Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): தொற்று உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் தொற்று இல்லாத குழந்தைகள்

சௌதிக் பிஸ்வாஸ்
பிபிசி செய்தியாளர்

மும்பையில் ஒரு மருத்துவமனையில் 100க்கும் அதிகமான குழந்தைகள், தங்கள் தாய்மார்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தபோதும் நல்ல உடல் நலத்துடன் பிறந்துள்ளன.

லோக்மான்ய திலக் அரசு பொது மருத்துவமனையில் பிறந்த 115 குழந்தைகளில் மூன்று குழந்தைகளுக்கு கடந்த மாதம் முதலில் பரிசோதனை செய்யப்பட்ட போது கோவிட்-19 தொற்று இருப்பதாக காட்டியது. ஆனால் அடுத்தடுத்த சோதனைகள் அக்குழந்தைகளுக்கு தொற்று இல்லை என தெளிவுபடுத்தின என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, குழந்தை பிறக்கும் முன் இறந்த ஒருவரையும் சேர்த்து இரண்டு கர்ப்பிணி பெண்கள் கோவிட்-19 தொற்றால் இறந்துள்ளனர்.

தொற்று பரவும் முக்கிய இடமாக மாறிய மும்பையில் இதுவரை 20,000 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 730 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு பிறந்த குழந்தைகளில் பாதிக்கும் மேல் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தவை. மீதம் இருப்பவர்களுக்கு சுகப்பிரசவத்திலேயே குழந்தை பிறந்தது என அதிகாரிகள் கூறினர். பிறந்தவற்றில் 56 ஆண் குழந்தைகள்; மீதம் 59 பெண் குழந்தைகள். பிரசவித்தவர்களில் 22 பேர் மற்ற மருத்துவமனைகள் சொல்லி இந்த பொது மருத்துவமனைக்கு வந்தனர். ஆனால் இந்த பெண்களுக்கு எப்படி கொரோனா வந்தது, அதாவது வீட்டிலேயா அல்லது வெளியிலா அல்லது மருத்துவமனையிலா என்பது சரிவரத் தெரியவில்லை.

சியான் மருத்துவமனை என்றழைக்கப்படும் அந்த மருத்துவமனையில் 65 மருத்துவர்கள் மற்றும் 24 செவிலியர்களைக் கொண்டு 40 படுக்கைகள் கொண்ட வார்டில் கோவிட்-19 தொற்றிய கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். தொற்று மேலும் அதிகமாவதால் கர்ப்பிணி பெண்களுக்காக மேலும் 34 படுக்கைகள் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடத்தும் மூன்று அரங்குகள் உள்ளன. இந்த அரங்குகளில் அறுவை சிகிச்சையின்போது அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர், செவிலியர் மற்றும் மயக்க மருந்து மருத்துவர் மட்டுமே இருப்பர். அவர்கள் பாதுகாப்பு உடையணிந்திருப்பர்.

“பாதிக்கப்பட்ட பெண்களில் பலருக்கும் எந்த விதமான அறிகுறிகளும் இல்லாமல் இருந்தது ஒரு வித மகிழ்ச்சி. சிலருக்கு காய்ச்சலும் மூச்சுவிடுவதில் சிரமமும் ஏற்பட்டது. ஆனால் குழந்தை பிறந்தவுடன் அனைவருக்கும் கிசிச்சையளித்து வீட்டிற்கு அனுப்பி விட்டோம்”, என பெண்ணோயியல் மற்றும் மகப்பேறியல் மருத்துவர் அருண் நாயக் கூறினார்.

“அந்த பெண்களுக்கு ஒருவித அச்சம் இருந்தது. அவர்கள் இறந்தாலும் பரவாயில்லை. குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என கூறுவார்கள்” என்கிறார் அருண் நாயக்.

பிரசவத்திற்கு பிறகு கோவிட்-19 நோயாளிகள் இருக்கும் சிறப்பு வார்டில் தாயை மட்டும் வைத்து அவருக்கு ஹைட்ராக்சி க்ளோரோக்வின் கொடுக்கப்படும். பிறகு 10 நாட்களுக்கு அவர்கள் அந்த வார்டில் தனிமைப்படுத்தப்படுவர். ஆனால் குழந்தைகளை தனிமைப்படுத்துவதில்லை. மேலும் தாய் முக கவசம் அணிந்து கொண்டு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பார்.

பிப்ரவரி மாதம், வுஹானில், பிறந்த 30 மணி நேரத்தில் குழந்தை ஒன்றுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதேபோல் மார்ச் மாதத்தில் அமெரிக்காவில் ஒரு வயதைக்கூட எட்டாத ஒரு குழந்தைக்கு தொற்று இருப்பது சிகாகோவில் கண்டறியப்பட்டது. அந்த குழந்தை இறந்தும்போனது. அமெரிக்காவில் கனெக்டிகட்டில் கோவிட்-19 தொற்றால் ஆறு மாதக் குழந்தை ஒன்று இறந்துபோனது. அதே போல் மே மாத தொடக்கத்தில், வேல்ஸில் பிறந்த மூன்றே நாளில் கோவிட்-19 தொற்றால் ஒரு குழந்தை இறந்தது.

தாயின் சுவாசப் பாதை சுரப்புகளோடு குழந்தைக்கு தொடர்பு ஏற்படும் முன்னதாக கருவில் இருக்கும்போதோ, பிரசவத்தின் போதோ குழந்தைக்கு வைரஸ் தொற்றுவது அரிது என்கிறார் நியூயார்க் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் கல்லூரியின் குழந்தை தொற்று நோயியல் துறை இயக்குநர்ஆதம் ராட்னர். இது தற்காலிகமான தகவல் மட்டுமே. புதிய தகவல்களும் வரலாம் என்றும் அவர் கூறுகிறார்.

கர்ப்பிணித் தாய்மார்களின் கருப்பையில் உருவாகும் நஞ்சு என்ற உறுப்பில் கொரோனா வைரஸ் இருப்பதைக் காட்டும் தரவுகள் வருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

சில சிசுக்கள் பிறக்கும் முன்பே கருப்பையிலேயே இறந்துவிடுவதாகவும் தகவல்கள் வருகின்றன. ஆனால், நேரடியாக சிசுவுக்கு நேரடியாக கொரோனா தொற்று ஏற்படுவதால் அல்லாமல் வேறு காரணங்களாலும் இந்த இறப்புகள் நடந்திருக்கலாம் என்கிறார் அவர்.

நோய்த் தொற்றினை எதிர்த்துப் போராடுவதற்காக மனித உடலில் தோன்றும் ஆன்டிபாடி என்று கூறப்படும் எதிர்ப்பான்கள், பச்சிளம் குழந்தை ஒன்றின் உடலில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வந்துள்ளது. கருப்பையில் இருக்கும்போதோ, பிரசவத்தின்போதோ குழந்தைக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கருதுவதற்கு இது வழிவகுக்கிறது என்கிறார் ராட்னர்.

கோவிட்-19 நோய் பாதித்த தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு கருவிலேயே நோய்த் தொற்று ஏற்பட்டிருக்காவிட்டால்கூட அத்தகைய குழந்தைகளை தொடர்ந்து சோதித்து, இது போன்ற விஷயங்களில் விடைகளைக் காணவேண்டும் என்கிறார் ராட்னர்.

கொரோனா தொற்று ஏற்பட்ட தாய்மார்களுக்கு பிறந்த பல குழந்தைகளை மருத்துவமனைகளில் பராமரிப்பது தொடர்பாக தாம் உதவியிருப்பதாக அவர் கூறுகிறார்.

தாய்மார்களிடம் இருந்து கறந்த தாய்ப்பாலை குழந்தைகளுக்கு கொடுக்க அனுமதித்தோம். மேலும் அந்த குழந்தைகளுக்கு தம் வாழ்வின் ஆரம்ப நாள்களிலேயே கொரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாக்க ஏற்பாடுகளை உருவாக்க முயற்சிக்கிறோம் என்றார் ராட்னர்.

தொற்றுடன் இருக்கக்கூடிய சின்ன குழந்தைகள் நன்றாக அதிலிருந்து மீண்டு வருவதை நான் கண்டுள்ளேன் என்கிறார் அவர்.

மும்பை மருத்துவமனையில் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை இந்த சமயத்தில் பிறந்த மொத்த குழந்தைகளின் எண்ணிக்கையில் 20%த்திற்கு சற்று அதிகம்.

28 வயதான தாய் ஒருவர் நல்ல ஆரோக்கியமான ஆண் குழந்தையை பெற்றவுடன் இறந்துவிட்டார். அப்போது எங்களுக்கு வேதனையாக இருந்தது. அவருடைய கல்லீரல் செயலிழந்துவிட்டது என்கிறார் மருத்துவர் நாயக்.

நாங்கள் ஏதும் செய்ய முடியாதவர்களாகத் தவிப்பதை அந்த தாய் அறிந்திருந்தார். “ஏதாவது செய்ய முடியாதா” என்று அவர் தவிப்போடு கேட்டுக்கொண்டிருந்தார் என்கிறார் டாக்டர் நாயக்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »