Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): முடக்க நிலையை நீக்கும் திட்டத்தை அறிவித்தார் டிரம்ப் மற்றும் பிற செய்திகள்

கொரோனா வைரஸால் உலகிலேயே மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக விளங்கும் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் அமலிலுள்ள முடக்க நிலை படிப்படியாக நீக்கி பொருளாதாரத்தை மீள்கட்டமைப்பு செய்யும் திட்டத்தை அந்த நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

உலகின் மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட நாடான அமெரிக்காவில் இதுவரை ஆறரை லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 32,186 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக, அமெரிக்காவில் 2.2 கோடிக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை இழந்ததுடன், நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

இந்த நிலையில், கொரோனா வைரஸின் தாக்கம் அமெரிக்காவில் அதன் உச்சநிலையை கடந்துவிட்டதாக கடந்த சில நாட்களாக கூறி வரும் டிரம்ப், இன்று (வெள்ளிக்கிழமை) ‘அமெரிக்காவை மீண்டும் திறத்தல்’ என்ற பெயரில் நாட்டின் பொருளாதாரத்தை முழு வீச்சில் இயங்க செய்யும் மூன்று கட்டங்கள் கொண்ட திட்டத்தை ஆளுநர்கள் உடனான கூட்டத்திற்கு பின்னர் அறிவித்துள்ளார்.

இதன் மூலம், தங்களில் மாகாணங்களில் நடைமுறையிலுள்ள முடக்க நிலையை ஆளுநர்கள் படிப்படியாக முடிவுக்கு கொண்டுவர முடியும் என்றும், இந்த பணியை மைய அரசின் உதவியுடன் அந்தந்த மாகாண ஆளுநர்களே நேரடியாக மேற்கொள்வார்கள் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி, இந்த மாதத்தின் இறுதிக்குள்ளேயே சில மாகாணங்கள் முடக்க நிலையை நீக்கக்கூடும் என்ற டிரம்பின் கருத்தால், கடந்த சில நாட்களாக வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருந்த அமெரிக்க பங்குச்சந்தைகள் மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளன.

குஜராத்தில் இந்து – முஸ்லிம்களுக்கு தனித்தனியே சிகிச்சையா?

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவருக்கும் ஒரே வார்டில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த சூழ்நிலையில், தற்போது இந்து, முஸ்லிம் என பிரிக்கப்பட்டு அவர்களுக்கு தனித்தனியே சிகிச்சையளிக்கப்படுகிறது.

விரிவாக படிக்க: கொரோனா வைரஸ்: குஜராத்தில் இந்து – முஸ்லிம்களுக்கு தனித்தனியே சிகிச்சையா? உண்மை என்ன?

ஐ.பி.எல் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவிக்கும் இலங்கை

கொரோனா தொற்று காரணமாக மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை நிறுத்தப்பட்டுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை இலங்கையில் நடத்துமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் கோரிக்கை விடுத்துள்ளது.

கோவிட்-19 வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுமையாக முடங்கியுள்ள நிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளும் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

விரிவாக படிக்க: கொரோனா வைரஸ்: ஐ.பி.எல் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவிக்கும் இலங்கை

ஊரடங்கால் மலேசிய தலைநகரில் குறையும் குற்றங்கள்

கொரோனா வைரஸ் காரணமாக மலேசியாவில் பொதுநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து தலைநகர் கோலாலம்பூரில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக அந்நகரின் ஆணையர் மஸ்லான் லாஸிம் தெரிவித்துள்ளார்.

பொதுநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் முதற்கட்டமான மார்ச் 18 முதல் 31ஆம் தேதி வரையிலான காலத்தில் கோலாலம்பூரில் குற்ற விகிதாச்சாரம் 57.4 விழுக்காடு வரை குறைந்திருந்தது என்று அவர் கூறியுள்ளார். அச்சமயம் வன்முறை சார்ந்த குற்றங்கள் 62.8 விழுக்காடு அளவுக்குக் குறைந்திருந்தது என அவர் கூறினார்.

விரிவாக படிக்க: கொரோனா வைரஸ்: ஊரடங்கால் மலேசிய தலைநகரில் குறையும் குற்றங்கள்

‘ஆசிய நாடுகளின் வளர்ச்சி பூஜ்ஜியம் ஆகப்போகிறது’

அறுபது ஆண்டுகளில் முதல் முறையாக ஆசிய நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் பூஜ்ஜியமாக இருக்கப்போகிறது என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

1930களில் உலகெங்கும் ஏற்பட்ட பொருளாதார ‘பெருமந்தத்துக்கு’ (Great Depression) பின் ஆசிய பொருளாதாரத்தில் ஏற்படும் மிகப்பெரிய சரிவு இது என்று அந்த அமைப்பு எச்சரித்த பின்னர் இந்த கணிப்பை வெளியிடப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க: ‘ஆசிய நாடுகளின் வளர்ச்சி பூஜ்ஜியம் ஆகப்போகிறது’ – 60 ஆண்டுகளில் இதுவே முதல் முறை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »