Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று இதுவரை இல்லாத நாடுகள் என்னென்ன தெரியுமா?

ஜனவரி 12ஆம் தேதி வரை கொரோனா வைரஸ் தொற்று என்பது சீனாவிற்கு வெளியே எந்த நாட்டிலும் இல்லை.

ஆனால் அன்றைய நாளுக்குப் பிறகு கொரோனா தொற்று பரவல் என்பது ஒரு சர்வதேச பிரச்சனையாகிவிட்டது.

தற்போது உலக நாடுகள் கொரோனா தொற்று நெருக்கடியைச் சமாளிக்கப் போராடி வருகின்றன.

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்து விட்டது. நேபாளம் முதல் அமெரிக்கா வரை எல்லா நாட்டிலும் கொரோனா தொற்று பரவல் பிரச்சனை உள்ளது.

நாளுக்கு நாள் இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டு போகிறது. மருத்துவமனைகளிலும் கூட்ட நெரிசல்.

ஆனால் இந்த கொரோனா தொற்று இல்லாத இடம் ஏதேனும் இந்த உலகில் உள்ளதா? ஆம் என்றால் அது உங்களுக்கு வியப்பளிக்கும் விஷயமாக இருக்கலாம்.

193 நாடுகள் ஐநாவின் உறுப்பினர்களாக உள்ளன.

ஏப்ரல் 2ஆம் தேதி வரை, ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தகவலை ஆராய்ந்தால் 18 நாடுகளில் கொரோனா தொற்று ஏற்படவில்லை.

காம்ரோஸ், க்ரிபாட்டி, லெசோட்டோ, மார்ஷல் தீவுகள், மைக்ரோனீசியா, நவ்ரூ, வட கொரியா, பாலவ், சமெளவா, செளவ் டேம் மற்றும் பிரின்ஷிபி, சாலமன் தீவுகள், தென் சூடான், டஜிகிஸ்தான், டாங்கா, டர்க்மெனிஸ்டான், டுவாலு, ஏமன் மற்றும் வான்வாட்டு ஆகியவைதான் அந்த 18 நாடுகள்.

சில நாடுகளில் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தாலும், அவை வெளியே தெரியாமல் இருக்கலாம். எடுத்துக்காட்டாக வட கொரியாவை சொல்லலாம். என நிபுணர்கள் ஒப்புக் கொள்கின்றனர். போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனிலும் யாருக்கும் தொற்று இல்லை என்று கூறப்படுகிறது.

சில நாடுகளில் இன்னும் கொரோனா தொற்று கால் பதிக்கவில்லை என்று கூறலாம். அதில் சில நாடுகள் மிகக் குறைவான வருகையாளர்களே கொண்ட சிறிய தீவுகள். உலகில் மிகக் குறைவான வருகையாளர்களைக் கொண்ட 10 இடங்களில் ஏழு இடங்களில் கொரோனா தொற்று இல்லை.

சமூக விலகல் குறித்து பேசி வரும் சமயத்தில், தொலைதூரத்தில் இருக்கும் தீவு நாடுகள்தான் உண்மையான சமூக விலகலைக் கடைப்பிடிக்கின்றன.

ஆனால் இம்மாதிரி அதிகம் பேர் வராத ஒரு நாட்டில், கோவிட் 19 தொற்று பரவலால் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலப்பரப்பால் இரண்டாவது சிறிய நாடாக இருக்கும் நவ்ரூ தீவில் வெறும் 10,000 மக்களே உள்ளனர். இந்த பூமியில் அதிகம் பேர் வருகை தராத ஒரு இடமும் அதுதான். இந்த தகவல் சமீபத்திய ஐநாவின் தகவலில் இல்லை என்றாலும், அங்கு வருடம் ஒன்றிற்கு 160 பேர் மட்டுமே வருகிறார்கள் எனச் சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.

இம்மாதிரியான சூழலில் அந்த நாடு சமூக விலகல் குறித்தோ அல்லது தனிமைப்படுத்துதல் குறித்தோ கவலைப்பட வேண்டாம் என நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் ஒரே ஒரு மருத்துவமனை, செவிலியர்கள் பற்றாக்குறை மற்றும் வெண்டிலேட்டர்களே அற்ற நிலையில் அந்த நாடு மெத்தனமாக இருந்து விட கூடாதில்லையா!

மார்ச் 2ஆம் தேதி சீனா, தென் கொரியா மற்றும் இத்தாலியிலிருந்து வருபவர்களுக்கு அங்குத் தடை விதிக்கப்பட்டது. ஐந்து நாட்களுக்குப் பிறகு இரானும் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டது.

மார்ச் மாத இடையில், ஃபிஜி, கிரிபாட்டி, மற்றும் மார்ஷல் தீவுகளுக்கு செல்லும் விமானங்களை நவ்ரூ ரத்து செய்தது. அந்த நாட்டிற்கான மற்றொரு தடமான பிரிஸ்பேன் வழியாக நடைபெறும் விமானப்போக்குவரத்து வாரத்திற்கு மூன்று முறை என்பதிலிருந்து இரண்டு வாரத்திற்கு ஒரு முறை என்று குறைக்கப்பட்டது.

நவ்ரூவிற்கு பெரும்பாலும் ஆஸ்திரேலியாவிலிருந்துதான் மக்கள் வருவார்கள். எனவே ஆஸ்திரேலியாவிலிருந்து வருகை தருபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

நவ்ரூவில் ஆஸ்திரேலியா குடியேறிகளுக்கான செயலாக்க மையம் ஒன்றை வைத்துள்ளது. அங்குத் தஞ்சம் கோருபவர்கள் யாரேனும் வந்தாலும் அவர்களும் குறைந்தது இருவாரங்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்படுகிறதா என தினமும் சோதிக்கப்படுகிறது. யாருக்கேனும் காய்ச்சல் இருந்தால் அவர்களுக்கு கோவிட் 19 தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது. அந்த சோதனைகள் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டன. ஆனால் எல்லாம் ‘நெகடிவ்’ என வந்துவிட்டது.

இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் தனது நாட்டு மக்கள் அமைதியைக் கடைப்பிடிப்பதாக அந்நாட்டின் அதிபர் லயனல் தெரிவிக்கிறார்.

மேலும் ஆஸ்திரேலியா தைவான் என தங்களுக்கு உதவும் நாடுகளுக்கு அவர் நன்றி தெரிவிக்கிறார்.

“ஒவ்வொரு முறை கோவிட் 19ஆல் பாதிக்கப்பட்ட உலக வரைபடத்தைக் காணும்போது உலகிற்கே அம்மை வந்தது போல் எல்லா இடத்திலும் சிவப்பு புள்ளியாக உள்ளது. எனவே இந்த நெருக்கடியான காலத்தில் எங்களின் பிரார்த்தனை அனைத்து நாடுகளுக்கும் உதவி புரியும் என நான் நம்புகிறேன்.” என்கிறார் லயனல்.

நவ்ரூ தீவுகள் மட்டும் தேசிய அவசர நிலையைக் கொண்டுவர வில்லை. கிரிபாட்டி, டாங்கா, வானாட்டுவா, மற்றும் பிற நாடுகளும் அவசர நிலையை அறிவித்துள்ளன.

பசிபிக் தீவு நாடுகளில் உள்ளவர்களுக்கு ஏற்கனவே நீரிழிவு, இதய நோய், மற்றும் நெஞ்சு வலி போன்ற பிரச்சனைகள் உள்ளன. மேலும் இங்குள்ள சுகாதார அமைப்புகளும் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. எனவே இங்கு ஒருவருக்கு கூட தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்வதுதான் சிறந்தது என்கிறார் தெற்கு பசிபிக்கில் உள்ள நியூவை சேர்ந்த காலின்.

“மேலும் யாருக்கேனும் தொற்று ஏற்பட்டால் அவர்களை வெளிநாட்டிற்குத்தான் அழைத்துச் செல்ல வேண்டும். தற்போது சர்வதேச எல்லை பலவும் மூடப்பட்டிருக்கும் சூழலில் அது மிகவும் என்கிறார்” காலின்.

கிழக்கு ஆப்ரிக்காவை சேர்ந்த மலாவி போன்ற அனைத்து பக்கங்களிலும் நில எல்லைகளைக் கொண்ட நாடுகளில் சிலவற்றிற்கு தற்போது வரை கொரோனா தொற்று பரவல் இல்லை. 18 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட மலாவியில் வியாழக்கிழமை அன்றுதான் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்த தொற்றை எதிர்கொள்ள அந்த நாடு தயாராகவுள்ளது.

கொரோனா பயம் இல்லை ; ஊரடங்கும் தேவையில்லை- இப்படியும் ஒரு நாடு

தற்போது அங்கு “பேரழிவு நிலை” அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன பரிசோதனைகள் விரைந்து மேற்கொள்ளப்படுகின்றன.

மார்ச் 20க்கு முன்பாக வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுகின்றன.

மலாவி போன்ற நாட்டிலும் கூட கொரோனா தொற்று வந்துவிட்டது பிறகு கொரோனா தொற்று இல்லாத நாடு எது?

தெற்கு பசிபிக் பகுதியில் உள்ள தொலைதூர நாடுகளாக அது இருக்கலாம் என்கிறார் சவுத்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் இடஞ்சார்ந்த புள்ளி விவரங்கள் மற்றும் தொற்றுநோயில் பேராசிரியர் ஆண்டி டாடெம்.

“ஆனால் உலகமயமாக்கப்பட்ட நிலையில் எந்த நாடும் இதிலிருந்து தப்புவது எளிதல்ல. ஏனென்றால் தற்போது முழு அடைப்பு என்றாலும் இந்த நாடுகள் ஏற்றுமதி இறக்குமதிகளில் பிற நாடுகளை நம்பிதான் உள்ளன. எனவே அது என்றாவது ஒருநாள் மீண்டும் தொடங்கத்தான் வேண்டும்.” என்கிறார் ஆண்டி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »