Press "Enter" to skip to content

‘கொரோனாவுக்கு இழப்பீடு வேண்டும்’ – சீன அரசு மீது வழக்கு தொடுக்கும் அமெரிக்க மாகாணம்

வேண்டுமென்றே கோவிட்-19 தொற்றை பரப்பி ஏமாற்றியதாக சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன அரசு மீது அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தொடுத்துள்ளது.

சீன அரசு கோவிட்-19 தொற்று குறித்து உலகுக்கு பொய் சொன்னதாகவும், முன்னரே எச்சரிக்கை விடுத்தவர்களை மௌனித்ததாகவும், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க எதுவும் செய்யவில்லை என்றும் அந்த மாகாண தலைமை வழக்கறிஞர் எரிக் ஷ்மிட் தெரிவித்துள்ளார்.

சீனா இந்த பாதிப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தங்கள் மாகாணத்தில் நிகழ்ந்த மரணங்கள், பாதிப்புகள், பொருளாதார இழப்பு ஆகியவற்றுக்கு சீன அரசிடம் அந்த மாகாண அரசு இந்த வழக்கு மூலம் இழப்பீடு கோரியுள்ளது.

சீன அரசு தன் மீதான புகாரை தொடர்ந்து மறுத்து வருகிறது.

வெளிநாட்டு அரசுகளுக்கு அமெரிக்க அரசு சட்டப் பாதுகாப்பு வழங்குவதால் இந்த வழக்கு மிசௌரி மாகாணத்துக்கு ஆதரவாக அமைவது கடினம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்று காரணமாக அதிகமானவர்கள் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த நாடாக அமெரிக்கா உள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க அமலாகியுள்ள ஊரடங்கால் தங்களுக்கு பொருளாதார பாதிப்பு ஏற்படுவதாகவும், அதை தளர்த்த வேண்டும் என்றும் பல அமெரிக்க மாகாணங்கள் வலியுறுத்தி வருகின்றன.

தொடக்கத்தில் கொரோனா வைரஸை ‘சீன வைரஸ்’ என்று கூறி வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மார்ச் மாத இறுதியில் சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான தொலைபேசி உரையாடல் ஒன்றுக்கு பின் கொரோனா வைரஸால் சீனா பல இன்னல்களை எதிர்கொண்டுள்ளதாகவும், கொரோனா வைரஸ் சிகிச்சை குறித்து அவர்களுக்கு நல்ல புரிதல் உள்ளதாகவும் ட்விட்டரில் பதிவிட்டார்.

தற்போதைய நிலவரம்

ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல்படி உலகளவில் கொரோனா தொற்றால் 25 லட்சத்து 64 ஆயிரத்து 190 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் அமெரிக்காவில் மட்டும் 8 லட்சத்து 25 ஆயிரத்து 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த கொரோனா தொற்றுக்கு இதுவரை உலகளவில் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 445 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 14 ஆயிரத்து 887 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் ஹூபே மாகணத்தில் 4 ஆயிரத்து 512 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »