Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): வட கொரியாவில் ஒருவருக்குக் கூட தொற்று பாதிப்பு இல்லையா? உண்மை என்ன?

தங்கள் நாட்டில் ஒருவருக்குக்கூட கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என வடகொரியா கூறுகிறது.

கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததாகவும், தங்கள் நாட்டின் எல்லைகளை மூடியதுமே இதற்கு காரணம் என்றும் அந்நாடு தெரிவிக்கிறது.

ஆனால் இது சாத்தியமே இல்லாத உண்மை என தென் கொரியாவில் இருக்கும் மூத்த அமெரிக்க ராணுவ தளபதி கூறுகிறார்.

கொரோனா வைரஸ் தொற்றால் பெரிதும் மோசமாக ஏதும் பாதிப்பு ஏற்படாமல் இருக்கலாம், ஆனால், ஒருவருக்குக்கூட பாதிப்பு ஏற்படாமல் இருக்க வாய்ப்பில்லை என்கிறார் பிபிசியிடம் பேசிய வடகொரிய விவகார வல்லுநர் ஒருவர்.

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள்படி உலகில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் வட கொரியாவில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என அந்நாட்டின் மத்திய அவசரக்கால தொற்று எதிர்ப்பு தலைமையகத்தின் இயக்குநர் பாக் ம்யோங்-சு, ஏஎஃபி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

“கண்காணிப்பது மற்றும் எங்கள் நாட்டிற்குள் நுழைந்த அனைவரையும் தனிமைப்படுத்தியது, அவர்களின் சாமான்களைக் கிருமி நாசினிகள் வைத்து சுத்தம் செய்தது. அதோடு கடல் மற்றும் வான் வழி போக்குவரத்து என அனைத்திற்கும் தடைவிதித்து எல்லைகளை மூடியது என நாங்கள் முன்கூட்டியே அறிவியல்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்தோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூற்று உண்மையாக இருக்குமா?

வட கொரியாவின் கூற்று உண்மையில்லை என்கிறார் தென் கொரியாவில் அமெரிக்கப் படைகளுக்குத் தலைமை வகிக்கும் ஜெனரல் ராபர்ட் அப்ராம்ஸ்.

“எங்களுக்குக் கிடைத்த புலனாய்வு தகவலின்படி இது சாத்தியமே இல்லாத உண்மை என்று என்னால் கூறமுடியும்” என சிஎன்என் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர் கூறினார்.

எனினும், சரியாக அங்கு எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை சொல்லமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

வட கொரியா குறித்த செய்திகளை வழங்கும் சிறப்புத்தளமான என்கே நியூஸின் நிர்வாக ஆசிரியர் ஆலிவர் ஹாதமும் இதனை ஒப்புக் கொள்கிறார்.

“வட கொரியாவில் கொரோனா பாதிப்பு இல்லாமல் இருக்க முடியாது. ஏனெனில் அந்நாடு சீனா மற்றும் தென் கொரியாவுடன் தனது எல்லைகளைப் பகிர்ந்திருக்கிறது. குறிப்பாக சீனாவுடன் எல்லைகளைத் தாண்டிய வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவு கொண்டிருக்கும் வட கொரியாவில் கொரோனா பாதிப்பு இல்லாமல் இருக்க சாத்தியமே இல்லை” என்று அவர் தெரிவித்தார்.

எனினும், அங்கு பெரிதாக பாதிப்பு இருக்கவும் சாத்தியமில்லை என்றும் அவர் கூறுகிறார்.

“வட கொரியா முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. அதனால் பெரிய பாதிப்பு ஏற்படுவதை தவிர்த்திருப்பது சாத்தியம்தான்”

வட கொரியா என்ன நடவடிக்கை எடுத்தது?

ஆசிய பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளைவிட வட கொரியா மிக விரைவாகவே நடவடிக்கை எடுத்தது என்பது உண்மைதான்.

ஜனவரி மாத இறுதியிலேயே வட கொரியா தனது எல்லைகளை மூடிவிட்டது. பின்னர் ஆயிரக்கணக்கான வெளிநாட்டினரை அதன் தலைநகர் பியாங்யாங்கில் தனிமைப்படுத்தியது. அந்த நேரத்தில்தான் சீனாவில் கொரோனா பாதிப்பு மிக மோசமாக அதிகரித்துக் கொண்டிருந்தது.

எனினும் அந்நாட்டில் 10,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக என்கே செய்தித்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

வடகொரிய மக்களுக்கு கொரோனா பற்றி தெரிந்திருக்கிறதா?

வட கொரியாவில் உள்ள மக்கள் பலருக்கும் தற்போதைய நிலைகுறித்து நல்ல விழிப்புணர்வு இருக்கிறது என்று ஹாதம் கூறுகிறார்.

“இதுகுறித்த பல செய்திகளை ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு எதிராக அந்நாடு எடுக்கும் நடவடிக்கை குறித்தும் சர்வதேச நிலவரங்கள் குறித்தும்தான் அந்நாடு ஒரு முழுப்பக்க செய்தியைத் தினமும் வெளியிடுகிறது” என பிபிசியிடம் பேசிய அவர் தெரிவித்தார்.

அதோடு வைரஸ் பரவுவதை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்று வட கொரியா அந்நாட்டு மக்களுக்கு கற்றுக் கொடுக்கும் திட்டம் ஒன்றையும் செயல்படுத்தியுள்ளதாக கூக்மின் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக இருக்கும் ஃப்யோடார் டெர்டிஸ்கி கூறினார்.

வட கொரியாவில் சுகாதார அமைப்பு எப்படி இருக்கும்?

நீங்கள் நினைப்பதை விட வட கொரியாவில் சுகாதார அமைப்பு நன்றாகத்தான் இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆனால், வட கொரியாவில் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது.

வட கொரியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குச் சமமாக இருக்கும் மற்ற சில நாடுகளைவிட அங்கு மிகச்சிறப்பான சுகாதார அமைப்பு இருப்பதாகக் கூறுகிறார் டெர்டிஸ்கி.

“அந்நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகைக்கும் அடிப்படை மருத்துவம் வழங்கும் திறன் அங்குள்ளது.”

என்.கே நியூஸின் நிர்வாக ஆசிரியர் ஆலிவர் ஹாதமும் இதனை ஏற்றுக் கொள்கிறார்.

ஆனால் அந்த மருத்துவர்களால் அடிப்படையான மருத்துவத்தை வழங்க முடியுமே தவிர, இதுபோன்ற தீவிர நிலையைக் கையாள்வது அவர்களுக்குக் கடினம்தான். மேலும் இதற்கு மருத்துவ உபகரணங்களும் அதிக அளவில் தேவைப்படும் என்று அவர் கூறுகிறார்.

வட கொரியாவின் மீது உள்ள பொருளாதாரத் தடைகளால் மேம்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்களை வாங்குவது அந்நாட்டிற்கு சாத்தியம் இல்லாதது.

மேலும் உங்களுக்கு எந்தளவுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்கும் என்பது நீங்கள் வட கொரியாவின் எந்த பகுதியில் இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்ததாகும். உதாரணமாகத் தலைநகரம் பியாங்யாங்கில் சிறந்த மருத்துவ வசதிகள் இருக்கிறது. இதுவே கிராமப்புறங்களில் அது கிடைப்பது கடினமாக இருக்கும்.

“இன்னும் ஒரு சில மாகாணங்களில் மருத்துவமனைகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் போன்ற வசதிகளே இருக்காது”

கொரோனா பாதிப்பை வட கொரியா ஏன் மூடி மறைக்க வேண்டும்?

வட கொரியா கொரோனா பாதிப்பு இருப்பதை ஒப்புக் கொள்வது என்பது அந்நாட்டின் தோல்வியின் அடையாளமாக பார்க்கப்படலாம்.

“கொரோனா பாதிப்பு இருப்பதை ஒப்புக் கொண்டால், அது மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தும். மக்கள் இதனால் வெளியேற தொடங்கினால், அது நிலையற்ற தன்மையையும், அதிக பாதிப்பு பரவுதலையும் உண்டாக்கும்” என்று ஹாதம் கூறுகிறார்.

இந்நிலையில் தனது நாட்டிற்கு கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காகவும் கொரோனா பற்றிய உண்மையான தகவல்களை அந்நாடு மறைக்கலாம் என்கிறார் டெர்டிஸ்கி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »