Press "Enter" to skip to content

ஜூன் அல்மெய்தா: கொரோனா வைரஸை முதன் முதலில் கண்டறிந்த பெண்மணியின் போராட்டக் கதை

ஜூன் அல்மெய்தா என்ற பெண்மணி, கொரோனா வைரஸ் வகைகளின் முதல் வகை வைரஸை, இப்போது நடக்கும் கோவிட் 19இன் தாக்குதலுக்கு பல்லாண்டுக்களுக்கு முன்பே கண்டறிந்துள்ளார்.

16 வயது வரை மட்டுமே பள்ளிக்கல்வி பெற்று, பிறகு, பேருந்து ஓட்டுநராக பணியாற்றிய ஒருவரின் மகளான ஜூன் அல்மெய்தா, மனிதர்களுக்குப் பரவும் முதல் கொரோனா வைரஸை கண்டறிந்தார்.

வைரஸ்களை எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் உதவியுடன் படமாக்கும் வைரஸ் இமேஜிங் துறையில் முன்னேடியாக திகழ்ந்த ஜூனின் பணிகள் தற்போதைய வைரஸ் தாக்குதலில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

கோவிட்- 19 தொற்றை உண்டாகும் சார்ஸ் கொரோனா வைரஸ் – 2 (sars-cov-2) என்பது புதிய வைரஸ் என்றாலும், 1964ஆம் ஆண்டு,லண்டனில் உள்ள புனித தாமஸ் மருத்துவமனையில், மருத்துவர் ஜூன் அல்மெய்தா கண்டறித்த கொரோனா வைரஸின் குடும்பத்தையே இதுவும் சார்ந்துள்ளது.

1930ஆம் ஆண்டு, ஜூன் ஹார்ட் என்ற பெயரில் பிறந்து, ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவின் வடகிழக்கு பகுதியில் இவர் வளர்ந்தார். மிகவும் குறைந்த பள்ளிக்கால அனுபவத்துடன் வெளியே வந்த அவர், கிளாஸ்கோ ராயல் மருத்துவமனையில், மெய்ம்மி நோயியல் (ஹிஸ்டோபோதோலோஜி) துறையில், ஆய்வகராக பணியில் இணைந்தார்.

பிறகு, லண்டனிற்கு வந்து சேர்ந்த ஜூன், 1954ஆம் ஆண்டு, வெனிசுவேலாவைச் சேர்ந்த கலைஞரான எண்ட்ரிக் அல்மெய்தாவை திருமணம் செய்துகொண்டார்.

ஜலதோசம் குறித்த ஆய்வு

அல்மெய்தா தம்பதி, தங்களின் மகளோடு, கனடாவிற்கு குடியேறினார்கள். மருத்துவத்துறை எழுத்தாளரான ஜார்ஜ் விண்டரின் பதிவுகளின்படி, ஆண்டாரியோவில் இருக்கும் புற்றுநோய் மருத்துவமனையில்தான், மருத்துவர் ஜூன் அல்மெய்தா, எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் துறையில் தன்னை மேம்படுத்திக்க்கொண்டுள்ளார்.

’பிறபொருள் எதிரி’ என்று குறிப்பிடப்படும் ஆண்டிபாடிக்களை (antibodies) பயன்படுத்தி,வைரஸ்களை தூண்டுவதன் மூலமாக, அவற்றை பெரிதான உருவத்தில், புகைப்பட வடிவில் காண்பிக்கக்கூடிய நுட்பத்தில் அவர் முன்னோடியாக விளங்கினார்.

அவரின் திறனை பிறர் அறிந்துகொண்டதன் மூலமாக, 1964ஆம் ஆண்டு, மீண்டும் பிரிட்டன் வந்த ஜூன், லண்டனில் உள்ள புனித தாமஸ் மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார் என்று விண்டர் பிபிசியிடம் தெரிவித்தார். இதே மருத்துவமனையில்தான் சமீபத்தில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கோவிட் -19 தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.

மீண்டும் பிரிட்டன் திரும்பி இருந்த ஜூன், மருத்துவர் டேவிட் டைரலுடன் இணைந்து ஆய்வுகளில் ஈடுபட்டார். மருத்துவர் டேவிட் அப்போது, சாலிஸர் பகுதியில், ஜலதோஷத்திற்காக ஆய்வுகள் நடத்தி வந்தார்.

மூக்கின் நாசிகளைச் சுத்தம் செய்வது குறித்து தன்னார்வலர்கள் உதவியோடு அப்போது ஆராய்ந்து வந்த டேவிட்டும் அவரின் குழுவும், ஜலதோஷத்திற்கு தொடர்புடைய சில வைரஸ்களை தங்களால் மீண்டும் உருவாக்க முடிந்துள்ளதையும், ஆனால், எல்லா வகையான வைரஸ்களையும் அவ்வாறு மீண்டும் உருவாக்க முடியவில்லை என்பதையும் புரிந்துகொண்டார்கள்.

1960ஆம் ஆண்டு, பி814 என்று பெயரிடப்பட்ட மாதிரி, சுர்ரேவில் உள்ள ஒரு விடுதியுடன் கூடிய பள்ளியைச் சேர்ந்த மாணவருடையதாக இருந்தது. தன்னார்வலர்களிடையே, ஜலதோஷத்திற்கான அறிகுறிகளை அவர்களால் செலுத்த முடிந்துள்ள போதிலும், கட்டுப்பாட்டுடன் ஆய்வகத்தில் நடத்தப்படும் ஆய்வில் அதை அவர்களால் உருவாக்க முடியவில்லை என்பதைக் கண்டறிந்தார்கள்.

இருப்பினும், உடலுறுப்புகளுள் அவற்றை வளர்க்க முடியும் என்பதை தன்னார்வலர்கள் கொண்டு செய்த ஆய்வில் அவர்கள் கண்டறிந்தபோது, இந்த வைரஸ்களை எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் மூலமாக பார்க்க முடியுமா என்று நினைத்தார் மருத்துவர் டேவிட்.

இந்த மாதிரிகளை அவர்கள் ஜூனிடம் அனுப்பி வைத்தார்கள். மாதிரிகளை பார்த்த ஜூன், பார்ப்பதற்கு, இன்புளூவென்சா வைரஸைப்போலவே இருந்தாலும், இவை அந்த வகையைச் சேர்ந்தவையல்ல என்று கண்டறிந்தார். அப்போதுதான் மனிதர்களை தாக்கும் முதல் கொரோனா வைரஸை அவர் கண்டறிந்துள்ளார்.

கண்டுபிடிப்பு நிராகரிக்கப்பட்டது

எலிகளுக்கு ஏற்படும் கல்லீரல் அழற்சி மற்றும் கோழிகளுக்கு ஏற்படும் மூச்சுக்குழாய் அழற்சி ஆகிய நோய்களின்போது, இத்தகைய வைரஸை மருத்துவர் ஜூன் பார்த்துள்ளார் என்கிறார் எழுத்தாளர் விண்டர்ஸ்.

இருப்பினும், ஜூனின் இந்த ஆய்வை நிராகரித்த ஓர் அறிவியல் சஞ்சிகை, அவர் சமர்ப்பித்த புகைப்படங்கள், ‘மிகவும் மோசமாக எடுக்கப்பட்ட இன்புளூவென்சா வைரஸின் புகைப்படங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளது.

1965ஆம் ஆண்டு வெளியான பிரிட்டிஷ் மருத்துவ சஞ்சிகையில், பி814 மாதிரியின் கண்டுபிடிப்பு குறித்து எழுதப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், ஜூன் எடுத்த இந்த வைரஸின் புகைப்படங்கள், ஜர்னல் ஆஃப் ஜெனரல் வைராலஜி என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன.

எழுத்தாளர் விண்டர்சின் கூற்றுப்படி, மருத்துவர் டேவிட் மற்றும் மருத்துவர் ஜுனுடன், புனித தாமஸ் மருத்துவமனையின் பொறுப்பாளராக இருந்த பேராசிரியர் டோனி வாட்டர்சனும் இணைந்து, இந்த வைரஸிற்கு கொரோனா என்று பெயர் வைத்துள்ளனர். இந்த வைரஸில் கிரீடம் போலவும், ஒளிவட்டம் போலவும் தெரியும் வடிவங்களைப் பார்த்தே இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. லத்தீன் மொழியில் கொரோனா என்றால் கிரீடம் என்று பொருள்.

பிறகு, லண்டனில் உள்ள முதுகலை மருத்துவப்பள்ளியில் பணியாற்றினார் மருத்துவர் ஜூன். அங்கு அவருக்கு முனைவர் பட்டம் அளிக்கப்பட்டது. வெல்கம் இன்ஸ்டீடியூட்டில் தனது சேவையை முடித்தார் ஜூன். அங்கு, வைரஸ்களை படமாக்கும் துறையில், பல பணிகளுக்கான காப்புரிமைகளில் இவரின் பெயரும் உள்ளது.

வெல்கமிலிருந்து வெளியே வந்த ஜூன், யோகா ஆசிரியராக மாறினார். இருப்பினும், 1980களில், மீண்டும் நச்சியல் என்று குறிப்பிடப்படும் வைராலஜி துறைக்கு திரும்பிய ஜூன், ஆலோசகராக பணியாற்றினார். அப்போதுதான், எச்.ஐ.வி வைரஸை புகைப்படமாக்கும் பணியில் உதவியும் செய்தார்.

2007ஆம் ஆண்டு, தனது 77ஆவது வயதில் இயற்கை எய்தினார் மருத்துவர் ஜூன் அல்மெய்தா.

அவர் மரணத்து இத்தோடு 13ஆண்டுகள் கடந்துவிட்டன. தற்போது உலகையே உலுக்கி வரும் கோவிட் -19 வைரஸ் குறித்து மருத்துவத்துறை புரிந்துகொள்ள அதிகத்தகவலை இவரின் ஆய்வு கொடுத்துள்ளது என்ற முறையில், இப்போது அவரின் ஆய்ப்பணிகள் உலகளவில் கவனம் பெறுகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »