Press "Enter" to skip to content

மலேசியாவுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் அனுப்பும் இந்தியா – இரு நாடுகளை இணைத்த கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மலேசிய அரசு தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் இந்தியாவில் இருந்து ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை இறக்குமதி செய்கிறது மலேசியா.

ஒரு மில்லியன் (பத்து லட்சம்) மாத்திரைகளை அனுப்புமாறு இந்திய அரசிடம் மலேசியா கோரிக்கை வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மலேரியா பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் இந்த மாத்திரையே தற்போது கோவிட்-19 நோய்க்கு எதிரான சிகிச்சையிலும் பயன்படும் என்றும் கருதப்படுகிறது.

எனினும், இந்த மாத்திரைகள் கொரோனா வைரஸ் தொற்றை குணமாக்கும் என்று இதுவரை எந்த அறிவியல் ஆய்வுகளும் உறுதிசெய்யவில்லை.

இந்த மாத்திரையை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனினும் நல்லெண்ண மற்றும் மனிதாபிமான அடிப்படையில் இம்முறை மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்ய இந்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக இந்தியத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகளவில் இந்த மாத்திரையை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. அண்மையில் அமெரிக்காவும் இந்த மாத்திரைகளை இந்தியாவிடம் இருந்து பெற்றுள்ளது.

89,100 மாத்திரைகள் முதற்கட்டமாக இறக்குமதி

இந்நிலையில், இந்தியாவில் இருந்து 89,100 ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை இறக்குமதி செய்ய இருப்பதாக மலேசிய வெளியுறவு அமைச்சின் துணை அமைச்சர் கமாருடின் ஜாஃபர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமையை மேற்கோள் காட்டி சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவிடம் மேலும் இருப்பு இருக்கும் பட்சத்தில் இந்த மாத்திரைகளை கூடுதலாக மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என இந்திய அரசிடம் கேட்டுக் கொள்ளப்படும் என்றார் அவர்.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சுத் தரப்பில் இருந்து உடனடியாக எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. எனினும் இந்தியா, மலேசியா இடையேயான உறவில் கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த மனக்கசப்பு முடிவுக்கு வரும் வகையில் இருதரப்பும் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைகள் அமைந்திருப்பதாகக் கருதப்படுகிறது.

இரு நாடுகள் இடையே ஏன் மனக்கசப்பு உருவானது?

காஷ்மீர் விவகாரம் குறித்து மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது தெரிவித்த கருத்து இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. காஷ்மீரின் ஒரு பகுதியை இந்தியா படையெடுத்துச் சென்று ஆக்கிரமித்ததாக மகாதீர் கூறியிருந்தார்.

இதை ஐ.நா. பேரவையில் உரையாற்றியபோது மட்டுமல்லாமல் வேறு தருணங்களிலும் அவர் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தால் அங்கு சிறுபான்மையினராக உள்ள இஸ்லாமியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் மகாதீர் தமது எதிர்ப்பை பதிவு செய்தார்.

இதையடுத்து மலேசியாவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அங்கு இருந்து இந்தியாவுக்கு பாமாயிலை இறக்குமதி செய்ய சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் மலேசிய பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று பரவலாகப் பேசப்பட்டது.

இதற்கிடையே எதிர்பாராத விதமாக மலேசியாவில் திடீரென ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. மகாதீத் தலைமையில் இயங்கிய கூட்டணி அரசில் அங்கத்துவம் பெற்றிருந்த கட்சிகளுக்கு இடையே எழுந்த கருத்து வேறுபாடுகளால் அதிருப்தி அடைந்த அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அதன் பிறகு இந்தியாவுடன் நட்புறவு பாராட்டுவார் என்று கருதப்பட்ட அன்வார் இப்ராஹிம் பிரதமராவார் என்று ஆருடம் கூறப்பட்ட நிலையில், மகாதீர் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த மொகிதின் யாசின் பல கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்து அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இதையடுத்து புதிய அரசு இந்தியாவுடனான பிணக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், மலேசியாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது இந்திய அரரசு.

கோவிட் 19 பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க, மலேசியாவும் இதர உலக நாடுகளைப் போன்று ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளுடன் வேறு சில மாத்திரைகளைப் பயன்படுத்தி வருவதாகவும் ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசிய பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மலேசியா இரண்டாம் இடம் வகிக்கிறது. மலேசியாவில் மொத்தம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், 82 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு: மலேசியாவில் இன்றைய நிலவரம்

ஏப்ரல் 15ஆம் தேதி மதிய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் புதிதாக 85 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

கடந்த மார்ச் 14 முதல் இதுவரை, ஒரே நாளில் பதிவான ஆகக்குறைந்த நோயாளிகளின் எண்ணிக்கை இதுவாகும். அதேவேளையில் கடந்த 24 மணி நேரத்தில் 169 நோயாளிகள் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 5,072ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,647 ஆகும்.

மார்ச் 15 ஆம் தேதி முதல் மலேசியாவில் தினந்தோறும் வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமாகவே பதிவாகி வந்தது. மார்ச் 14ஆம் தேதியன்று ஒரே நாளில் 35பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையே மேலும் ஒருவர் பலியானதை அடுத்து மொத்த இறப்புகளின் ண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »