Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) மரணங்கள்: இத்தாலி மின்மயான ஊழியர்களின் நெகிழ்ச்சி அனுபவம்

நாம் அதிகம் நேசிக்கும் நபர் இறக்க நேரிட்டால், அவர்களை கடைசியாக ஒருமுறை பார்த்து அஞ்சலி செலுத்து கனத்த மனதுடன் அவர்களிடம் இருந்து பிரியாவிடை பெறுவோம்.

ஆனால் தங்களுக்கு நெருக்கமான உறவுகளின் உயிர் பிரியும்போது கூட இறுதியாக ஒருமுறை பார்க்க முடியாத நிலைக்கு இத்தாலி நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். உயிரிழப்பவர்களைவிட உயிரோடு இருப்பவர்கள் அதிக வலியை எதிர்கொள்கின்றனர்.

கொரோனாவால் உயிரிழப்பவர்கள் இயற்கை மரணத்தைவிட இரு மடங்கு அதிக சுமையோடு உயிரிழக்க நேரிடுகிறது, என மிலனில் உள்ள மின்மயானத்தில் வேலைப்பார்க்கும் ஆன்ட்ரியா கவலை தெரிவிக்கிறார்.

முதலில் நோய் தாக்கி உயிருடன் இருக்கும்போதே, நீங்கள் நேசிப்பவர்களை பிரிந்து தனிமைக்கு செல்ல வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பிறகு யாரும் அருகில் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அவர்களின் குடும்பத்தினரால் தங்களின் அன்பிற்குரியவர்கள் கண் முன்னே பிரிந்து செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தனிமையில் பிரியும் உயிர்கள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமையில் சிகிச்சை பெற்று நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இன்றி தனிமையில் உயிரிழக்கின்றனர்.

கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் சிகிச்சையின்போது குடும்பத்தினர் யாரும் அவர்களை பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை. வைரஸ் கிருமி உயிரிழந்தபிறகு அதன் தொற்று யாருக்கும் பரவுவதில்லை.

ஆனால் துணிகளில் உள்ள கொரோனா வைரஸ் கூட சில மணி நேரத்திற்கு உயிருடன் இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் சடலங்களும் உடனடியாக அப்புறப்படுத்தப்படுகின்றன.

பலர் கொரோனாவால் உயிரிழந்த தங்களின் உறவினர்களை கடைசியாக ஒருமுறை பார்க்கவேண்டும் என கேட்கின்றனர். ஆனால் அது விதிகளை மீறும் செயல். எனவே அனுமதிப்பதில்லை என இத்தாலியின் க்ரீமோனாவில் உள்ள மசிமோ வருத்தம் தெரிவித்தார்.

அதனால் உயிரிழந்தவர்களுக்கு நல்ல ஆடை அணிவித்து புதைப்பதில்லை. சிகிச்சை பெற்றுவந்த போது அவர்கள் அணிந்த மருத்துவமனை ஆடையுடனேயே புதைக்கப்படுகிறார்கள். ஆனால் மசிமோ தன்னால் முடிந்த ஒரு செயலை செய்கிறார். உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள் அளிக்கும் ஆடையை சடலத்தின் மீது ஆடையை அணிவித்ததுபோல் போர்த்தி புதைக்கிறார்.

நம்பிக்கை மட்டுமே துணை

மருத்துவமனைகளில் இருந்து உயிரிழந்தோரின் சடலங்களை அப்புறப்படுத்தும் ஊழியர்களே உயிரிழந்தவர்களுக்கு குடும்பத்தினராகவும் நண்பராகவும், ஏன் இறுதிச் சடங்கில் பிரார்த்தனை செய்யும் பாதிரியாராகவும் பொறுப்பேற்கின்றனர். ஏனென்றால் பெரும்பாலும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அனைவரும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்கின்றனர், எனவே நாங்கள் அனைத்து பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்கிறரர் ஆண்ட்ரியா.

எப்போதும் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும்போது, அவர்களுக்கு நல்ல ஆடை அணிந்து, ஒப்பனை செய்வது ஆண்ட்ரியா தினமும் மேற்கொள்ளும் பணி. ஆனால் தற்போது இவ்வாறு எந்த பணிகளையும் மேற்கொள்ளாமல், உடல்களை அப்படியே புதைக்கும் பணியை மட்டுமே மேற்கொள்வது கடினமாக உள்ளது என ஆண்ட்ரியா கூறுகிறார்.

புதைக்கும்முன்பு சவப்பெட்டியில் உடல் வைக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தை அவர்களின் நெருங்கிய உறவினருக்கு அனுப்புகிறோம், பிறகு உடலை மருத்துவமனையில் இருந்து கொண்டு சென்று புதைக்கிறோம். எனவே உறவினர்களை எங்களை மட்டுமே நம்ப வேண்டிய சூழல் நிலவுகிறது என ஆண்ட்ரியா கூறுகிறார்.

இறுதி மரியாதைகளை ஒதுக்குவது எவ்வளவு துயரம்?

கடைசியாக ஒருமுறை கண்ணத்தை தொடுவது, உயிரிழந்தவர்களின் கையை இறுக்கி பிடிப்பது, பெருமிதத்துடன் அவர்களை காண்பது மிகவும் அவசியம். ஆனால் இவ்வாறு எதுவும் இன்றி ஒரு உயிரை வழி அனுப்புவது கடினம். மின் மயானங்களில் வேலை செய்கிறவர்கள் உயிரிழந்தவர்களின் குடுபத்தினரை மூடிய கதவுகளுக்கு மற்றொரு புரத்தில் இருந்துதான் தொடர்பு கொள்வார்கள்.

பலர் உயிரிழந்த தங்களின் தாய், தந்தை, சகோதர சகோதரிகளுக்கு கடிதம் அல்லது கவிதை எழுதி அந்த காகிதங்களை உடலுடன் சேர்த்து புதைக்க வலியுறுத்துகின்றனர். ஆனால் எந்த கடிதங்களையும் கவிதைகளையும் சேர்த்து புதைக்க இங்கு நேரம் இல்லை. தற்போது அவர்களின் சொந்த உடைமைகளை வாங்குவதே பெரும் குற்றமாகும்.

இறந்தவரின் எந்த உடைமைகளையும் திரும்ப பெறாமல் இருப்பதன் மூலம் நிச்சயம் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்கிறார் ஆண்ட்ரியா.

சிகிச்சை பெறாமல் வீட்டில் இருந்தபடியே உயிரிழப்பவர்களை புதைக்கவோ எரியூட்டவோ தாங்கள் உதவுவதாகவும் ஆண்ட்ரியா கூறுகிறார். ஆனால் உடலை எடுத்துச்செல்ல வீட்டிற்கு செல்லும்போதும் பாதுகாப்பு ஆடைகள், கண்ணாடி, முகக்கவசம் உள்ளிட்ட அனைத்தையும் அணிந்தபடியே செல்கின்றனர். ஆனாலும் மின்மயானங்களில் வேலைப்பார்க்கும் பல ஊழியர்கள் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு தங்களை தனிமைப்படுத்திக்கொண்டதாக கூறுகின்றனர். மேலும் சடலங்களை எடுத்துச்செல்லும்போது பயன்படுத்தும் முகக்கவசங்கள் மற்றும் ஆடைகள் அனைத்தும் தீர்ந்து வருவதாகவும். இன்னும் ஒருவார காலத்திற்கு தேவையான ஆடைகள் மற்றும் உபகரணங்கள் மட்டுமே இருப்பதாகவும் ஆண்ட்ரியா தெரிவிக்கிறார்.

தான் பணிபுரிவது இத்தாலியிலேயே மிக பெரிய மின்மயானம் என்கிறார் அவர். ஆனால் தற்போது நிலவும் ஆள் பற்றாக்குறையால் அந்த மாயணத்தையும் விரைவில் முடக்கப்போவதாகவும் ஆண்ட்ரியா கூறுகிறார்.

இறுதி சடங்குகளுக்கு தடை – இத்தாலியில் அவசர சட்டம்

ரோமன் கத்தோலிக்க மரபுகளை நம்பும் மக்கள் அதிகம் வாழும் இத்தாலியில் பிறப்பிக்கப்பட்ட இந்த அவசர சட்டம் பலறை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால் இத்தாலியில் சடலங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள மசிமோ, இந்த சட்டத்தை சில நேரத்தில் மீறுவதாக கூறுகிறார். காரில் சடலத்தை ஏற்றி செல்லும்போது, வழியில் உள்ள தேவாலயத்தியில் நிறுத்து பாதிரியாரை அழைத்து காரில் இருந்தபடியே உயிரிழந்தவரின் உடலுக்கு ஆசி பெற்று பிறகு காரை மயானத்திற்கு ஓட்டி செல்கிறார். இதற்கு சில வினாடிகள் மட்டுமே ஆகிறது என்கிறார் மசிமோ.

நாடு முழுவதும் சவப்பெட்டிகள்

மார்ச் 23ம் தேதிவரை 6000திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மயானம் பல் பொருள் அங்காடிபோல காட்சியளிக்கிறது என்கிறார் ஆண்ட்ரியா. இத்தாலியின் பெர்கோமா நகரமே அதிகம் பாதிக்கப்பட்ட நகரம். அங்கு ராணுவத்தினரின் உதவிக்காக மக்கள் காத்திருக்கின்றனர்.

கடந்த வாரம் ஓர் இரவில், 70 சவப்பெட்டிகளை ராணுவத்தினர் தங்கள் வாகனங்களில் ஏற்றி சென்றனர். இந்த காட்சியை வீட்டில் நின்றபடியே அந்த சாலையில் உள்ள அனைவரும் கண்டனர். ஒவ்வொரு சவப்பெட்டியிலும் தங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளனர் என்பதை அனைவரும் அறிந்தனர். தங்கள் நகரத்தில் இடம் இல்லாததால், அருகில் உள்ள மற்றொரு நகரத்திற்கு அந்த உடல்கள் எடுத்து செல்லப்பட்டன என்கிறார் ஆண்ட்ரியா.

மயான ஊழியர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களை அலட்சியப்படுத்த வேண்டாம்

இத்தாலியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட முதல் நாளில் இருந்தே மருத்துவர்களும் செவிலியர்களும் அதிகம் பாராட்டப்பட்டனர். நாட்டை காக்கும் போர் வீரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர் அது உண்மைதான். ஆனால் அதற்காக மயானத்தில் பணியாற்றுபவர்களையும் வாகன ஓட்டுனர்களையும் அலட்சியப்படுத்த வேண்டாம். அவர்களின் உழைப்பிற்கும் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்கிறார் மசிமோ.

”எது எப்படியோ ஆனால் நாங்கள் புதைக்கும் சடலங்களுக்கு உண்மையான மரியாதையை செலுத்துகிறோம், எல்லாம் விரைவில் சரியாகிவிடும் என்று நம்புகிறோம், அந்த நாள் என்று வரும் என காத்திருக்கிறோம்” என்கிறார் மசிமோ.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »