லை எனச் சுட்டிக்காட்டினார். மகாதீருக்கு ஆதரவாக உள்ள பெர்சாத்து கட்சியின் ஐந்து எம்பிக்களின் பெயரையும் அவர் வெளியிட்டார்.

மேலும் சில பெர்சாத்து கட்சி எம்பிக்கள் மகாதீரை ஆதரிக்க வாய்ப்பு உள்ளதாகக் குறிப்பிட்ட முக்ரிஸ், அது குறித்தும் விரைவில் தகவல் வெளியிடப்படும் என்றார்.

இதற்கிடையே, பெர்சாத்து கட்சியில் இருந்து மகாதீர் விலகிவிட்டார் என்றும், தலைவர் பதவியில் இருந்து அவர் விலகியது கட்சி ஏற்றுக் கொண்டுவிட்டது என்றும் மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார். ஆனால் மகாதீர் தான் பெர்சாத்து தலைவராக நீடிக்கிறார் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரவு முழுவதும் ஆதரவு திரட்டிய பக்காத்தான் பிரமுகர்கள்

இதற்கிடையே மகாதீருக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதை நிரூபிக்க தேவையான ஆவணங்களைத் தயார் செய்வதில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் சனிக்கிழமை இரவு முழுவதும் மும்முரமாக இருந்தனர்.

மேலும் மகாதீருக்கு ஆதரவாக இருக்கும் எம்பிக்கள் சத்தியபிரமாணத்தில் கையெழுத்திடுவது, கூட்டணித் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கும் காட்சிகள் உள்ளிட்டவற்றை சமூக வலைத்தளங்களில் நேரடியாக ஒளிபரப்பும் செய்தனர்.

மாமன்னரை நேரில் சந்திக்க நேரம் கேட்கப்படும் என்றும், அப்போது மகாதீருக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்கத் தேவைப்படும் ஆவணங்களை ஒப்படைப்போம் என்றும் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும், கோலசிலாங்கூர் எம்பியுமான சுல்கிஃப்ளி அகமட் தெரிவித்தார்.

“எந்தக் கட்டத்திலும் விரக்தி அடைந்துவிடக் கூடாது. நாங்கள் தொடர்ந்து உண்மைக்காகப் போராடுவோம்,” என்றார் சுல்கிஃப்ளி.

ஞாயிற்றுக்கிழமை காலை மொகிதின் யாசின் பதவியேற்பு நிகழ்வுக்கு முன்பே பக்காத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவர்கள் மாமன்னரைச் சந்திக்க வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான் என்று ஒருதரப்பு கூறுகிறது.

அதே வேளையில், உரிய ஆவணங்கள் இருப்பதால் தங்களால் மாமன்னரைச் சந்திக்க முடியும் என்று பக்காத்தான் தரப்பினர் கூறுவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »