Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): ‘மதுவுக்கு பதிலாக சேனிடைசர்’ – நிறுவனங்களை நாடும் அரசுகள்

ஸ்டெஃபானே ஹேகர்ட்டி
பிபிசி செய்தியாளர்

கோவிட்-19 நோய் தொற்று உலகம் முழுவதும் பரவத் தொடங்கியதில் இருந்து நாம் அடிக்கடி ஹேண்ட் சேனிடைசர்(கைகளை தூய்மைப்படுத்தும் கிருமி நாசினி) பயன்படுத்தி கை கழுவவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறோம்.

ஆனால், உலகின் எந்த பகுதியிலும் அவ்வளவு எளிதாக தற்போது ஹேண்ட் சேனிடைசர் கிடைப்பதில்லை. அப்படியே கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தாலும் வழக்கத்தைவிட விலை அதிகமாக விற்கப்படுகிறது.

உலகில் உள்ள அனைவரிடமும் ஹாண்ட் சேனிடைசர் இருக்க வேண்டும் என்று சொன்னால், அதற்கு மொத்தமாக 385 மில்லியன் (38.5 கோடி) லிட்டர் சேனிடைசர் தேவை.

ஆனால் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு மட்டும் தேவையான அளவு ஹேண்ட் சேனிடைசர்தான் இப்போது கிடைக்கிறது என்று சொல்லலாம்.

பொதுவாக ஒரு மாதத்திற்கு 2.9 பில்லியன் லிட்டர் சேனிடைசர் தேவை என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது. அதாவது ஓர் ஆண்டிற்கு 35 பில்லியன் லிட்டர் தேவை.

ஆனால் உண்மையில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு முன்பு ஓர் ஆண்டிற்கு உலகம் முழுவதிலும் 3 பில்லியன் லிட்டர் ஹாண்ட் சேனிடைசர் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.

இந்த தரவுகளே தற்போது நிலவும் ஹேண்ட் சேனிடைசர் தட்டுப்பாடுகளை நமக்கு உணர்த்துகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரிட்டனில் உள்ள கடை ஒன்றில் சிறிய ஹேண்ட் சேனிடைசர் பாட்டில் 35 டாலருக்கு விற்கப்பட்டது. இது வழக்கத்தை விட 10 மடங்கு அதிகம். இந்த விலை உயர்வுக்கு விற்பனையாளர்கள்தான் காரணம் என எளிதாக நாம் விற்பனையாளர்களின் மேல் பழி சுமத்தி விடுவோம்.

மேலும் ஹேண்ட் சேனிடைசர் விற்பனையின் மூலம் போதுமான லாபத்தை ஈட்டி எங்கள் வருமானத்தை நிலையாக வைத்துக்கொள்கிறோம் என்றும் சில விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹேண்ட்சேனிடைசர் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா?

சேனிடைசர் தயாரிப்பிற்கு முக்கியமான மூலப்பொருளான ஆல்கஹாலின் விலை அதிகரித்ததே, ஹேண்ட் சேனிடைசரின் விலை உயர்வுக்கு காரணம்.

பிரிட்டனில் உள்ள ஜிடாக் என்ற ஆய்வகம் கடந்த மாதம் வரை ஒரு நாளுக்கு 150,000 பாட்டில் சேனிடைசர்களை தயாரித்து வந்தனர். ஆனால் தற்போது சேனிடைசர் தயாரிப்பிற்கு தேவையான ஆல்கஹால் விலை அதிகரித்ததால், சேனிடைசர் உற்பத்தி குறைந்துள்ளது.

வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கும் வகையில் சேனிடைசர் தயாரிக்க வேண்டுமானால் 60% ஆல்கஹால் கலந்துதான் சேனிடைசர் தயாரிக்க வேண்டும். குறிப்பாக எத்தனால் என்ற ஒருவகை ஆல்கஹாலை கொண்டே உலகளவில் பல முன்னணி நிறுவனங்கள் சேனிடைசர் தயாரிக்கின்றனர்.

ஜிடாக் நிறுவனம் ஒரு டன் எத்தனாலின் விலை 700 பவுண்டுகள் என்று குறிப்பிடுகிறது. ஒரு டன் எத்தனால் பயன்படுத்தி 32,000 சேனிடைசர் பாட்டில்களை தயாரிக்கலாம் என அந்நிறுவனம் குறிப்பிடுகிறது. ஆனால் தற்போது ஒரு டன் எத்தனாலின் விலை 10,000 பவுண்டுகளுக்கு விற்கப்படுகிறது.

எனவே சேனிடைசர் தயாரிப்பு அவ்வளவு எளிதல்ல என்கிறார் அந்நிறுவனத்தின் தலைவர்.

எத்தனாலில் இருந்து சேனிடைசர் தயாரிக்க இயலவில்லை என்றால் மற்றொரு ஆல்கஹால் வகையான ஐசோ ப்ரொபைல் ஆல்கஹாலில் இருந்து சேனிடைசர் தயாரிக்கலாம்.

ஐசோ ப்ரொபைல் ஆல்கஹாலை ஐ.பி.ஏ என்று அழைப்பார்கள். இதுவரை இந்த ஐ.பி.ஏ வை அதிகமாக உற்பத்தி செய்த நாடுகள் சீனா, பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி.

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்த இந்த சூழ்நிலையில் பிரான்சில் ஐ.பி.ஏ வை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிப்பதில்லை. பிரான்ஸ் நாட்டிலேயே ஐ.பி. ஏ-விற்கான தேவை அதிகரித்துள்ளது. மற்ற நாடுகளும் இதே நிலைப்பாட்டிற்கு எளிதாக தள்ளப்படலாம்.

எத்தனால், ஐ.பி.ஏ போன்ற ஆல்கஹால் தயாரிப்பு மேற்கொள்ளாத நாடுகள் விரைவில் சேனிடைசர் தயாரிப்பை முடக்க நேரிடும் என வர்த்தகர்கள் நம்புகின்றனர்.

எனவே அப்சலியுட் வோட்கா, ஜானி வால்க்கர் விஸ்க்கி தயாரிக்கும் பெர்னோட் ரிக்கார்ட் நிறுவனம் போல பல நிறுவனங்கள் சேனிடைசர் தயாரிப்புக்கு தேவையான ஆல்கஹாலை வழங்க முன்வர வேண்டும் என பல நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. அல்லது மது தயாரிக்கும் நிறுவனங்களே ஹாண்ட் சேனிடைசர் தயாரிக்க வேண்டும் என்று யோசனை வழங்கப்படுகிறது.

மது தயாரிப்பு நிறுவனங்களும் சக்கரை ஆலை தொழிற்சாலைகளும், ஹாண்ட் சேனிடைசர் தயாரிப்புக்கு தேவையான ஆல்கஹாலை வழங்க முன்வர வேண்டும் என இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

எத்தனால் மற்றும் ஐ.பி.ஏ வை அதிகம் உற்பத்தி செய்யும் பெரிய நிறுவனம் ஐரோப்பாவின் ஐனியோஸ் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் தலைவர் சர் ஜிம் ரேட்கிஃப் பிரிட்டனின் முதல் பணக்காரராக 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்டார்.

தற்போது இவர் பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ்சில் தொழிற்சாலைகள் அமைத்து விரைவில் ஹாண்ட் சேனிட்டைசர் உற்பத்தி செய்யப்போவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »