Press "Enter" to skip to content

கொரோனா வைரஸை தவிர உலகை அச்சுறுத்தும் 5 விஷயங்கள்

ஜோனாதன் மார்கஸ்
பிபிசி செய்தியாளர்

கொரோனா உலகத்தொற்றைத் தவிர நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பிற ஐந்து முக்கிய உலக விஷயங்களின் தொகுப்பு இது.கடந்த சில மாதங்களாக கிட்டதட்ட நம் அனைவரின் கவனத்தையும் கோவிட் 19 ஈர்த்துக்கொண்டது.

எனவே இந்த காலத்தில் நாம் நினைவு கொள்ள வேண்டிய சில விஷயங்கள் பெரிதாக ஊடகங்களில் இடம்பெறும் சூழல் இல்லாமல் போனது.

ஒரு புதிய அணு ஆயுத போட்டி

ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே நடைமுறையில் உள்ள நியூ ஸ்டார்ட் என்று சுருக்கமாக அழைக்கப்படும் தந்திரோபாய ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் அடுத்த பிப்ரவரி மாதத்திற்குள் முடிவடைகிறது.

இந்த ஒப்பந்தம் ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய இருநாடுகளும் நீண்ட தூரம் சென்று தாக்கும் அணு ஆயுதங்களை பெருக்கிக்கொள்வதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கிறது.

உலக அமைதிக்கு முக்கியமான, இந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட வேண்டும் என்றால் அதற்கான காலம் அவகாசம் குறைந்துகொண்டு வருகிறது.

இந்த ஒப்பந்தம் இல்லாமல் போனால் கட்டுப்பாடில்லாத ஒரு புதிய அணு ஆயுதப் போட்டி நடக்கக்கூடும்.

அதிவேக ஹைபர்சானிக் ஏவுகணைகளின் உருவாக்கம் இந்த புதிய அணு ஆயுதப் போட்டி குறித்த அச்சத்தை மேலும் அதிகரிக்கிறது.

ரஷ்யா இந்த ஒப்பந்தத்ததை புதுப்பிக்க விரும்புகிறது. அது எளிதான ஒரு விஷயமும்கூட ஆனால் அமெரிக்காவில் உள்ள டிரம்ப் நிர்வாகம் இதனை கைவிடப் பார்க்கிறது. சீனா இந்த ஒப்பந்தத்தில் இடம்பெறாத நிலையில் இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க டிரம்ப் நிர்வாகம் எந்த ஆர்வமும் காட்டவில்லை.

இரான் அணுசக்தி ஒப்பந்தம்

இரானின் அணுக்கரு செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் இரான் அணு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியது. அதன்பின் இரான் மீது பல தடைகளையும் விதித்தது.

இரானுக்கு உலக நாடுகள் நவீன ஆயுதங்களை விற்பதற்கு ஐநா தடை விதித்துள்ளது. ஆனால் இரான் அணு ஒப்பந்தத்தை ஆதரிக்கும் ஐநாவின் தீர்மானத்தின்படி இரானுக்கு நவீன ஆயுதங்களை விற்பதற்கான தடை இந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதியுடன் முடிவடைகிறது. இரான் அதிபர் ஹசான் ருஹானி, இரானுக்கு ஆயுதங்கள் விற்பதற்கான இந்த தடை அக்டோபர் மாதம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டால் அமெரிக்கா பலத்த விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இருப்பினும் ரஷ்யா அந்த தடை நீட்டிப்புக்கு ஒப்புக் கொள்ள குறைவான வாய்ப்புகளே உள்ளன. அந்த சமயத்தில் இரான் அணு ஒப்பந்தத்தின் கீழ் இரான் மீதான பொருளாதாரத் தடையை மீண்டும் அமல்படுத்த ஐரோப்பிய நாடுகளுக்கு அழுத்தம் தருவார் டிரம்ப்.

இதனால், அமெரிக்கா மற்றும் இரான் இடையேயான பதற்றம் மேலும் அதிகரிப்பதோடு அமெரிக்கா மற்றும் அதன் முக்கிய ஐரோப்பிய கூட்டணி நாடுகளுக்கு இடையேயான பதற்றமும் இதனால் அதிகரிக்கலாம்.

மேற்கு கரையை இணைக்கும் இஸ்ரேலின் திட்டம்

இஸ்ரேலில் முக்கிய எதிர்க்கட்சி ஒன்றுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தால் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு மீண்டும் தனது பதவியை தக்க வைத்துக் கொண்டார்.

அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அதன் காரணத்தினாலும், அவர் மேற்குக் கரையில் இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதியை நிரந்தரமாக இஸ்ரேலுடன் இணைத்துக்கொள்ளும் சர்ச்சைக்குரிய தேசியவாத திட்டம் ஒன்றை முன்மொழிந்தார்.

இது இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்திற்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு முடிவு கட்டிவிடும்.

இதற்கு பாலத்தீனத்தில் ஏற்கனவே எதிர்ப்புகள் எழுந்துள்ளன. மேலும் ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளும் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளன. சில நாடுகள் இந்த திட்டம் மேற்கொண்டு செயல்படுத்தப்பட்டால் தடைகள் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளன. ஆனால் இது குறித்து டிரம்ப் நிர்வாகம் என்ன முடிவை எடுக்கப்போகிறது? இதற்கு டிரம்ப் நிர்வாகம் சம்மதம் தெரிவிக்குமா? எதிர்ப்புத் தெரிவிக்குமா என்பதே தற்போது பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

ஆனால் சில ஆய்வாளர்கள் தேர்தலில் தேசியவாத கொள்கைகள் கொண்டவர்களின் ஆதரவை பெறவே இந்த திட்டத்தை நெதன்யாஹு முன்மொழிந்தார் என்றும், தற்போது இந்த திட்டத்திலிருந்து அவர் பின்வாங்கிவிடுவார் என்றும் கூறுகின்றனர்.

பிரெக்ஸிட்

இந்த வார்த்தையை நாம் அனைவரும் ஏறக்குறைய மறந்தேவிட்டோம். ஆனால் காலம் சுழன்று கொண்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய நிலையில், இடைமாற்றக் காலம் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியதுடனான பிரிட்டனின் எதிர்கால உறவு குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படாத நிலையில், இந்த கால அவகாசத்தை நீட்டிப்பது தொடர்பான எந்த யோசனையும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இருப்பது போல தெரியவில்லை. பிரெக்சிட் இடம் பெறுவதற்கான முழு சூழலையுமே கொரோனா உலகத் தொற்று மாற்றிவிட்டது. பொருளாதார மந்த நிலையில் இருந்து மீள்வதற்கு பல ஆண்டுகள் தேவைப்படும் போலத் தெரிகிறது.

பருவநிலை மாற்றம்

கொரோன உலகத் தொற்றை இந்த உலகம் கையாண்ட விதம், எதிர்காலத்தில் பருவநிலையால் ஏற்படக்கூடிய விளைவுகளை உலக நாடுகள் எவ்வாறு கையாளப் போகின்றன என்பதற்கு ஒரு சான்று.

பருவநிலை மாற்றம் என்பது அனைத்து காலத்துக்குமான ஒரு சர்வதேச சவலாக உள்ளது.

இந்த பெருந்தொற்று சூழலில் அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட்டனவா என்பதற்கு கலவையான பதில்களே உள்ளன. மேலும் இந்த பெருந்தொற்று உலகில் உருவாக்கிய தாக்கத்தால் நிலைமை இன்னும் மோசமாகவே செல்லும்.

பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மீண்டும் செயல்படுத்துவதில் பெரும் சிக்கல் ஏற்படலாம்.

ஏற்கனவே இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஸ்காட்லாந்தில் உள்ள க்ளாஸ்கோவில் நடைபெறுவதாக இருந்த பருவநிலை மாற்றம் தொடர்பான ஐநா மாநாடு அடுத்த ஆண்டுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் நம் மனதில் எழும் மிகப்பெரிய கேள்வி சர்வதேச நாடுகளின் மனப்பான்மை மாறியுள்ளதா என்பதே. இனியாவது பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கை விரைந்து செயல்படுத்தப்படுமா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »