Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்மி (வைரஸ்): ஈக்குவேடாரில் உயிரிழந்தவர்களின் உடல்களை அட்டைப் பெட்டியில் அடக்கம் செய்யும் பரிதாப நிலை

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உலக நாடுகள் திணறி வரும் நிலையில், ஈக்வடார் நாடு கொரோனாவால் மரணமடைந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய இடமில்லாமல் தவித்து வருகிறது.

தென் அமெரிக்க கண்டத்தில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக ஈக்வடார் உள்ளது. குறிப்பாக அந்த நாட்டின் மிகப்பெரிய நகரமான குவயாகீலில், நூற்றுக்கணக்கானோர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் பல, மருத்துவமனைகளில் கேட்பாரட்று கிடப்பதாகவும், சில உடல்கள் வீடுகளிலிருந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பல இடங்களில் உடல்கள் பிளாஸ்டிக் காகிதங்களில் சுற்றப்பட்டும், அட்டைப்பெட்டியில் திணிக்கப்பட்டும் தெருக்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வாஷிங்டன் போஸ்ட் இணையதளம் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், தன் பெயர் கேப்ரியெல்லா என கூறும் பெண்மணி ஒருவர், தன்னுடைய கணவரின் உடலை வீட்டிலிருந்து மீட்குமாறு அரசு அதிகாரிகளிடம் கெஞ்சுவது போல காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

வீடுகளில் இந்த நிலை என்றால், அந்நகர மருத்துவமனைகளின் பிணவறைகளில் கொரோனா நோயாளிகளின் உடல்கள் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக உடல்களை பாதுகாப்பதற்காக மிகப்பெரிய கண்டெய்னர் அளவிலான மூன்று குளிர்சாதன பெட்டிகளை அந்நாட்டு அரசு பயன்படுத்த தொடங்கியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால், ஒரே நேரத்தில் அதிகளவிலான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் கட்டமைப்பு தங்களிடம் இல்லை என அந்நகரில் உள்ள மருத்துவமனை ஒன்று தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

“நேற்று அவசர சிகிச்சை பிரிவில் இருந்த இரண்டு பேர் மரணமடைந்தனர். அடுத்த இரண்டு மணி நேரத்தில் அந்த படுக்கைகளில் வேறு இருவர் அனுமதிக்கப்பட்டனர். முதலில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த இருவர் இறக்கவில்லை என்றால் அடுத்த வந்த இருவர் சிகிச்சை கிடைக்காமல் இறந்து போயிருப்பார்கள். தினந்தோறும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க கோரி, எனக்கு வேண்டுகோள்கள் வருகின்றன. ஆனால் என்னிடம் இடமில்லை. அவர்கள் சிகிச்சைக்கான மருத்துவமனையை தேடியே உயிரிழக்கவும் வாய்ப்பிருக்கிறது“ என குவயாகீலில் புறநகர் பகுதியில் சிறிய மருத்துவமனை நடத்தி வரும் மருத்துவர் ஒருவர் தெரிவித்ததாக ஃபினான்ஸியல் டைம்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது வரை ஈக்வடார் நாட்டு அரசு தரவுகள்படி கொரோனாவினால் 318 பேர் உயிரிழந்துள்ளனர். லத்தீன் அமெரிக்க நாடுகளில் அதிக கொரோனா உயிரிழப்புகள் ஈக்வடாரில்தான் ஏற்பட்டுள்ளது. ஆனால் இறந்தவர்களின் உடல்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் மூலம் கிடைத்த எண்ணிக்கை இது என்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறிப்பிட்டதை விட அதிகமாகத்தான் இருக்கும் அந்நாட்டு அதிபர் கூறியுள்ளார். மேலும் எல் யுனிவர்சோ செய்திதாளுக்கு பேட்டியளித்துள்ள ஈக்வடார் அரசாங்க பணிக்குழு தலைவர் ஜார்ஜ் வேட்டட், தினந்தோறும் 150-க்கும் மேற்பட்ட உடல்களை தாங்கள் சேகரிப்பதாக கூறியுள்ளார்.

பிபிசி முண்டோ சேவையிடம் பேசிய பெர்தா சலினாஸ் என்பவர், தன்னுடைய சகோதரி மற்றும் அவரது கணவரின் உடலை வீட்டிலிருந்து மீட்க நான்கு நாட்கள் ஆனதாக தெரிவித்துள்ளார். அதுவரை அவர்களது உடலை பிளாஸ்டிக் காகிதங்களில் சுற்றி வைத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

“இறந்தவர்களின் உடலை சேகரித்துச் செல்ல ஆம்புலன்ஸை நாங்கள் தொலைபேசியில் அழைத்தாலும் யாரும் பதிலளிப்பதில்லை. இதன் காரணமாகவே இறந்தவர்களின் உடலை வீட்டிலே வைத்திருக்கும் நிலை ஏற்பட்டது.“ என அவர் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களின் உடலை சேகரிப்பதில் ஒரு பக்கம் பிரச்சனை என்றால், மற்றொரு பக்கம் அவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கும் பல நாட்கள் காத்திருக்க வேண்டியதாக உள்ளதாக அந்நகர மக்கள் தெரிவிக்கின்றனர்.

அந்நாட்டில் இறந்தவர்களின் உடல்கள் பாரம்பரிய முறைப்படி மரத்திலானா சவப்பெட்டியில் கொண்டு செல்லப்படுவது வழக்கம். ஆனால் தற்போது அந்த சவப்பெட்டிகளுக்கும் பற்றாக்குறை நிலவுவதால், அட்டை பெட்டியால் செய்யப்பட்ட 4000 சவப்பெட்டிகளை ஈக்வடார் அரசு தயார் செய்துள்ளது.

இந்நிலையில் புதிய டிஜிட்டல் அமைப்பு மூலம், தங்கள் குடும்பத்தினர் எங்கு அடக்கம் செய்யப்பட்டனர் என்பதை உறவினர்கள் அறிந்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கடந்த சனிக்கிழமை ஈக்வடார் அரசு தெரிவித்திருந்தது. மேலும் குவயாகீல் நகரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3500-ஐ தொடலாம் என எதிர்பார்ப்பதாகவும், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய ப்ரத்யேக முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

லத்தீன் அமெரிக்க நாடுகளில், மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள நாடாக ஈக்வடார் உள்ளது. தற்போதைய சூழலை சமாளிக்க, அந்த நாடு சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகளின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »