Press "Enter" to skip to content

என்ன ஆனது சௌதிக்கு? பொற்காலப் பயணத்தில் அது சறுக்குமிடம் பள்ளமா? பாதாளமா?

ஃப்ராங்க் கார்டனர்
பிபிசி பாதுகாப்புத் துறை செய்தியாளர்

ஒரு காலத்தில் வரி விதிப்பு இல்லாமல் இருந்த நாடான சௌதி அரேபியா தற்போது தமது மதிப்புக் கூட்டு வரியை 5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக்குகிறது. மாதாந்திர வாழ்க்கை மானியத்தையும் அடுத்த மாதம் முதல் ரத்து செய்கிறது.

உலகச் சந்தையில் பெட்ரோலியத்தின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஓராண்டுக்கு முன்பு இருந்த விலையில் பாதியாக அது குறைந்துள்ளது. இதனால் அரசு வருவாய் 22 சதவீதம் குறைந்துள்ளது; பெரிய திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில்தான் வரி மும்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது, மானியமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அரசு எண்ணெய் நிறுவனமான சௌதி அராம்கோ-வின் நிகர லாபம் 25 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கான முக்கியக் காரணம், எண்ணெய் விலை வீழ்ச்சிதான்.

“செலவினத்தை கட்டுப்படுத்துவதற்கும், பலவீனமாக உள்ள எண்ணெய் விலையை ஸ்திரப்படுத்துவதற்கும் அழுத்தமான தேவைகள் இருப்பதை அரசின் நடவடிக்கைகள் பிரதிபலிக்கின்றன” என்கிறார் வளைகுடா நாடுகளைப் பற்றி பகுப்பாய்வு செய்யும் மைக்கேல் ஸ்டீஃபன்ஸ். “சாம்ராஜ்ஜியத்தின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. கொஞ்சமாவது சகஜ நிலை திரும்பவேண்டுமானால் அதற்கு கொஞ்சம் காலம் பிடிக்கும்” என்கிறார் அவர்.

ஆசிய நாடுகளில் இருந்து வந்த லட்சக் கணக்கான பயிற்சியற்ற புலம் பெயர் தொழிலாளர்களை நம்பியிருக்கிற பொருளாதாரம் கொரோனா தொற்றால் ஆட்டம் கண்டிருக்கிறது. அந்த தொழிலாளர்களில் பலரும் நெருக்கடியான, சுகாதாரமற்ற நிலைமைகளில் வாழ்கின்றனர்.

பட்டத்து இளவரசருக்கு உள்நாட்டில் பெருமளவில் செல்வாக்கு இருக்கிறது. ஆனால், சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலையில் இவருக்கு இருப்பதாக சொல்லப்படும் பங்கு பற்றி மேற்கத்திய நாடுகளில் நீடிக்கும் சந்தேகம் காரணமாக அங்கு இவர் மீது ஒவ்வாமை நிலவுகிறது.

துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் ஜமால் கஷோக்ஜி சௌதி அரசாங்கத்தின் முகவர்களால் கொடூரமாக கொல்லப்பட்ட பிறகு சௌதியில் முதலீடு செய்வதற்கான உலக நாடுகளின் நம்பிக்கை மீட்சி பெறவே இல்லை.

அண்டை நாடான யேமனில் சௌதி நடத்தும் போர் அரசு கஜானாவை கடந்த ஐந்தாண்டுகளாக காலி செய்து வருகிறது. ஆனாலும் ஆதாயம் ஏதும் ஏற்படவில்லை. கத்தாரோடு ஏற்பட்ட மோதல் காரணமாக, வளைகுடா அரபு கூட்டுறவு கவுன்சிலின் ஆறு உறுப்பு நாடுகளுக்கு இடையிலான ஒற்றுமையில் பங்கம் விளைந்துள்ளது.

ஆக, சௌதி அரேபியா மோசமான சிக்கலில் இருக்கிறதா?

தளராத இயல்பு

கொரோனா வைரஸ் உலகத் தொற்று பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரத்தை சிதைத்துள்ளது. இதில் சௌதி அரேபியாவும் விதிவிலக்கு அல்ல.

320 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இறையாண்மை செல்வ நிதி, மக்கள் முதலீட்டு நிதி ஆகியவை சௌதியின் கையிருப்பில் உள்ளன. சிக்கல் ஏற்படும் காலத்தில் இந்த நிதியை சௌதி அரேபியா பயன்படுத்திக்கொள்ள முடியும்.

பெரும்பான்மை பங்குகள் அரசிடம் உள்ள சௌதி அராம்கோ எண்ணெய் நிறுவனமும் இருக்கிறது. கடந்த ஆண்டு இதன் மதிப்பு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள். கூகுள், அமேசான் ஆகிய இரு நிறுவனங்களின் அப்போதைய கூட்டு மதிப்புக்கு சமம் இது.

இந்த நிறுவனத்தின் வெறும் 1.5 சதவீத பங்குகளை விற்றதன் மூலம் 2,500 கோடி அமெரிக்க டாலர்களை ஈட்டியது சௌதி அரேபியா. வரலாற்றிலேயே மிகப் பெரிய பங்கு விற்பனைத் தொடக்கம் இது.

சௌதி அரேபியாவின் இயல்பிலேயே ஒரு தளராத இயல்பு கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்கிறார் ரியாத்துக்கான முன்னாள் பிரிட்டீஷ் தூதுவர் சர் வில்லியம் பாட்டே. “அவர்களிடம் ஏராளமான கையிருப்பு இருக்கிறது. அதனால், அவர்களால் பாதிப்பில்லாமல் தொடர முடியும். சந்தையில் தங்களுக்கு இருக்கும் பங்கு குறையாமல் இந்த எண்ணெய் விலை வீழ்ச்சி சிக்கலில் இருந்து அவர்களால் வெளியில் வர முடியும். சந்தையில் தங்கள் பங்கை உயர்த்திக் கொள்ளவும்கூட அவர்களால் முடியும்” என்கிறார் அவர்.

கடந்த செப்டம்பரில் சௌதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து இரான் புரட்சிகரக் காவல் படையின் தளபதி காசிம் சுலேமானியை அமெரிக்கா படுகொலை செய்தது ஆகியவற்றுக்குப் பிறகு, குறைந்தபட்சம் தற்போதைக்கு இரான் மூலம் சௌதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் குறைந்திருப்பதாகத் தெரிகிறது. அவசரகால பாதுகாப்பு நடவடிக்கையாக அமெரிக்கா தாம் அனுப்பிய பேட்ரியாட் ஏவுகணைத் தொகுதியை இம்மாதம் திரும்பப் பெற்றிருக்கிறது.

ஐ.எஸ். மற்றும் அல் கொய்தா தொடர்புடைய உள்நாட்டு ஜிகாதி அச்சுறுத்தல்கள் முற்றிலும் இல்லாமல் போய்விடவில்லை என்றபோதும், பெருமளவில் குறைந்திருக்கிறது.

எனினும் சௌதி அரேபியா கீழ்க்கண்ட சில காத்திரமான பெரிய சவால்களை எதிர்கொண்டிருக்கிறது.

பொருளாதாரம்

எண்ணெய் வருமானம் ஒன்றை மட்டுமே நம்பிக்கொண்டிருக்காமல் பொருளாதாரத்தை பல வகையிலும் பரவலாக்கும் பெரிய திட்டம் ஒன்றின்கீழ் ஒளிமயமான எதிர்காலம் வருமென்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த சௌதி மக்களுக்கு இந்த வாரம் வெளியான அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் ஏமாற்றத்தைத் தந்துள்ளன.

இந்த முடிவுகளை வேதனை தரும் நடவடிக்கைகள் என்று நிதியமைச்சரே வருணித்திருந்தார். இந்த நடவடிக்கைகள் மூலம் 2,600 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிதியை மிச்சப்படுத்துவதே நோக்கம். கொரோனா மற்றும் எண்ணெய் விலை வீழ்ச்சி ஆகிய இரண்டும் சேர்ந்து சௌதியின் மைய வங்கிக்கு மார்ச் மாதம் மட்டும் இந்த தொகைக்கு சமமான இழப்பை ஏற்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 900 கோடி டாலர் அளவுக்கு பட்ஜெட் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.

சௌதி அரேபியா சிக்கன நடவடிக்கையைக் கையில் எடுப்பது இது முதல் முறையல்ல. 1998ம் ஆண்டு மே மாதம் அபுதாபியில் நடந்த வளைகுடா கூட்டுறவு கவுன்சில் உச்சி மாநாட்டில் நான் பங்கேற்றேன். அந்த மாநாட்டில் சக வளைகுடா நாடுகளின் அரபு ஆட்சியாளர்களுக்கு சௌதி பட்டத்து இளவரசர் அப்துல்லா கடும் எச்சரிக்கை விடுத்தார்.

“ஒரு பீப்பாய் எண்ணெய்விலை 9 அமெரிக்க டாலர் என்பதாக இருக்கிறது. சொகுசாக இருந்த காலம் முடிந்துவிட்டது. அந்த நாள்கள் திரும்பி வராது. கச்சையை இறுக்கிக் கட்டிக்கொள்ளவேண்டிய காலம் இது” என்று அவர் அப்போது குறிப்பிட்டார்.

ஆனால், உண்மையில் அதன் பிறகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலர் அளவுக்கு உயர்ந்தது. ஆனால், அதற்கு முன்பாகவே அரசாங்கம் வேலைக்கு ஆளெடுப்பதை நிறுத்திவைத்தது. அது மட்டுமல்ல, நாடு முழுவதிலும் கட்டுமானத் திட்டங்கள் தாமதமாக்கப்பட்டன.

ஆனால், இந்த முறை நிலைமை அதைவிட மோசமாக இருக்கும்.

கொரோனா வைரசும், எண்ணெய் விலை வீழ்ச்சியும் சேர்ந்து சௌதி அரேபியா முழுவதும் வளர்ச்சித் திட்டங்களைப் புயலாகத் தாக்கியுள்ளன. பட்டத்து இளவரசரின் கனவுத் திட்டமான 2030 லட்சியத் திட்டத்தின் இலக்குகளை அடைவது இதற்கு மேலும் சாத்தியம்தானா என்ற கேள்வியை இது எழுப்பியுள்ளது.

எண்ணெய் வருமானம் மற்றும் புலம் பெயர் தொழிலாளர்கள் இரண்டை மட்டும் காலம் காலமாக சார்ந்திருக்கும் நிலையில் இருந்து நாட்டை நகர்த்துவதே இந்த திட்டத்தின் நோக்கம். 50 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் நியோம் பாலைவனப் பகுதியில் ஒரு பிரும்மாண்டமான ‘திறன் நகரை’ அமைப்பது இந்த திட்டத்தின் மிக முக்கிய இலக்கு.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் மாற்றமில்லை என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால், குறைப்புகளும், தாமதங்களும் தவிர்க்கவியலாதவை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

சிக்கன நடவடிக்கைகளால் குறிப்பாக தனியார் துறை மோசமாக பாதிக்கப்படும் என்கிறார் மைக்கேல் ஸ்டீஃபன்ஸ். நாட்டின் அவசரகால நடவடிக்கைகள் வேலை உருவாக்குகிறவர்களைப் பாதிக்கிறது. நீண்ட கால நோக்கில், மீண்டு வருவதை இது இன்னும் கடினமாக்கும் என்கிறார் அவர்.

உலகில் சௌதியின் நிலை

கஷோக்ஜி கொலையும், ஆரம்பத்தில் அதை மூடி மறைப்பதற்கு அந்நாடு மேற்கொண்ட அபத்தமான முயற்சிகளும் உலக அரங்கில் சௌதியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தின.

லண்டனுக்கான சௌதி தூதர் கூட இதனை “எங்கள் நற்பெயரில் ஏற்பட்ட கரை” என்று வருணித்தார்.

அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையிலும், தண்டனை அளித்த தீர்ப்பிலும் சில முன்னணி சந்தேக நபர்கள் தப்பித்துவிட்டனர். மனித உரிமை அமைப்புகளும், நீதிமுறை சாரா கொலைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்புத் தூதரும் சௌதியை மேலும் விமர்சிக்க இது வழிவகுத்தது.

ஆனால், உலகம் எளிதாகப் புறக்கணிக்க முடியாத அளவுக்கு சௌதி பெரிய நாடு மட்டுமல்ல, முக்கியமான பொருளாதாரமும் ஆகும். உலகின் மிக முக்கியப் பங்குகளை கையகப்படுத்த சௌதி முயற்சித்து வருகிறது. அதில் ஒன்றுதான் நியூ கேஸல் யுனைட்டட் ஃபுட்பால் கிளப்பின் 80 சதவீத பங்குகளை வாங்குவதற்கு அது தற்போது மேற்கொண்டுள்ள முயற்சியாகும். கொல்லப்பட்ட கஷோக்ஜியின் மனைவி ஹாட்டிஸ் சென்ஜிஸ் இந்த முயற்சியை அறநெறிக் கோட்பாடுகளின் அடிப்படையில் கடுமையாக எதிர்க்கிறார்.

யேமன் போரில் அமெரிக்காவும், பிரிட்டனும் அளிக்கும் போர் விமானங்களைக் கொண்டு சௌதி அரேபியா வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தப் போரில் எல்லாத் தரப்புகள் மீதும் போர்க் குற்றங்கள் புரிந்ததாக குற்றச்சாட்டுகள் வருகின்றன. இந்த விமானத் தாக்குதல்களால் ஏற்படும் பொதுமக்கள் மரணங்கள் தொடர்பாக அமெரிக்காவிலும், பிற நாடுகளிலும் கடும் விமர்சனங்கள் எழுகின்றன.

அரபு உலகத்திலேயே மிகுந்த ஏழ்மையில் உள்ள ஒரு நாட்டை சிதைத்ததைத் தவிர இந்த போர் சாதித்தது ஒன்றுமில்லை. அமெரிக்க அதிகார மட்டத்தில் சௌதிக்கான ஆதரவும் குறைந்து வருகிறது. சௌதி பட்டத்து இளவரசரும், நடைமுறை ஆட்சித் தலைவருமான முகமது பின் சல்மான் நம்பி இருக்கும் இரண்டு உலகத் தலைவர்கள் என்றால் அது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின் ஆகிய இருவரும்தான். ஆனால், ஏராளமான பெட்ரோலியத்தை வேண்டுமென்றே சந்தைக்குள் திறந்துவிட்டதன் மூலம், அந்த இரு தலைவர்களின் உள்நாட்டுப் பொருளாதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தி அதன் மூலம் அவர்கள் இருவருக்கமே எரிச்சலூட்டிவிட்டார் முகமது பின் சல்மான்.

அண்டை நாடான இரானுடன் சௌதிக்குப் பனிப்போர் நிலவுகிறது. இன்னொரு அண்டை நாடான கத்தாருடன் கொஞ்சம் பரவாயில்லை. உள்நாட்டில் அதிவேகமாக சமூக தாராளவாதத்தை அறிமுகப்படுத்தி வருகிறார் பட்டத்து இளவரசர். பெண்கள் வண்டி ஓட்டுவதற்கு இருந்த தடை நீக்கப்பட்டது. சினிமா, இருபாலர் பங்கேற்கும் இசை நிகழ்ச்சிகள், கார் பந்தயம் போன்ற, சௌதியில் முன்னெப்போதும் கேள்விப்பட்டிராத உரிமைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

மேம்போக்காக பார்த்தால், சௌதி அரேபியாவில் முன்பு இருந்ததைவிட கட்டுப்பெட்டியான நடைமுறைகள் தற்போது மிகவும் குறைவு. ஆனால், திரைக்குப் பின்னால் அரசியல் ஒடுக்கு முறைகள் தீவிரமடைந்துள்ளன. பட்டத்து இளவரசரின் கொள்கைகளை கேள்வி கேட்பவர்கள்கூட தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்படலாம், சிறையில் அடைக்கப்படலாம் என்ற ஆபத்து நிலவுகிறது. நீதித்துறை தீர்ப்பின் மூலமாகவே தலையை வெட்டுவது தொடர்கிறது. மனித உரிமை அமைப்புகள் வெகுவாக விமர்சிக்கும் நாடாகவே சௌதி இருக்கிறது.

சர்வதேசப் பொருளாதாரத்தில் சௌதி அரேபியா பெரிய சக்தியாக இருந்தாலும், வரும் நவம்பர் மாதம் அடுத்த ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டை நடத்தும் நிலையில் இருந்தாலும், அதன் நட்பு நாடுகள் இன்னமும் சௌதியை ஓர் அலங்கோலமான, சங்கடம் தரும் கூட்டாளியாகவே பார்க்கின்றன.

அதிகாரம்

34 வயதில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வெல்லமுடியாதவராக தோன்றுகிறார். தமது 84 வயது தந்தை அரசர் சல்மானின் ஆதரவு அவருக்கு இருக்கிறது. அரியனைக்கு தனக்குப் போட்டியாக வரக்கூடிய வாய்ப்புள்ள எல்லோரையும் திட்டமிட்ட முறையில் அவர் போட்டியில் இருந்து அகற்றிவிட்டார். அவருக்கு முன்பு பட்டத்து இளவரசராக இருந்த முகமது பின் நயீஃப் என்பவர் 2017ல் நடந்த அரண்மனைக் கிளர்ச்சி ஒன்றில் அகற்றப்பட்டு, அவரது இடத்தில் பட்டத்து இளவரசரானார் முகமது பின் சல்மான். அதன் பிறகு கைது செய்யப்பட்டு அதிகார நீக்கம் செய்யப்பட்டவர்களில் நயீஃபும் ஒருவர்.

பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அதிரடியான, மரபு மீறிய கொள்கைகள் நாட்டை ஆபத்தான பாதையில் இட்டுச் செல்வதாக வயதான, பழமைவாத சௌதிகளிடம் முனுமுனுப்பு இருக்கிறது. அதே நேரம் அவரை எதிர்த்துப் பேச அஞ்சும் நிலையும் இருக்கிறது. ஆனால், வெளிநாட்டில் அவர் மீது நிலவும் விமர்சனத்துக்கு மாற்றாக உள் நாட்டில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு இருக்கிறது.

அவர்களெல்லாம் முகமது பின் சல்மானின் தாராளவாத கொள்கைகளால் பெரிதும் பலன் பெற்றவர்கள். அவருக்குள்ள ஆதரவுத் தொகுதி பெரியது என்கிறார் சர் வில்லியம் பாட்டே.

புதிதாக உருவாகும் சௌதி தேசியவாதத்தின் குறியீடாக இளைஞரான பட்டத்து இளவரசர் இருக்கிறார் என்பது அந்த ஆதரவுக்கான காரணங்களில் ஒன்று. பொன்னான பொருளாதார எதிர்காலம் ஒன்றை அவர் தங்களுக்கு அளிப்பார் என்ற பரவலான நம்பிக்கை அந்த ஆதரவுக்கான இன்னொரு பெரிய காரணம்.

அந்தக் கனவுகள் பொய்த்துப் போனால், இன்னும் ஐந்தாண்டுகளில் உறுதி அளிக்கப்பட்ட வேலைகள் கிடைக்காமல் போனால், சௌதி மணி மகுடத்தின் பேரதிகாரம் பாதுகாப்பற்றதாக தோற்றம் தரத் தொடங்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »