Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்மி (வைரஸ்): மலேசியாவில் 45% ‘கோவிட் 19’ நோயாளிகள் குணமடைந்தனர் – விரிவான தகவல்கள்

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இன்று மட்டும் 113 பேர் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதேசமயம் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 4,683 ஆக அதிகரித்துள்ளது என்றும் இன்று ஒரே நாளில் புதிதாக 153 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 45 விழுக்காட்டினர் முழுமையாக குணமடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் இஷாம், கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறியுள்ளார். இதன்மூலம் மலேசியாவில் கொரோனா மரண எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 66 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மஸ்ஜித் இந்தியா பகுதி முற்றிலுமாகத் தனிமைப்படுத்தப்பட்டது

மலேசியாவில் இந்திய வர்த்தகர்கள் அதிகமுள்ள மஸ்ஜித் இந்தியா பகுதி முற்றிலுமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள அனைத்துக் கடைகளும் வணிகங்களும் இன்று காலை மூடப்பட்டன.

மலேசியாவுக்கு வருகைதரும், குறிப்பாக தமிழகம், இந்தியாவிலிருந்து வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் மலேசியாவில் நிச்சயமாகப் பார்க்க விரும்பும் இடங்களில் ஒன்று ஜாலான் மஸ்ஜித் இந்தியா. இங்கு மலிவான விலையில் பொருட்கள் வாங்க முடியும் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவது வழக்கும்.

இங்குள்ள சிலாங்கூர் மேன்ஷன் மற்றும் மலேயன் மேன்ஷன் ஆகிய இரு கட்டடத் தொகுதிகளில் வசிக்கும் சிலருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது அண்மையில் உறுதியானது. இதையடுத்து அவ்விரு கட்டிடத் தொகுப்புகளும் தனிமைப்படுத்தப்பட்டன. அவற்றில் வசிக்கும் சுமார் 5 ஆயிரம் பேருக்கு இப்போது நோய்த்தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய பரிசோதனைகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் அப்பகுதியில் அண்மையில் நடமாடிய மற்றவர்களுக்கும், அங்குள்ள கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து மஸ்ஜித் இந்தியாவில் இயங்கிவரும் பேரங்காடிகள், சிறு கடைகள், உணவகங்களில் பணியாற்றுபவர்களும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் ஏதேனும் உள்ளனவா என்பதைக் கண்டறிய பரிசோதனை செய்துகொள்ளும்படி சுகாதார அமைச்சணு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று காலை முதல் இந்தப் பரிசோதனைகளை நடத்தத் துவங்கியுள்ள சுகாதார அமைச்சு, மஸ்ஜித் இந்தியாவில் இயங்கும் தங்கு விடுதிகளில் தங்கியிருப்பவர்களையும் பரிசோதனைக்கு உட்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கிடையே பொது நடமாட்டக் கட்டுபாட்டு ஆணையின் காரணமாக மலேசியா முழுவதும் உள்ள உயர்கல்வி வளாகங்களில் தங்கியுள்ள மாணவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப மலேசிய அரசு அனுமதி மறுத்துள்ளது.

பொது நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமலில் உள்ள சூழ்நிலையில் அம்மாணவர்கள் தற்போது தங்கியுள்ள இடத்திலேயே தொடர்ந்து இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உயர்கல்விக்கூடங்களில் சுமார் 80 ஆயிரம் மாணவர்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ள மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி, இவர்களைத் தவிர தனியே வீடுகளை வாடகைக்கு எடுத்துத் தங்கி இருக்கும் மாணவர்களும் தங்கள் இருப்பிடத்திலேயே நீடிக்கவேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

“மாணவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் நடவடிக்கையால் அவர்களுக்கு மட்டுமல்லாமல் ஊரில் உள்ள மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம். நாட்டில் தற்போது கொவிட் 19 நோயின் தாக்கம் சற்றே குறைந்துள்ளது. நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க சுகாதார அமைச்சு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இந்நிலையில் ஒருசில நடவடிக்கைகளால் தங்களுடைய முயற்சிகள் பாதிக்கப்படுவதை சுகாதார அமைச்சு விரும்பவில்லை,” என்றார் இஸ்மாயில் சப்ரி.

வெளிநாடுகளில் உள்ள மலேசியர்கள் தாயகம் திரும்ப அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், வெளியுறவு அமைச்சு இதுதொடர்பில் தீவிரமாகச் செயலாற்றி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சிகையலகங்காரம் செய்து கொள்வது அவசியம் என்கிறார் மருத்துவ சங்க முன்னாள் தலைவர்

சிகையலங்காரக் கடைகள், கைபேசி, கணினி, பாகங்கள் விற்கும் கடைகள் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த விதிமுறைகளைத் தளர்த்துவதாக மலேசிய அரசு நேற்று தெரிவித்தது. இதற்கு ஆதரவு, எதிர்ப்பு என இரண்டும் ஒருசேர எழுந்துள்ளன.

சிகையலங்காரக் கடைகள் மூலம் நொய்த்தொற்று எளிதில் பரவ வாய்ப்புள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது. தற்போதைய சூழலில் கடைகளைத் திறக்க விரும்பவில்லை என மலேசிய இந்திய சிகையலங்காரக் கடைகள் சங்கமும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சுய சுகாதாரம் மற்றும் உடல்நலனைப் பேண சிகையலங்காரம் செய்து கொள்வது அவசியம் என மலேசிய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவரான டாக்டர் ஜான் சியூ தெரிவித்துள்ளார்.

“திருத்தப்பட்ட சிகையும், நல்ல தோற்றமும் இருப்பது மனநலனைப் பேணவும் தைரியமாக உணரவும் வழிவகுக்கும். தனித்து இருப்பவர்களுக்கு சிகையலங்காரக் கடைகளுக்குச் செல்வது, அங்கு உள்ள ஊழியருடன் பேசுவது என்பன போன்ற செயல்கள் சற்று ஆறுதலாக அமையும்,” என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மிகக் குறைவாக உள்ள பகுதிகளில் மட்டுமே சில்லரை வர்த்தகங்கள் இயங்கவும், சிகையலங்காரக் கடைகள் உள்ளிட்ட சிறிய கடைகளைத் திறக்கவும் அரசு அனுமதிக்கும் எனக் கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »