Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): ‘எப்படி அச்சம் கொள்ளாமல் இருக்க முடியும்’ – மருத்துவர்களின் துயர்மிக்க அனுபவம்

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று மருத்துவப் பணியாளர்களை பெரிதும் பாதித்துள்ளது.

பலர் இந்த போராட்டத்தில் தங்களின் உயிரையும் துறந்துள்ளனர்.

பலர் சரியான பாதுகாப்புக் கவசங்கள் இல்லாமல் பணியாற்றும் சூழலும் ஏற்பட்டுள்ளது; இதனால் தங்களின் உயிரிருக்கு ஆபத்து வரலாம் என்ற அச்சத்திற்கு மத்தியில்தான் அவர்கள் தங்களின் பணியை தொடர்ந்து வருகின்றனர்.

இது மனதளவில் அவர்களிடம் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தங்களின் குடும்பத்தாரிடம் பழகும் விதத்திலும்கூட மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அல்லது உயிரிழந்த மருத்துவப் பணியாளர்களின் தரவுகள் உலகளவில் இதுவரை இல்லை என்றபோதிலும், நாடுகள் வெளியிட்டுள்ள தரவுகள்படி பல மருத்துவப் பணியாளர்கள் இந்த தொற்றுக்கு ஆளாகியுள்ளது தெரிகிறது.

உலகளவில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி, அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளிலுருந்து ஐந்து மருத்துவப் பணியாளர்களிடம் நாம் பேசினோம் அவர்கள் அனைவரும் பெண்கள். சிலர் தங்களின் பெயர்களை வெளியே சொல்ல விரும்பவில்லை.

குழந்தைகள் நல தீவிர சிகிச்சைப் பிரிவு, பயிற்சி மருத்துவர், பிரிட்டன்

மருத்துவப் பணியாளராக இந்த தொற்றை அருகிலிருந்து நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம் எனவே இந்த தொற்று ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் எங்களுக்கு உள்ளன.

நாங்கள் பாதுகாப்புக் கவசங்களை அணிந்திருந்தாலும் அது ஒர் அளவுக்குதான் பலனளிக்கும்.

நான் எனது கணவருடன் வசிக்கிறேன். அவரும் கோவிட் 19ஆல் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறும் வார்டில்தான் பணிபுரிகிறார். எனவே எங்களில் இருவருக்கு யாருக்கேனும் தொற்று எளிதில் வரலாம் அது மற்றவருக்கும் பரவலாம்.

அதிக ஆபத்துள்ள பணியில் நாங்கள் தற்போது ஈடுபட்டுள்ளோம் அதுவே எங்களுக்கு ஒரு மன அழுத்ததை தருகிறது.

நாங்கள் முன்பைக் காட்டிலும் அதிகளவில் பணிக்கு வர வேண்டிய சூழல் உள்ளது. எங்களின் விடுமுறைகள் எல்லாம் ரத்தாகிவிட்டன. இது ஒரு மன அழுத்தம் தரக்கூடிய சூழல்தான் ஆனால் இதிலிருந்து வெளிவர வாய்ப்பில்லை.

இந்த ஆபத்தான சூழலில் பணிபுரிந்து மன அழுத்ததை பெற வேண்டும் அல்லது வீட்டில் உட்கார்ந்திருக்க வேண்டும். இந்த சமயத்தில் எப்படி வீட்டில் உட்கார்ந்திருக்க முடியும் எனவே எப்படியும் பணி செய்வதைதான் தேர்ந்தெடுத்தாக வேண்டும்.

சாரா ஜெரிங் -தீவிர சிகிச்சை பிரிவின் செவிலியர், சியாட்டல், அமெரிக்கா

முதலில் எங்களுக்கு ஏராளமான மாஸ்குகள் வழங்கப்பட்டன அதை நாங்கள் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் நிலைமை மோசமாக எங்களுக்கு கிடைக்க வேண்டிய மாஸ்க்குகள் குறைக்கப்பட்டன எனவே கையில் இருப்பதை மீண்டும் பயன்படுத்தும் கட்டாயத்துக்கு ஆளாகினோம்.

மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகள் கொண்ட செவிலியர்களுக்குதான் தற்சமய சூழல் மிகவும் ஆபத்தானது. எங்களால் முடிந்தவரை அவர்களை இந்த பணியில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்கிறோம்.

என்னால் எனது கணவருக்கும் இந்த தொற்று ஏற்படலாம் என சந்தேகம் உள்ளது எனவே நான் தனியாக தங்கிவிடலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

எங்களுக்கு மாஸ்க்குகள் தரப்படவில்லை என்றால் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. எனது பணியின் கடமையை நான் உணர்ந்துள்ளேன் ஆனால் எங்களின் உயிரையே தியாகம் செய்ய வேண்டும் என்பதில்லை. என்னை பணியமர்த்தியவர்களுக்கு எனக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கும் பொறுப்பு உள்ளது.

ஸ்பெயினின் மேட்ரிட்டில் பணிபுரியும் செவிலியர்

இந்த நிமிடம் எனக்கு மாஸ்க் மற்றும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பாதுகாப்பு உடை கிடைத்துள்ளது என்பதில் எனக்கு மகிழ்ச்சி.

ஆனால் பிற மருத்துவமனைகளில் செவிலியர்கள் இம்மாதிரியான பாதுகாப்புக் கவசங்கள் இல்லாமல் பணிபுரியும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் குப்பை செலுத்தும் பிளாஸ்டிக் கவர்களை கொண்டு அவர்கள் முகக்கவசம் மற்றும் ஷூக்களை செய்து கொள்ள வேண்டும்.

இந்த நோயால் ஏற்படும் தீவிரத்தை நாங்கள் கண்முன்னே பார்க்கிறோம் எனவே எப்படி எங்களால் அச்சம் கொள்ளாமல் இருக்க முடியும்.

நான் நோயாளிகளை கவனித்துக் கொள்ளும்போது அவர்களை தவிர வேறேதும் நினைப்பதில்லை. ஆனால் அங்கிருந்து நான் வந்தபிறகு ஒவ்வொரு நாளும் நான் எதிர்கொள்ளும் ஆபத்து குறித்து யோசிப்பேன். எனது நோயாளிகளை போன்றே நானும் எதிர்காலத்தில் பாதிக்கப்படலாம் என்றே எனக்கு தோன்றும்.

நான் தனியாக வசிக்கிறேன் ஆனால் குடும்பத்துடன் வசிக்கும் எனது சகப்பணியாளர்கள் தங்கள் வீட்டிற்குளே தங்களை தானே தனிமைப்படுத்திக் கொள்கின்றனர்.

செய்திகளை பார்த்து எனக்கு மிகுந்த கோபம் வரும். மன அழுத்தம் வரும். மக்கள் பால்கனியிலிருந்து கொண்டு கைத்தட்டுவார்கள். சில சமயங்களில் நான் அழுவதும் உண்டு. நான் கடமைப்பட்டிருக்கிறேனா அல்லது விரக்தியில் இருக்கிறேனா என்பது எனக்கு தெரியாது. சில சமயங்களில் அது எனது தூக்கத்தையும் பறித்து சென்றுவிடும்.

உள்ளுறை மருத்துவர், லம்பார்டி, இத்தாலி

எங்கள் பணியில் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் எல்லாம் தாமதமாகும்.

அந்த பாதுகாப்புக் கவச ஆடையை அணிய அதிக நேரம் பிடிக்கும். மாஸ்க் மற்றும் கையுறைகள் எல்லாம் அணிந்துகொண்டு நீங்கள் பணிக்கு தயாராக வேண்டும்.

உங்கள் கண்களையும் மறைத்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் உடல் முழுவதுக்குமான ஆடையாக அது இருக்கும். அதை நீங்கள் எல்லா நேரமும் அணிய வேண்டும். அதை கழட்டவே முடியாது எனவேதான் நாங்கள் தொடர்ந்து ஆறு மணி நேரம் பணி செய்கிறோம் அடுத்த ஆறு மணி நேரத்திற்குள் அதை மாற்றியாக வேண்டும்.

நீங்கள் உங்கள் பணியை தொடங்கிவிட்டால் தொடர்ந்து வேலை செய்து கொண்டேதான் இருக்க வேண்டும். உணவு அருந்தவோ குடிநீர் பருகவோ அல்லது கழிவறைக்கு செல்லவோ கூட முடியாது.

நாம் நோயாளிகளிடம் பழகும் விதமும் வேறுபடும். பொதுவாக நான் நோயாளிகளிடம் பேசுவதுண்டு ஆனால் தற்போது அவர்களுக்கு ஆகிஸ்ஜன் வழங்குவதால் அந்த சத்தத்தில் அவர்களிடம் பேசக்கூட முடியாது மேலும் அந்த அறையைவிட்டு நான் சீக்கிரம் வெளியேற வேண்டும்.

நாங்கள் போர்க்களத்தில் பணிபுரியும் மருத்துவர்களை போன்று உணருகிறோம்.

நாங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதை நோசிக்கக் கூட எங்களுக்கு நேரம் இருக்காது. நீங்கள் ஒரு அவசர சூழலில் இருந்தால் யோசிக்க மாட்டீர்கள் உடனே செயலாற்ற தொடங்கிவிடுவீர்கள் அதைதான் இப்போது நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

மிஷெல் வூ – மயக்க மருந்து நிபுணர், அட்லாண்டா, அமெரிக்கா

தற்போதுவரை நான் பாதுகாப்பாக பணியாற்ற எனென்ன தேவையே அது கிடைத்து வருகிறது. ஆனால் பல சமயங்களில் நான் அதை மீண்டும் பயன்படுத்த வேண்டும் எனவே அந்த சமயத்தில்தான் எனக்கு அச்சமாக இருக்கும் ஏனென்றால் வைரஸுகள் கண்ணுக்கு தெரியாது.

உலகம் முழுவதும் பல மருத்துப் பணியாளர்களுக்கு இந்த தொற்று வந்துவிட்டது. ஏனென்றால் நாங்கள்தான் எளிதில் பாதிப்பிற்குள்ளாகக் கூடிய சூழலில் உள்ளோம்.

எனது குடும்பத்திலிருந்து நான் தற்போது விலகி இருக்கிறேன். எனக்கென தனியான கழிவறையைதான் பயன்படுத்துகிறேன். எனது பொருட்களை யாரும் தொட விடுவதில்லை. ஒரு வேளை என்னை நான் முழுமையாக தனிமைப்படுத்திக் கொள்ளும் சூழலும் ஏற்படலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »