Press "Enter" to skip to content

வட கொரியா vs தென் கொரியா பிரச்சனை: கடந்த கால வரலாறு என்ன?

உலகமே கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடி வரும் நிலையில், தென் கொரியா உடனான தனது சண்டையை மீண்டும் துவங்கியுள்ளது வட கொரியா.

சமீப காலமாகத் தென் கொரியா- வட கொரியா இடையிலான பிரச்சனை சற்று ஓய்ந்திருந்த நிலையில், தற்போது தென் கொரியா உடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்துவதாக வட கொரியா திடீரென அறிவித்துள்ளது.

இரு நாட்டுத் தலைவர்கள் இடையிலான ஹாட்லைன் வசதிகள் உட்பட, அனைத்து தகவல் தொடர்புகளையும் இன்று (ஜூன் 9) முதல் நிறுத்துவதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

வட கொரியாவிலிருந்து தப்பித்து தென் கொரியா சென்றவர்கள், எல்லையிலிருந்து வட கொரிய அரசை விமர்சிக்கும் துண்டுப் பிரசுரங்கள் அடங்கிய பலூன்களை பறக்க விட்டதே வட கொரியாவின் திடீர் கோபத்துக்கான காரணமாகக் கருதப்படுகிறது.

ஒரே மொழி, ஒரே இனத்தைக் கொண்ட இரு கொரிய நாடுகளுக்கு இடையே என்னதான் பிரச்சனை என்ற வரலாற்றை இங்கே பார்க்கலாம்

ஒன்றுபட்ட கொரியாவை ஜப்பான் தனது காலனித்துவ ஆட்சியின் கீழ் வைத்திருந்தது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்த பிறகு,1945-கொரியா விடுதலை பெற்றது.

அதன் பின்னர் வட பகுதி கொரியாவில் சோவியத் நாடும், தென் பகுதி கொரியாவில் அமெரிக்காவும் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தின. இரு ஆதிக்க நாடுகள் இடையிலான பனிப்போர், கொரியாவில் பெரும் சண்டையாக வெடித்தது1950ல் தொடங்கிய கொரியப் போர் மூன்று வருடங்கள் நீடித்தது. 1953-ல் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த போரில் 25 லட்சம் பொது மக்கள் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக வட கொரியா மற்றும் தென் கொரியா என இரண்டு நாடுகள் உருவானது.

ஆனால், போர் நிறுத்தத்தின்போது எந்த அமைதி ஒப்பந்தமும் ஏற்படவில்லை. அதனால் அப்போதிலிருந்தே இரு நாடுகள் இடையே பிரச்சனைகள் இருந்து வருகிறது.

கம்யூனிச நாடான வட கொரியா ஸ்டாலின் உருவாக்கிய சர்வாதிகார அமைப்பை ஏற்றுக்கொண்டு கட்டமைக்கப்பட்டது. அமெரிக்கா பின்பற்றும் முதலாளித்துவ கொள்கையைத் தென் கொரியா ஏற்றுக்கொண்டது.

1980களுக்கு பிறகு ராணுவ கட்டமைப்பின் கவனம் செலுத்திய வட கொரிய அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனை போன்றவற்றைத் தொடர்ந்து நடத்தியது. இது அந்த பிராந்திய நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதற்கு இணையாக தென் கொரியாவும் அமெரிக்காவின் உதவியுடன் தனது ராணுவத்தை பலப்படுத்தியதுடன், தொழிற்சாலைகள் மீது அதிக கவனம் செலுத்தியது.

1996-ம் ஆண்டு தற்காலிக கொரியப் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்த வட கொரியா ஆயிரக்கணக்கான படைகளை எல்லைக்கு அனுப்பியது. தங்கள் பகுதிக்கு வட கொரியா அனுப்பிய பல நீர்மூழ்கிக் கப்பல்களைத் தென் கொரியா அழித்தது.

இந்தநிலையில் 2000-ம் ஆண்டு வட கொரிய தலைவர் மற்றும் தென் கொரிய அதிபர் இடையிலான வரலாற்றுப்பூர்வ உச்சி மாநாடு வட கொரியத் தலைநகர் பியோங்யாங்கில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக எல்லையில் தொலைத் தொடர்பு அலுவலகம் திறக்கப்பட்டது. கொரியப் போரில் பிரிந்த குடும்பத்தினர் மீண்டும் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டதுடன், ஆயிரக்கணக்கான வட கொரிய கைதிகளைத் தென் கொரியா விடுவித்தது.

ஆனால், இந்த அமைதி அதிக காலம் நீடிக்கவில்லை. 2002ல் தென் கொரிய மற்றும் வட கொரிய ராணுவ கப்பலுக்கு இடையே நடந்த சண்டையில் 34 பேர் இறந்தனர்.

வட கொரியா யுரேனியம் சார்ந்த அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாகக் கூறி, அந்நாட்டின் எண்ணெய் கப்பல்களைத் தென் கொரியாவும் ஜப்பானும் நிறுத்தின.

2003-ம் ஆண்டு கொரியத் தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் இல்லாமல் வைத்திருக்க 1992 ஆம் ஆண்டு தென் கொரியாவுடன் போடப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து வட கொரியா விலகியது.

தனது பாதுகாப்புக்காக அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக 2005-ம் ஆண்டு முதல் முறையாக வட கொரியா ஒப்புக்கொண்டது.

வட கொரியா தங்கள் நாட்டு கணினிகள் மீது சைபர் தாக்குதல் நடத்தியதாக தென் கொரியா குற்றஞ்சாட்டியது.

2014ஆண்டு வடகொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னை விமர்சிக்கும் பிரசுரங்கள் அடங்கிய பலூன்களை சில தென் கொரிய செயற்பாட்டாளர்கள், வட கொரியா நோக்கி பறக்க விட்டதால் இரு நாடுகள் இடையே எல்லையில் துப்பாக்கிச்சூடு நடந்தது.

2015-ம் ஆண்டு எல்லை அருகே நடந்த தென் கொரியா அமெரிக்க ராணுவ ஒத்திகையின் போது, வட கொரிய வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தக்குதலுக்கு பின்னர் எல்லைப்பகுதியில் வட கொரியாவுக்கு எதிரான ஒலிபெருக்கி பிரச்சாரத்தைத் தென் கொரியா நிறுத்தியது.

தொடர்ந்து அணு ஆயுத தயாரிப்பில் கவனம் செலுத்தி வந்த வடகொரியா, தாங்கள் தயாரித்துள்ள ஏவுகணை தென் கொரியாவை மட்டுமல்ல அமெரிக்காவையும் தாக்கும் வல்லமை கொண்டது என அறிவித்தது.

2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு வட கொரியா தனது அணியை அனுப்பி வைத்தது.

கொரிய போரிலிருந்து இருநாடுகளுக்கிடையே தொடர்ந்து நிலவி வந்த பகைமை கடந்த 2018-ல் தணிந்தது. சமாதான கிராமமான பன்முன்ஜோமில் 2018 ஏப்ரல் 27-ம் தேதி வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் தென் கொரிய அதிபர் முன் ஜே-இன் இடையில் உச்சிமாநாடு நடைபெற்றது.

அணு ஆயுத ஒழிப்பு, அமைதியைக் கட்டமைத்தல், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை சீரமைத்தல் ஆகியவற்றை இந்த உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரியத் தலைவர் கிம் ஜோங்-உன் முதல் முறையாகச் சந்தித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாடு சிங்கப்பூரில் ஜூன் 12ம் தேதி நடந்தது.

கடந்த இரண்டு வருடங்களாக இரு கொரிய நாடுகள் இடையே பெரிதாக எந்த பிரச்சனையும் இல்லாத நிலையில், தற்போது மீண்டும் தனது தொடர்புகளை வட கொரியா துண்டித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »