Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்மி (வைரஸ்): அமெரிக்காவுக்கு வெண்டிலேட்டர் அனுப்பிய சீனா, உலக தலைவர்களிடம் நலம் விசாரித்த மோதி – அண்மைய தகவல்கள்

அமெரிக்க அதிபர் டிரம்புடன் தொலைப்பேசி வழியாக உரையாடிய மோதி, கோவிட் 19 வைரஸை எதிர்த்து அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா முழு பலத்துடன் போராடும் என்று தெரிவித்தார்.

கொரோனா தொற்றால் அமெரிக்காவில் 311, 544 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

நியூயார்க்கில் மட்டும் ஒரே நாளில் 630 பேர் பலியாகி உள்ளதை அடுத்து, அந்த மாகாணத்தில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,565 ஆக உயர்ந்துள்ளது.

இரண்டு வாரங்களில் வைரஸ் தொற்று அதிகமாகப் பரவ வாய்ப்பு உள்ளது என நியூயார்க் ஆளுநர் ஆன்ட்ரு கோமோ தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது ஸ்பெயின் நாடு.

அந்நாட்டுப் பிரதமர் பெட்ரோ சான்செஸ்டம் பேசிய மோதி, கொரோனா பாதிப்பால் ஸ்பெயினில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்காக இரங்கல் தெரிவித்தார்.

சர்வதேச அளவில் இத்தாலிக்கு அடுத்து ஸ்பெயினில்தான் அதிகளவிலான கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளது.

இந்த சூழலில் தங்கள் நாட்டில் இரண்டாவது நாளாக கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்கிறார் ஸ்பெயின் பிரதமர்.

அங்குமட்டும் 11,947 பேர் பலியாகி உள்ளனர்.

பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூவுடன் கொரோனா தொடர்பாக உரையாடியது பயனுள்ளதாக இருந்தது என மோதி தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கு சீனா அனுப்பிய வெண்டிலேட்டர்கள்

நியூயார்க்கில் வெண்டிலேட்டருக்கு தட்டுப்பாடு நிலவுவதாக நியூயார்க் ஆளுநர் ஆன்ட்ரு கோமோ தெரிவித்துள்ளார்.

இப்படியான சூழலில் அமெரிக்காவுக்குச் சீனா 1000 வெண்டிலேட்டர்களை அனுப்பியதற்காக அவர் நன்றி தெரிவித்தார்.

லத்தின் அமெரிக்காவிற்கு முகக்கவச ஏற்றுமதி தடை

அமெரிக்காவின் 3எம் நிறுவனம் தயாரிக்கும் என்95 முக கவசங்களைக் கனடா மற்றும் லத்தின் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய அதிபர் டிரம்ப் தடை விதிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இந்த செயலை அமெரிக்கா மேற்கொள்வது ” பெரும் தவறு ” என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

அமெரிக்காவின் நியூ ஓர்லீன்ஸ் நகரில் அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உடல் பருமன் தொடர்புடைய பிரச்சனை உடையவர்களை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாக அதிக வாய்ப்புள்ளதாக அமெரிக்க மருத்துவர்கள் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி முகாமையிடம் கூறுகின்றனர்.

பிரிட்டன் பிரதமரின் காதலிக்கும் கொரோனா அறிகுறி

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் காதலி கேரி, வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகளுடன் நிறைய நாட்கள் படுக்கையிலேயே ஓய்வு எடுத்ததாகக் கூறியுள்ளார்.

கர்ப்பமடைந்துள்ள கேரி, கடந்த வாரம் போரிஸ் ஜான்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தன்னை 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டதாகக் கூறுகிறார்.

பிரிட்டனின் பெண்டாண்வெளி சிறைச்சாலை ஊழியர்கள் இருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதார துறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

குவைத்தில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஜியார்ஜியாவில் 79 வயதான மூதாட்டி ஒருவர் கொரோனால் உயிரிழந்துள்ளார்.

உலக தலைவர்களிடம் கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நலம் விசாரித்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »