Press "Enter" to skip to content

புற்றுநோய் புகார்: குழந்தைகளுக்கான பொடி விற்பனையை நிறுத்தும் ஜான்சன் அண்ட் ஜான்சன் மற்றும் பிற செய்திகள்

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்புகள் புற்றுநோயை உண்டாக்குவதாக ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் குழந்தைகளுக்கான டால்கம் பவுடர் விற்பனையை நிறுத்துவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளால் புற்றுநோய் உண்டானதன் காரணமாக பலநூறு கோடி டாலர்கள் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டு இருந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

டால்க்கையை அடிப்படையாக வைத்து தாங்கள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பானவை என்று அந்த நிறுவனம் இதுவரை தொடர்ந்து கூறி வந்தது.

அந்த நிறுவனத்தின் டால்க் தயாரிப்புகள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை என்று அமெரிக்காவில் மட்டும் சுமார் 16 ஆயிரம் வாடிக்கையாளர்கள் ஜான்சன் அண்ட் ஜான்சன்-க்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர்

டால்க் என்பது மக்னீசியம் மற்றும் சிலிக்கான் ஆகியவை சேர்ந்துள்ள ஒரு மென்மையான கனிமமாகும்.

இலங்கையில் பெரு மழையால் நீரில் மூழ்கிய நகரங்கள்

இலங்கையில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால் பெருமளவிலான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

நாட்டில் மத்திய மற்றும் தென் பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே மழையுடனான வானிலை நிலவிவருகின்றது. இந்த நிலையில், நேற்று அதிகாலை முதல் பெய்த கடும் மழையுடனான வானிலையினால் இன்று நண்பகல் பல நகரங்கள் நீரில் மூழ்கின.

குறிப்பாக ரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை நகரம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது.

விரிவாக படிக்க:இலங்கையில் பெரு மழையால் நீரில் மூழ்கிய நகரங்கள் – 5 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ்: இந்தியாவில் தமிழகத்தில்தான் குறைவான இறப்பு சதவீதம் உள்ளதா?

தமிழகத்தில் புதிதாக 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,448 ஆக அதிகரித்துள்ளது

இதுவரை கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் விகிதம் குறித்து தொடர்ந்து பேசிவரும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில்தான் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என்று குறிப்பிட்டு, மத்திய அரசின் குழு பாராட்டியதாக தெரிவித்திருந்தார். தமிழகத்தில் இறப்பு விகிதம் 0.68 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விரிவாக படிக்க: கொரோனா வைரஸ்: இந்தியாவில் தமிழகத்தில்தான் குறைவான இறப்பு சதவீதம் உள்ளதா?

கொரோனா நோயாளிகளுக்கு ரத்தம் உறையும் பிரச்சனை ஏற்படுவது ஏன்?

தீவிரமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் 30 சதவிகிதம் பேருக்கு அபாயகரமான முறையில் ரத்தம் உறையும் பிரச்சனை உள்ளது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

துரொம்பாசிஸ் என்று அழைக்கப்படும் இந்த ரத்தம் உறையும் பிரச்சனையால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவி வந்த நேரத்தில் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் கொரோனா நோயாளிகள் பலருக்கு ரத்தம் கட்டும் பிரச்சனை இருப்பது தெரியவந்தது.

விரிவாக படிக்க:கொரோனா நோயாளிகளுக்கு ரத்தம் உறையும் பிரச்சனை ஏற்படுவது ஏன்?

உம்பான் புயல்: தமிழகத்துக்கு பாதிப்பா?

மேற்குவங்கம் – வங்கதேசம் இடையே நாளை (மே 20) மாலை உம்பான் புயல் கரையைக் கடக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி உம்பான் புயல் மேற்குவங்க மாநிலத்தில், கொல்கத்தா கடற்கரை பகுதியில் 630 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

உம்பான் புயல் வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை மேற்குவங்க பகுதிகளில் கரையைக் கடக்கும் என எதிர்பார்ப்பதாக பாலச்சந்திரன் தெரிவித்தார்.

விரிவாக படிக்க:உம்பான் புயலால் தமிழகத்துக்கு பாதிப்பா? – பாலச்சந்திரன் கூறுவது என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »