Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்மி (வைரஸ்): மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர், தொற்றுக்கு ஆளான புலி – சர்வதேச செய்திகள்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு 10 நாட்கள் ஆன நிலையில் மேற்கொண்டு பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா பாதிப்புகள் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சினைகளால் மருத்துவரின் அறிவுரைப்படி மருத்துவமனைக்குச் செல்வதாகவும் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டார். அவரது மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுக்கப்பட்ட “முன்னெச்சரிக்கை நடவடிக்கை” என்றும் கூறப்படுகிறது.

பிரிட்டன் பிரதமர் கொரோனா தொற்றுடன் போராடி மீண்டு வருவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க மக்கள் அனைவரும் போரிஸ் ஜான்சனின் நலனிற்காக இறைவனை வேண்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புலிக்கு கொரோனா

உலகிலேயே முதல் முறையாகப் புலி ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் நியூயார்க்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் திடீர் சரிவு உள்ளது என நியூயார்க் ஆளுநர் கூறியுள்ளார்.

நியூயார்க்கில் பிரோன்எக்ஸ் உயிரியல் பூங்காவில் உள்ள 4 வயது பெண் புலி ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த புலி சகோதரி மற்றும் இதனுடன் தொடர்பிலிருந்த மற்ற 2 புலிகள், 3 சிங்கம் உள்ளிட்ட மிருகங்களுக்கும் சில நாட்களாக இருமல் இருக்கிறது. தொடர்ந்து கொரோனா அறிகுறிகள் இருப்பதால், இந்த விலங்குகள் அனைத்தும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.

சில புனைகளுக்கும் கொரோனா பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளது என வனவிலங்கு பூங்காவின் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

ஏற்கனவே வனவிலங்கு நிபுணர்கள் சிலர் காட்டில் வாழும் விலங்குகளுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இந்த பூங்காவில் உள்ள அனைத்து புலிகளும் ஒருவிதமான வைரஸ் தொற்று அறிகுறிகள் தென்படுவதால் அனைத்து விலங்குகளும் தீவர கண்காணிப்பில் உள்ளனர்.

நம்பிக்கை விதை

நியூயார்க்கில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைகிறது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்பகுதியாக விளங்கும் நியூயார்க்கில் நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை முதன்முறையாகக் குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய, ஆளுநர் ஆண்ட்ரூ கோமோ இவ்வளவு விரைவாக தரவுகளின் அடிப்படையில் நாம் எந்த முடிவுக்கும் வர முடியாது என்றார்.

ஞாயிற்றுக்கிழமை அன்று நியூயார்க் ஆளுநர் வெளியிட்ட அறிக்கையின்படி, நியூயார்க்கில் மட்டும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,159 ஆக உள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 122,000 ஆக அதிகரித்துள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 75 சதவீதத்தினர் வீடு திரும்பியதாகவும் நியூயார்க் ஆளுநர் குறிப்பிட்டார்.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது, ஆனால் இது நிச்சயம் ஒர் உயிர்க்கொல்லி நோய் என்றும் நியூயார்க் ஆளுநர் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »