Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள், வெற்றி அடைந்த மருத்துவ சோதனை – 10 தகவல்கள்

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொடர்பாக நடக்கும் முக்கிய விஷயங்களை இங்கே 10 தகவல்களாக தொகுத்துள்ளோம்.

1. கொரோனா வைரசிற்கான தடுப்பூசியை இந்தாண்டு இறுதிக்குள் கண்டுபிடிப்பதைக் குறிக்கோளாக வைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். எனினும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் இல்லை என்றாலும், அமெரிக்கர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். எப்படி இருந்தாலும் அமெரிக்கா அனைத்து தொழில்களையும் திறக்கும் எனவும் அதிபர் டிரம்ப் உறுதியாக கூறியுள்ளார்.

2. கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, ஜுன் 3ஆம் தேதி முதல் வெளிநாட்டுப்பயணங்களுக்கு அனுமதி அளிப்பதற்கான ஆணையில் இத்தாலி கையெழுத்திட்டுள்ளது. கடுமையான கட்டுப்பாடுகளுடன் இருக்கும் உள்நாட்டு பயணக் கட்டுபாடுகளும் அதே நாளில் தளர்த்தப்படும். இரண்டு மாதங்களுக்கும் மேல் ஊரடங்கு அமலிலிருந்த இத்தாலி பொருளாதாரத்தைத் திறக்க தொடங்கியுள்ள நிலையில், இது மிகப்பெரிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

3. சுவிட்சர்லாந்து, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரயா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இந்த வார இறுதியில் எல்லைக் கட்டுப்பாடுகளை தளர்த்த உள்ளன. ஜூன் மாதம் நடுவில் பிரான்சும் கட்டுப்பாடுகளை தளர்த்த உள்ளது.

4. பிரேசிலில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று பாதிப்பைக் கையாளும் அதிபருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ராஜிநாமா செய்துள்ளார். பிரேசிலில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்துவர, அந்நாட்டில் ஜிம்கள் மற்றும் அழகு நிலையங்களை திறக்க அதிபர் ஜெயீர் போல்சீனாரோ உத்தரவு பிறப்பித்ததை, சுகாதாரத்துறை அமைச்சர் நெல்சன் டைக் விமர்சித்தார். எனினும் அவர் ராஜிநாமா செய்ததற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. இவருக்கு முன்னாள் இருந்த அமைச்சர் பணியிலிருந்து அதிபரால் நீக்கப்பட்டார். நெல்சன் டைக் அமைச்சராக பதவியேற்று ஒருமாதம் கூட ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

5. கொரோனா வைரஸ் பரவலின் உச்சக்கட்டத்தை மெக்ஸிகோ அடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுவரை இல்லாத அளவிற்கு வியாழக்கிழமை அன்று அங்கு ஒரே நாளில் கொரோனா தொற்றால் 2,409 பேர் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்தே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. தற்போது அங்கு 40,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

6. கோவிட் 19 நோய்த்தொற்றுக்கு எதிராக உருவாக்கப்பட்ட தடுப்பூசி ஒன்று ஆறு குரங்குகளுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது பயனுள்ள விதத்தில் அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை அமெரிக்காவில் நடத்தப்பட்டது. சார்ஸ் கோவிட் 2 வகை வைரஸ் பாதிப்பைக் குரங்குகளுக்கு ஏற்படுத்தி, அவற்றிற்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்தத் தடுப்பூசியால் அந்தக் குரங்குகளின் மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலில் பாதிப்பு ஏற்படுவது குறைவதை காண முடிந்தது. இது தடுப்பூசிக்கான புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. ஆனால், இது மனிதர்கள் மீதும் அதே பலனை அளிக்கும் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது.

7. இந்தியாவின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 85,784-ஆக அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் சீனாவை மிஞ்சியுள்ளது இந்தியா

8. தமிழ்நாட்டில் நேற்று மேலும் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆகவே இதுவரை தமிழ்நாட்டில் இந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,108ஆக உயர்ந்துள்ளது.

9. தமிழ்நாட்டில் மதுக் கடைகளைத் திறக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மாநிலத்தில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன.ஆனால் சென்னைப் பெருநகரக் காவல்துறை பகுதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுக்கடைகள் இயங்காது. மால்கள், வணிக வளாகங்கள், நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள மதுக் கடைகள் இயங்காது.

10. உத்தர பிரேதச மாநிலத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பயணித்துக் கொண்டிருந்த டிரக் ஒன்று, மற்றொரு டிரக்குடன் மோதி ஏற்பட்ட விபத்தில் 24 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.பலரும் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்து உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆரயா என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »