Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதல்: சீனாவின் வெற்றி தோல்விகளை மலேசியா அறிய விரும்புவது ஏன்?

மலேசியாவில் இன்று புதிதாக 84 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,389ஆக அதிகரித்துள்ளது. அதே வேளையில் இன்று 194 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 89ஆக அதிகரித்துள்ளது.

இந்த வாரத்தில் நான்காவது முறையாக, வைரஸ் தொற்றியோரின் அன்றாட எண்ணிக்கை நூற்றுக்கும் குறைவாக, அதாவது இரட்டை இலக்கங்களில் பதிவாகி உள்ளது என சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து மலேசியாவுக்கு வருகை தந்துள்ள சிறப்பு மருத்துவக் குழுவிடம் இருந்து கொரோனா வைரஸ் தொற்றை துடைத்தொழிப்பதில் அந்நாடு எதிர்கொண்ட வெற்றி தோல்விகள் குறித்து தெரிந்துகொள்ள விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் சீனா வெற்றிகளைப் பெற்றுள்ளது. எனினும் அவர்கள் சில தவறுகள் செய்திருக்கலாம், சில தோல்விகளையும் கண்டிருக்கலாம். அவற்றையும் மலேசிய தெரிந்துகொள்ள விரும்புகிறது. இதன் மூலம் அத்தகைய தவறுகளை மலேசியா தவிர்க்க இயலும்,” என்று நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

தற்போது வந்துள்ள மருத்துவக் குழுவின் நோக்கம் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதல்ல என்று குறிப்பிட்ட அவர், நோய்த்தொற்று தொடர்பான தகவல்களையும், தங்களுடைய அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதே அவர்களுடைய நோக்கம் என்றார்.

இதற்கிடையே பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறுவோரை மலேசிய காவல்துறை தொடர்ந்து கைது செய்து வருகிறது. இவ்வாறு கைதாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் 11 தற்காலிக சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்த தற்காலிக சிறைச்சாலைகள் ஏப்ரல் 23ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என்றும், பொது மக்கள் அரசாங்கத்தின் ஆணையை முழுமையாக பின்பற்றி கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

சிங்கப்பூரில் என்ன நிலவரம்?

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,588ஆக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி முந்தைய 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 596 பேருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிதாக நோய்த்தொற்றியோரில் பலர் அந்நியத் தொழிலாளர்களுக்கான தங்கு விடுதிகளைச் சேர்ந்தவர்கள். மேலும், 25 சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உள்ளது.

இந்நிலையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் இந்தோனீசியா, ஃபிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளை முந்தியுள்ளது சிங்கப்பூர். மேலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகமான கொரோனா நோயாளிகள் உள்ள நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது.

இந்தோனீசியாவில் 6,248 பேரும், பிலிப்பின்ஸில் 6,087 பேரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி இருப்பதாக சிங்கப்பூர் பிரதமர் லீ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், அடுத்து வரும் தினங்கள் சிங்கப்பூருக்கு மிக முக்கியமானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அந்நியத் தொழிலாளர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதையடுத்து, அங்கு நோய்த்தொற்றியோர் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சமூகத்தில் மறைந்திருக்கும் பாதிப்பு கவலையில் ஆழ்த்துவதாக உள்ளது என்று தமது பதிவில் பிரதமர் லீ கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் இதுவரை பதிவாகியுள்ள வைரஸ் தொற்றுச் சம்பவங்களில் பாதிக்கும் மேற்பட்டவை, தங்கும் விடுதிகளைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்களுடன் தொடர்புடையவை என்று அந்நாட்டு சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டி உள்ள நிலையில்,. அது குறித்தும் பிரதமர் லீ தமது சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »