Press "Enter" to skip to content

கிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர்? Kim Jong – Un Profile

உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள்?

சரி யார் இந்த கிம் ஜாங் உன்?

குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை வழிநடத்தும் முக்கியப் பொறுப்பை ஜாங்-உன் ஏற்றுக்கொள்ள நேரிட்டது.

கிம் ஜாங் உன்னின் தந்தை, வட கொரியாவின் அன்புத் தலைவர் கிம் ஜாங்-இல் தனது இறுதி காலத்தில் தான் தனது அரசியல் வாரிசாஅக் கிம் ஜாங் உன்னை தேர்ந்தெடுத்து அரசியல் பயிற்சி கொடுத்தார்.

தனது தந்தையின் மரணத்துக்குப் பிறகு, “மகத்தான வாரிசு” என்று இளைய கிம் புகழப்பட்டார். தந்தையின் மறைவுக்குப் பிறகு இரண்டு வார காலத்துக்குள் கட்சியின் தலைவராக, அரசாங்கம் மற்றும் ராணுவத்தின் தலைவராக ஆக்கப்பட்டார்.

அப்போதிலிருந்து, வடகொரியாவின் ஆயுதங்கள் தயாரிக்கும் திட்டத்தில் முன்னேற்றம் காண்பதில் அவர் உறுதியாக இருந்தார். அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகள் நடத்த உத்தரவிட்டார். அதுதவிர அமெரிக்காவுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சு நடத்தியது, தென் கொரியாவுடன் உறவை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டது ஆகியவற்றிலும் ஈடுபட்டார்.

சகோதரியின் கணவரை பதவி நீக்கம் செய்தது, மரண தண்டனையை நிறைவேற்றியது ஆகியவற்றில், கருணையற்றவராக நடந்து கொண்டார்.

புதிய நட்சத்திர மன்னர்

கிம் ஜாங்-இல், அவருடைய மூன்றாவது மனைவி கோ யோங்-ஹுயி ஆகியோரின் கடைசி மகனாக 1983 அல்லது 1984ல் பிறந்தவர் ஜாங் உன்.

தலைமைப் பதவிக்கு வரக் கூடிய பட்டியலில் ஆரம்பத்தில் இவர் இல்லை. அவருடைய பெரியம்மா மகன் கிம் ஜாங்-நாம், அவருடைய அண்ணன் கிம் ஜோங்-ச்சோல் ஆகியோர் தான் அடுத்த தலைவராக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 2001 மே மாதம் ஜப்பானில் இருந்து கிம் ஜாங்-நாம் நாடு கடத்தப்பட்டது, கிம் ஜாங்-ச்சோல் சர்ச்சைகளில் சிக்கியது ஆகியவற்றால் ஜாங்-உன் வாய்ப்பு பிரகாசமானது.

அரசியலில் உயர்நிலையிலான பல பதவிகள் அவருக்கு தரப்பட்டதால், புதிய தலைவராக அவர் வரக்கூடும் என்று நிபுணர்கள் கருதினர்.

தன் சகோதரர்களைப் போல சுவிட்சர்லாந்தில் படித்த ஜாங்-உன் மேற்கத்திய தாக்கங்களில் சிக்கிக் கொள்வதைத் தவிர்த்தார். பள்ளிக்கூடம் இல்லாத நாட்களில் வீட்டுக்குச் சென்றுவிடுவார். வட கொரிய தூதருடன் தங்கியிருப்பார்.

வடகொரியாவின் தலைநகர் பியாங்கியாங் திரும்பிய பிறகு, கிம் இல்-சங் ராணுவப் பல்கலைக்கழகத்தில் படித்தார்.

அவருடைய தாயார், ஜாங்-இல் -க்குப் பிரியமான மனைவியாக இருந்தார் என்று கருதப்படுகிறது. தனது மகனை “தலைவருக்கான நட்சத்திரம்” என்று கூறி தயார்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

கிம் ஜாங்-இல் 2010 ஆம் ஆண்டில் சீனாவுக்குச் சென்றபோது கிம் ஜாங்-உன் அவருடன் சென்றிருந்தார் என்று ஒரு செய்தி வெளியானது. அப்போது அவர் தான் அடுத்த வாரிசாக தலைமைப் பதவிக்கு வருவார் என்று கருதப்பட்டது. கிம் ஜாங்-இல் மரணமடைந்தபோது, அது உறுதிப்படுத்தப்பட்டது.

ராணுவத்துக்கு முதலிடம்

வடகொரியாவை உருவாக்கிய கிம் இல்-சங் நூற்றாண்டு பிறந்த நாளான 2012 ஏப்ரல் 15 ஆம் தேதி, திரு. கிம் முதன்முறையாக பொது மக்கள் மத்தியில் உரையாற்றினார். “ராணுவத்துக்கு முதலிடம்” என்ற கோட்பாட்டை முன்வைத்த அவர், தன்னுடைய நாட்டை மற்றவர்கள் “அச்சுறுத்தி வந்த காலம் முடிந்துவிட்டது” என்று முழக்கமிட்டார்.

அவருடைய தலைமையின் கீழ் வடகொரியாவின் அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைத் திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன. அவற்றில் பெரிய முன்னேற்றங்கள் இருந்ததாகத் தெரிகிறது. மேலும் 4 அணுகுண்டு சோதனைகளை நடத்தியதன் மூலம் வடகொரியா மொத்தம் ஆறு சோதனைகளை நடத்தியுள்ளது.

சிறிய ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாகவும், நீண்ட தூரம் பறந்து சென்று தாக்கும் ஏவுகணையில் அதைப் பொருத்தி அனுப்ப முடியும் என்றும் வடகொரியா கூறியுள்ளது. ஆனால், அதன் ஆராய்ச்சித் திட்டம் எந்த அளவுக்கு முன்னேற்றகரமானதாக இருக்கும் என்பது பற்றி நிபுணர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

வட கொரியாவின் ஏவுகணை பறந்து சென்று தாக்கும் திறனும் அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. 2017 ஆம் ஆண்டில் நிறைய ஏவுகணை சோதனைகள் நடைபெற்றன. அமெரிக்கா வரை சென்று தாக்கும் வல்லமை மிக்க கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளதாக வட கொரியா அறிவித்தது. இதனால் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான ஆட்சி நிர்வாகத்துக்குப் பதற்றம் ஏற்பட்டதால், ஐ.நா. தடைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இரு நாடுகளுக்கும் இடையில் பகைமை அதிகரித்த நிலையில், திரு. டிரம்ப் மற்றும் திரு. கிம் இடையில் வார்த்தைப் போர் தீவிரமானது.

“தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ராக்கெட் மனிதர்” என்று வட கொரிய அதிபரை திரு. டிரம்ப் வர்ணிக்க, “மூளை தடுமாற்றத்தில் இருக்கும் முதியவர்” என்று டிரம்பை திரு. கிம் வர்ணித்தார்.

இருந்தபோதிலும், தென் கொரியாவிடம் எதிர்பாராத விதமாக கிம் நட்புக் கரம் நீட்டினார். தென் கொரியாவில் 2018 பிப்ரவரியில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு வட கொரிய அணியை அனுப்புவதாக புத்தாண்டு உரையில் அறிவித்த அவர், தென் கொரியாவுடன் “பேச்சு நடத்த திறந்த மனதுடன்” இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஒலிம்பிக் தொடக்க விழாவில் இரு கொரிய வீரர்களும், ஒரே கொடியின் கீழ் அணிவகுத்துச் சென்றதில் தொடங்கி, இரு தரப்பிலும் உயர்நிலை ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றது வரை, தூதரக அளவில் நிறைய செயல்பாடுகள் இருந்தன. அதிபரான பிறகு முதன்முறையாக வெளிநாட்டுப் பயணமாக திரு. கிம் சீனாவுக்கு சென்றார். வடகொரியாவின் பிரதான நட்பு நாடாகவும், வர்த்தகப் பங்காளராகவும் இருக்கும் சீனாவின் பெய்ஜிங் நகருக்கு ரயிலில் அவர் பயணம் மேற்கொண்டார்.

அதிபர் டிரம்ப்புடனும் உறவுகளை மேம்படுத்திக் கொள்ள கிம் முயற்சி மேற்கொண்டார். 2018 ஏப்ரல் மாதத்தில் சிங்கப்பூரில் இரு தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்தது. வட கொரியாவில் அணுசக்திப் பரிசோதனைகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு அந்த சந்திப்பு நடைபெற்றது.

அனைத்து ஏவுகணை சோதனைகளையும் நிறுத்தி வைப்பதாக அப்போது திரு. கிம் கூறினார். “அணுகுண்டு தயாரிக்கும்” முயற்சியில் வெற்றி அடைந்துவிட்டதால், அணுகுண்டு பரிசோதனை வளாகத்தை மூடிவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அறிவிப்புகளுக்கு சர்வதேச அளவில் வரவேற்புகள் இருந்தன. ஆனால் கைவசம் உள்ள அணு ஆயுதங்களை அழிப்பது என்ற உத்தரவாதத்தை வடகொரியா அளிக்கவில்லை என்று நிபுணர்கள் கூறினர். அணுசக்தி சோதனைகளை நிறுத்துவதாக ஏற்கெனவே வாக்குறுதிகள் அளித்தபோது அவற்றை கடைபிடிக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அதற்கு அடுத்த ஆண்டில் இந்த இரு தலைவர்களும், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் உடன் சேர்ந்து சாதாரண முறையில் – ஆனால் பெரிதும் முக்கியத்துவமான – வகையில் சந்தித்தனர். வடக்கு மற்றும் தென் கொரியா இடையில் ராணுவம் இல்லாத இடைநிலப் பகுதியில் அந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இருந்தபோதிலும், அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையிலான உறவு பின்னர் மோசமானது. வட கொரியா தன் அணுசக்தித் திட்டங்களை முழுமையாகக் கைவிடாத வரையில், தடைகளை நீக்க முடியாது என டிரம்ப் மறுத்ததை அடுத்து பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

பிறகு 2020 ஜனவரி மாதத்தில், அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது நீண்டதூர ஏவுகணை பரிசோதனைகளை நிறுத்தி வைப்பதாக வெளியிட்ட அறிவிப்பை வாபஸ் பெறுவதாக கிம் அறிவித்தார். “இந்த உலகம் புதிய ராணுவ ஆயுதத்தைப் பார்க்கப் போகிறது” என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

கிம் குடும்பம்

ஆட்சி நிர்வாகத்தில் பாதுகாப்பு அமைச்சர்களை கிம் அடிக்கடி மாற்றிக் கொண்டே இருந்தார். 2011ல் இருந்து ஆறு ஆண்கள் இந்தப் பதவியை வகித்துள்ளனர். ராணுவப் படைகளின் விசுவாசத்தின் மீது அவருடைய நம்பிக்கையின்மையைக் காட்டுவதாக இது உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

வட கொரியாவில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு 2013ல் தீவிர முயற்சி நடைபெற்றதாகக் கூறப்பட்டது. அப்போது தான் தன் சகோதரியின் கணவர் சாங் சோங்-தயீக்கிற்கு அவர் மரண தண்டனை நிறைவேற்றினார். அவர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக அரசுத் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டது.

வெளிநாட்டில் தங்கியிருந்த பெரியம்மா மகன் கிம் ஜோங்-நாம் பிப்ரவரி 2017ல் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் கொல்லப்பட்டதற்கும், கிம் தான் காரணம் என்று பரவலாக நம்பப்படுகிறது.

கிம் உடன் சில நிகழ்ச்சிகளில், முந்தைய அறிமுகம் இல்லாத ஒரு பெண் பங்கேற்ற காட்சிகளை தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யும் வரையில், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அதிகம் தெரியாமல் இருந்தது. திரு கிம் “காம்ரேட் ரி சோல்-ஜு” என்பவரை திருமணம் செய்து கொண்டிருப்பதாக 2012 ஜூலையில் அரசுத் தொலைக்காட்சி அறிவித்தது.

கிம்- இன் மனைவி ரி பற்றி அதிகம் தகவல்கள் கிடையாது. ஆனால் அவருடைய மிடுக்கான தோற்றத்தைப் பார்த்து, அவர் உயர்ந்த அந்தஸ்துள்ள குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பார் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ரி ஒரு பாடகராக இருக்கலாம் என்றும், அதனால் கிம் கவனத்தை பெற்றிருக்கலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்தத் தம்பதியினருக்கு 3 பிள்ளைகள் இருப்பதாக தென் கொரியா புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரிய தொழிலாளர் கட்சியில் உயர் பொறுப்பில் இருக்கும் கிம் யோ-ஜோங், தென் கொரியாவில் ஒலிம்பிக் போட்டியில் கிம் சார்பில் கலந்து கொண்ட போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். கிம் -இன் மூத்த சகோதரர் கிம் ஜோங்-ச்சோல் அதிகாரப்பூர்வ பதவி எதிலும் இருக்கிறாரா என்பது தெரியவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »