Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): மலேசியாவில் கோவிட் 19 தாக்கத்தின் போது எழுப்பப்படும் ரோஹிஞ்சாக்கள் விவகாரம்

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இன்று ஒரே நாளில் புதிதாக 40 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் நூர் ஹிஷாம், கடந்த 24 மணி நேரத்தில் 95 கோவிட்-19 நோயாளிகள் சிகிச்சைக்குப் பின் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக தெரிவித்தார்.

மேலும் ஒரு நோயாளி உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 99ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 5,820 என்றும், இவர்களில் 3,957 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் குறிப்பிட்ட அவர், குணமடைந்தோர் விகிதம் 67.9 விழுக்காடு என்றார்.

மலேசியாயில் கொரோனா வைரஸ் தொற்றுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,764ஆக குறைந்துள்ளது. 37 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இனிவரும் நாட்களில் மலேசிய சுகாதாரத் துறையால் நாள்தோறும் 22 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனையை மேற்கொள்ள இயலும் என்று டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

தற்போது 16,500 பேருக்கு பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் உள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

ரோஹிஞ்சாக்கள் விவகாரம்

மலேசியாவில் தஞ்சமடைந்துள்ள ரோஹிஞ்சா அகதிகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்துள்ளார்.

அத்தகைய தகவல்கள் ரோஹிஞ்சாக்கள் மீது மலேசியர்கள் கோபம் கொள்ளும் வகையில் இருப்பதாகவும், இது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியாவில் உள்ள ரோஹிஞ்சாக்களுக்கு சம உரிமை அளிக்கப்பட வேண்டும், மலேசிய குடியுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மலாய்க்காரர்களை புத்தியற்றவர்கள் என்று விமர்சித்தும் சமூக ஊடகங்களில் அண்மைய சில தினங்களாக பல்வேறு பதிவுகள் இடம்பெற்று வருகின்றன.

சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள காணொளிப் பதிவுகள் மற்றும் கட்டுரைகளின் நம்பகத்தன்மை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் முடிவு செய்ய இயலும் என்று குறிப்பிட்டுள்ள அவர், மலேசியர்கள் பொறுமை காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

சினமூட்டக் கூடிய விவகாரங்களை தற்போது எழுப்ப வேண்டாம் என்றும், அவ்வாறு செய்வது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் இஸ்மாயில் சப்ரி எச்சரித்துள்ளார்.

“மலேசியா அமைதியான நாடு. நாம் தொடர்ந்து அமைதி காப்போம். மலேசியாவில் உள்ள ரோஹிஞ்சா சமூகத்துக்கு எதிராக அதிகரித்து வரும் எதிர்மறை உணர்வு எனக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

“ரோஹிஞ்சாக்கள் மலேசியாவில் தஞ்சம் கேட்பது புதிதல்ல. ஏனெனில் அவர்கள் தங்கள் நாட்டில் கொடூரமாகக் கொல்லப்படுவதாக கேள்விப்பட்டதை அடுத்து நாம் அவர்கள் மீது பரிதாபம் கொள்கிறோம். அவர்களை நாம் ஏற்றுக்கொண்டதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

“ஆனால் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருக்கும் வேளையில் திடீரென ரோஹிஞ்சாக்கள் விவகாரம் பெரிதாக்கப்படுவது ஏன் என்பது குறித்து விசாரணை நடைபெறும். சமூக வலைத்தளங்களில் வெளியாகக் கூடிய தகவல்கள் ரோஹிஞ்சாக்களுக்கு எதிராக கோபத்தைத் தூண்டும் வகையில் உள்ளன,” என்றார் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி.

சிங்கப்பூர் நிலவரம்

வைரஸ் தொற்றியோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்தது

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றியோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இன்று ஒரே நாளில் 799 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,423ஆக அதிகரித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் நம்பிக்கையுடன் இருப்பதாக சிங்கப்பூர் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார். ஊழியர்களுடன் காணொளி வசதி மூலம் பேசிய போது தம்மால் இதை உணர முடிந்ததாக அவர் கூறியுள்ளார்.

“விதிமுறைகளைக் கடைப்பிடித்து நடப்பதன் முக்கியத்துவத்தை வெளிநாட்டு ஊழியர்கள் உணர்ந்திருப்பதுடன், தங்களை சுகாதாரமாக வைத்திருக்கவும் தொடர்ந்து வேலை அளித்து வருவதற்கும் அவர்கள் சிங்கப்பூர் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்தனர்,” என்று தமது சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் அமைச்சர் தர்மன் குறிப்பிட்டுள்ளதாக சிங்கப்பூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »