Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்மி (வைரஸ்): மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

பிரிட்டன் நேரப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை லண்டன் புனித தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஒருவார சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினார்.

உலக நாடு ஒன்றின் அரசுக்குத் தலைமை தாங்குபவர்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபரான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த செவ்வாய்க்கிழமை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்ததால் மருத்துவர்கள் ஆலோசனைக்குப் பிறகு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அவர் வீடு திரும்பி உள்ள போதும் உடனே பணிக்குத் திரும்பமாட்டார் எனப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சீனாவில் பரவிய வதந்தி

சமீபத்தில் ஆப்பிரிக்கர்களுக்குத்தான் அதிகமாக கொரோனா வைரஸ் பரவுகிறது என்று சீனாவில் பரவிய வதந்தியால், சீனாவில் உள்ள ஆப்ரிக்கர்கள் தாங்கள் வசிக்கும் வீடுகளை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள். சீனாவின் குவான்சவோ நகரத்தில் கொரோனா வைரசால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அச்சம் நிலவுவதால், அங்கு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நூற்றுக்கணக்கான ஆப்பிரிக்கர்கள் தற்போது வசிக்க வீடு இன்றி தவிக்கின்றனர்.

கொரோனாவில் இருந்து மீண்ட 101 வயது முதியவர்

இங்கிலாந்தில் கெய்த் என்ற 101 வயது முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கெய்த் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்போது அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

வத்திகான் தேவாலயத்தில் மக்கள் யாருமின்றி நடந்த ஈஸ்டர் தின பிரார்த்தனை

செயின்ட் பீட்டர் பெசிலிக்கா தேவாலயத்தில் மக்கள் கூட்டம் இன்றி போப் பிரான்சிஸ் பிரார்த்தனையில் ஈடுபட்டார். இந்த வாரம் நடைபெற்ற அனைத்து பிரார்த்தனைகளும் பொதுமக்கள் கூட்டம் இன்றி நடைபெற்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் தின பிரார்த்தனையில் 70,000 பேர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட இத்தாலி முழுமையாக முடக்கப்பட்டுள்ள நிலையில், வத்திகானிற்கு அம்மாநில காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர்.

மேலும் கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என போப் பிரான்சிஸ் மக்களை வலியுறுத்தியுள்ளார்.

ஸ்பெயினில் மீண்டும் அதிகரிக்கும் மரணங்கள்

ஸ்பெயினில் கடந்த மூன்று வாரங்களாக இல்லாத அளவிற்கு மீண்டும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தி,ல் மட்டும் நூறு பேர் பலியாகி உள்ளனர்.

இதனை அடுத்து ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,972 ஆக அதிகரித்துள்ளது, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 166,019 ஆக அதிகரித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் 2 மருத்துவமனைகள் முடக்கம்

மருத்துவ பணியாளர்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் டாஸ்மானியாவில் உள்ள இரண்டு மருத்துவமனைகள் இரண்டு வாரங்களுக்கு முழுமையாக முடக்கப்படும்.

டாஸ்மானியாவில் மட்டும் சுமார் 1000 மருத்துவ ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »