Press "Enter" to skip to content

அமெரிக்காவில் இனவெறியை மீறி சாதித்த தமிழர்: பதவி உயர்வு மறுக்கப்பட்டவர் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஆன கதை

சாய்ராம் ஜெயராமன்
பிபிசி தமிழ்

ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்தால் ஒட்டுமொத்த அமெரிக்காவும் பற்றியெரிகிறது. கொரோனா வைரஸால் பல வாரங்களாக வீடுகளில் முடங்கிக் கிடந்த லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வீதிகளில் இறங்கிப் போராடுகிறார்கள்.

சமீபத்திய காலத்தில் அமெரிக்கா கண்டிராத இந்த மிகப் பெரும் போராட்டம், அதிபர் டொனால்டு டிரம்ப் அளிக்கும் அழுத்தத்தையும் மீறி அந்த நாடு முழுவதும் பரவியதுடன், மற்ற உலக நாடுகளுக்கும் விரிவடைந்துள்ளது.

பல தலைமுறைகளாக அமெரிக்காவில் வசித்து வரும் கறுப்பினத்தவர்களுக்கே இந்த நிலை என்றால், மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்று அதையே தங்கள் நாடாக நினைத்து வாழ விரும்பும் புதிய குடியேறிகள் எதிர்கொள்ளும் சவால்கள் எண்ணிலடங்காதவை.

இந்த நிலையில், தமிழகத்தில் பிறந்து, வளர்ந்து மேற்கல்விக்காக அமெரிக்கா சென்று அங்கு பணியிடத்தில் இனவெறியால் ஒதுக்கப்பட்ட டெல் கணேசன், அதே அமெரிக்காவில் தற்போது ஐந்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களை தொடங்கி நூற்றுக்கணக்கான அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியதுடன், குடியேறிகள் பெரிதும் கால்பதிக்காத ஹாலிவுட்டில் தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கிறார்.

அமெரிக்காவில் முப்பதாண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் 51 வயதான டெல் கணேசன் அந்த நாட்டில் நிலவும் இனவெறி, பாகுபாடு உள்ளிட்டவற்றை கடந்து தன் வளர்ச்சிக்கு முட்டைக்கட்டை போட்டவர்களுக்கே பின்னாளில் முதலாளி ஆனது எப்படி? அமெரிக்கர்களின் கோட்டையாக கருதப்படும் ஹாலிவுட்டில் திரைப்படங்களை தயாரித்து அங்கே தமிழ்த் திரையுலகப் பிரபலங்களை அறிமுகப்படுத்தி வருவது எப்படி?

யார் இந்த டெல் கணேசன்?

தமிழகத்தில் திருச்சியைப் பூர்விகமாக கொண்ட டெல் கணேசன், இயந்திரப் பொறியியலில் மேற்படிப்பு படிப்பதற்காக 1991ல் அமெரிக்கா சென்றார்.

கார்களின் மீது அளப்பரிய ஆர்வம் கொண்ட இவர் தனது மேற்படிப்பை முடித்தபின் கார் உற்பத்திக்கு உலகப் புகழ்ப்பெற்ற அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரிலுள்ள கார் நிறுவனம் ஒன்றில் பல்வேறு படிநிலைகளில் 13 ஆண்டுகள் பணியாற்றினார்.

தொடர்ந்து 13 ஆண்டுகளாக தன்னைவிட திறமையிலும், அனுபவத்திலும் குறைந்த பல அமெரிக்க வெள்ளையர்கள் பணியிடத்தில் அதிவேகமாக வளர்ச்சியடைவதை பார்த்து வெகுண்டெழுந்த டெல் கணேசன், அந்த நிறுவனத்தில் இருந்து விலகி, பல்வேறு தடைகளை தாண்டி அதே நாட்டில் கடந்த 15 ஆண்டுகளாக பல்துறை தொழில்முனைவோராக விளங்கி வருகிறார்.

அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்காக செல்லும்போது கையில் சில லட்ச ரூபாய்களை கொண்டு சென்ற டெல் கணேசன், இப்பொது 500 கோடிக்கு மேல் மதிப்பு கொண்ட பல்துறை நிறுவனங்களுக்கு சொந்தக்காரர். சாதாரண பொறியாளராக இருந்த டெல் கணேசனை அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தின் குறிப்பிடத்தக்க தொழில்முனைவோராக மாற்றியது எது என்று அவரிடமே கேட்டோம்.

‘இனவெறியும், பாகுபாடும் என்னை புரட்டிப்போட்டுவிட்டது’

“தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நான் திறமை மற்றும் உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்டு அமெரிக்காவுக்கு வந்து படித்து, டெட்ராய்ட் நகரத்திலுள்ள எனக்கு பிடித்த கார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தேன். எனக்கு ஒதுக்கப்பட்ட பணியை விரைந்து முடித்துவிட்டு, கார் தயாரிப்பில் உள்ள பல்வேறு துறைகளின் பணிகளையும் கற்றுகொள்வதில் என்னை ஈடுபடுத்தி கொண்டேன்” என்று கூறும் டெல் கணேசன் ஒருகட்டத்தில் இனவெறியும், பாகுபாடும் தனது திறமைக்கு சவால் விட ஆரம்பித்தன என்று கூறுகிறார்.

“வாழ்க்கையில் வெற்றியடைவதற்கான வழி இதுதான் என்று நான் நம்பி வந்த நியாயமான வழிகளும், முயற்சிகளும் கண் முன்னே தோல்வியடைவதை உணர்ந்தபோது அதை என்னால் தாங்கவே முடியவில்லை. அதாவது, என்னைவிட குறைந்த தகுதியும், அனுபவமும் கொண்ட பல அமெரிக்க வெள்ளையர்கள் பணியிடத்தில் அசுர வேகத்தில் வளர்ச்சியை கண்டார்கள். ஆனால், நானோ என் பணிநேரத்துக்கு அதிகமாக வேலை பார்த்தாலும், வெள்ளையர்களுக்கு ஈடான பதவி உயர்வையும், ஊதிய உயர்வையும் கடைசிவரை பெற முடியவில்லை” என்று தனது வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட நிகழ்வுகளை கணேசன் விளக்குகிறார்.

“பதவி, ஊதியம் உள்ளிட்டவற்றில் என் மீது பாகுபாடு காட்டப்பட்டதை கூட நான் பொறுத்து கொண்டேன். ஆனால், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் எனது யோசனைகளுக்காக எனக்கே தெரியாமல் தனியே கூட்டம் நடத்தி வேறு நபர்கள் பாராட்டை பெற்று வந்தது என்னை அதிர செய்தது.”

சென்ற இடமெல்லாம் துரத்திய இனவெறியும், பாகுபாடும்

நல்ல ஊதியம் கிடைத்தால் ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு, கேள்வி ஏதும் கேட்காமல் மேலதிகாரிகள் சொன்னதை செய்துவிட்டு வாழ்க்கையை கடத்துவது தனக்கு ஒருபோதும் சரிவராது என்று உணர்ந்த கணேசன், தனது விருப்பத்திற்குரிய வேலையை விட்டுவிட்டு 2005இல் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் மென்பொருள் நிறுவனம் ஒன்றை தொடங்கியதாக கூறுகிறார்.

“நான் வேலையை உதறிவிட்டு வந்தபோது, தொழிலை தொடங்கும் அளவுக்கு கையில் பணம் இல்லை. ஆனாலும், அமெரிக்காவில் சுமார் பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்துவிட்டோம், கண்டிப்பாக உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எண்ணற்ற வங்கிகளுக்கு சென்றேன்; எனினும், சென்ற இடமெல்லாம் ஏமாற்றமே மிஞ்சியது. இதுவே என்னுடைய இடத்தில் அமெரிக்க வெள்ளையர் ஒருவர் இருந்திருந்தால் அவருக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்திருக்கும் என்று நினைத்து பார்த்தபோது, நான் சோர்ந்துவிடவில்லை, மாறாக இதையெல்லாம் கடந்து வாழ்க்கையில் வெற்றிபெற்றே தீர வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கியது” என்று கூறுகிறார் டெல் கணேசன்.

உதவி செய்வதற்கு யாரும் இல்லாத சூழ்நிலையில், தன்னிடம் இருந்த வீட்டை அடகு வைத்த இவர் ஒரு கட்டத்தில் கையில் இருந்த கடன் அட்டைகளிலிருந்து எல்லாம் பணத்தை எடுத்து தொழிலை தொடங்கினார். இனி வாழ்க்கையில் முன்னேறி விடலாம் என்று நினைத்திருந்தபோது எதிர்பார்க்காத மற்றொரு பேரிடி விழுந்ததாக டெல் கணேசன் கூறுகிறார்.

“ஒரு நிறுவனத்தில் மனிதவளத்தை திறம்பட பயன்படுத்துவதற்குரிய மென்பொருள் ஒன்றை எனது நிறுவனம் உருவாக்கியது. அந்த காலகட்டத்தில் இதுபோன்ற மென்பொருளுக்கு தேவை அதிகமாகவே இருந்தது. ஆனால், நான் அமெரிக்காவை பூர்விகமாக கொண்டவனல்ல என்ற ஒரே காரணத்தினால் எந்த நிறுவனமும் எங்களுடன் தொழில்புரிய விரும்பவில்லை. இதை சிறிதும் எதிர்பார்க்காத நான் எக்காரணத்தை கொண்டும் இதிலிருந்து பின்வாங்க கூடாது என்று முடிவெடுத்ததுடன் அடுத்த கட்டத்தை மிகவும் துல்லியமாக திட்டமிட தொடங்கினேன்.”

இனவெறியும், பாகுபாடும் காணாமல் போன தருணம்

அமெரிக்காவை பொறுத்தவரை, கிட்டத்தட்ட அனைத்து வகையான தொழில்களுக்கும் உரிமம் பெற வேண்டியது அவசியம் என்பதையும் அது புதிய நிறுவனங்களுக்கு கிடைக்காது என்பதையும் தாமதமாக உணர்ந்ததாக கூறும் டெல் கணேசன், 2008ஆம் ஆண்டு உள்ளூர் நிறுவனம் ஒன்றை கையகப்படுத்தியதன் மூலம் தனது தொழிலை விரிவுபடுத்தியதாக கூறுகிறார்.

“நான் எப்போது அமெரிக்க நிறுவனம் ஒன்றை கையகப்படுத்தி அதன் மூலம் தொழில் செய்ய தொடங்கினேனோ அப்போதிலிருந்து அமெரிக்க சமூகம் என்னை பார்க்கும் பார்வையே அடியோடு மாறியது. குறிப்பாக, நான் 13 ஆண்டுகள் வேலை செய்த நிறுவனத்தில் எந்த மேலாளர் எனக்குப் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் தருவதற்கு மறுப்புத் தெரிவித்தாரோ அதே நபர் எனது நிறுவனத்தில் பணியில் சேர்ந்து, இன்று வரை ஒரு ஊழியராக பணியாற்றி வருகிறார். அதாவது, பணமும் புகழும் கிடைத்த உடன் என்னை 20 ஆண்டுகளாக சூழ்ந்திருந்த இனவெறியும், பாகுபாடும் பெருமளவு மறைந்துவிட்டன” என்று கூறும் டெல் கணேசன் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடும் பழக்கமே வெற்றிக்கான அறிகுறி என்று கூறுகிறார்.

விலகிய தடைகள் – பன்மடங்கு வளர்ந்த நிறுவனம்

“அமெரிக்காவில் இனவெறி, பாகுபாடு இவ்வளவு இருக்குமென்று கருதியதில்லை. ஆனால், எப்படியோ அதிலிருந்து மீண்டு வந்துவிட்டோம் என்று நிம்மதி பெருமூச்சு விட்டடேன். ஆனால், அந்த சமயத்தில் (2008-2009 காலகட்டத்தில்) எவ்வித பாரபட்சமுமின்றி அனைவரையும் முடங்க செய்யும் உலக பொருளாதார பெருமந்தம் என்னையும் வாட்டியெடுக்க ஆரம்பித்தது. அங்குல அங்குலமாக பார்த்து உருவாக்கிய நிறுவனம் கண்முன்னே திவால் ஆகும் சூழ்நிலையை நோக்கி சென்றுகொண்டிருந்தது. தனிமனித வளர்ச்சியை தடுக்கும் பிரச்சனைகளையெல்லாம் கடந்துவிட்டோம், இந்த பொருளாதார பிரச்சனையிலிருந்து நம்மால் மீள முடியாதா? என்ற எண்ணத்தில் வேறுபட்ட துறைகளில், நாடுகளில் கால்பதிக்க ஆரம்பித்து இழப்பிலிருந்து மீண்டு வந்தேன்” என்று கூறும் டெல் கணேசன் 2010ஆம் ஆண்டு தன்வசம் இருந்த மூன்று நிறுவனங்களை ஒருங்கிணைத்து ‘கைபா’ என்ற பன்னாட்டு நிறுவனத்தை தொடங்கினார்.

2010ஆம் ஆண்டில் சுமார் 75 கோடி ரூபாய் மதிப்பு கொண்டிருந்த கைபா குழுமம் இன்று அமெரிக்கா மட்டுமின்றி கனடா, ரஷ்யா, பெலாரஸ், இந்தியாவில் சென்னை, திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் பல்வேறு கிளைகளுடன் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட பெரும் நிறுவனமாக வளர்ந்துள்ளது.

தனக்கு பணியிடத்தில் அமெரிக்கர்கள் பாரபட்சம் காட்டிய காலம் போய் தற்போது 500க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களுக்கு தான் வேலைவாய்ப்பளித்துள்ளதாக டெல் கணேசன் பெருமிதத்துடன் கூறுகிறார். இதை தவிர்த்து மற்ற நாடுகளில் நூற்றுக்கணக்கானோர் தனது நிறுவனங்களில் பணியாற்றி வருவதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.

ஹாலிவுட்டில் கால்பதிப்பு

இனவெறி, பாகுபாடு, பொருளாதார நெருக்கடி என வேறுபட்ட பிரச்சனைகளை சந்தித்தன் மூலம் கிடைத்த அனுபவத்தை முதலீடு செய்ததன் விளைவாக தொழிலில் நிலையான வளர்ச்சி கிட்டியதாகவும், அதன் காரணமாக மீண்டும் தனக்கு பிடித்த வேறுபட்ட துறைகளில் கால்பதிக்கத் தொடங்கியதாகவும் கூறும் டெல் கணேசன் இன்று ஹாலிவுட்டில் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார்.

இதற்கு முன்பு தொழில்புரிந்த துறைகளுடன் முற்றிலும் தொடர்பற்ற ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பில் களமிறங்கியது ஏன் என்று கேட்டபோது, “நான் திருச்சியில் பள்ளிக்கல்வி பயின்றபோது, நண்பர்களுடன் சேர்ந்து வெகுதூரத்தில் உள்ள திரையரங்குக்கு சென்று 2-3 மணிநேரங்கள் வரிசையில் நின்று இரவுக்காட்சியை பார்த்துவிட்டு நள்ளிரவில் செங்கல், மணல் ஏற்றிச்செல்லும் லாரிகளில் வீட்டுக்கு செல்வேன். அப்போது, ‘அருமையாக இருக்கிறதே திரைப்படம், நாமும் ஒருநாள் திரைப்படத்தை எடுக்க வேண்டும்’ என்பது போன்ற எண்ணங்கள் தோன்றும். இத்தகைய இளமைக்கால எண்ணங்கள் சமீபத்திய ஆண்டுகளாக என்னை கடந்து சென்றன. இதுவே என்னை ஹாலிவுட்டில் தயாரிப்பாளராக உருவெடுக்க வைத்தது” என்கிறார் டெல்.

டெல் கணேசன் இதுவரை நான்கு ஹாலிவுட் திரைப்படங்களை தயாரித்துள்ளார். அதில் ஒன்று சமீபத்தில் இணையவழியில் வெளியான நிலையில், மற்ற திரைப்படங்களை ஓராண்டிற்குள் வெளியிடத் தீர்மானித்துள்ளதாக கூறுகிறார்.

“தமிழகத்துடனான என்னுடைய உறவை தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருக்க விரும்புகிறேன். அந்த வகையில், என்னுடைய முதல் ஹாலிவுட் படத்தில் தமிழ்த் திரைப்பட நடிகர் நெப்போலியனை நடிக்க வைத்தேன். அதே போன்று, என் அடுத்தடுத்த படங்களில் ஜி.வி. பிரகாஷ், யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டடோரை அறிமுகப்படுத்துவதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.”

இதுமட்டுமின்றி, இந்தியாவின் பாரம்பரியமிக்க யோகா மற்றும் மாற்று மருத்துவத்தை அமெரிக்காவில் சந்தைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறும் டெல் கணேசன், தன் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை தந்த தமிழ்நாட்டில் உள்ள ஆடை உற்பத்தி நிறுவனங்களின் தயாரிப்புகளை அமெரிக்காவில் இறக்குமதி செய்து இருநாடுகளிலும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறுகிறார்.

‘குடியேறிகளின் கனவு உலகமாக அமெரிக்கா தொடரும்’

அமெரிக்காவில் காலங்காலமாக நீடித்து வரும் இனவெறிப் பிரச்சனைக்கு தீர்வுதான் என்னவென்று கேட்டபோது வியப்பளிக்கும் தரவை மையப்படுத்தி பேசினார் டெல் கணேசன்.

“அமெரிக்கா என்றால் அனைவரும் மெத்த படித்தவர்கள், எல்லாம் அறிந்தவர்கள் என்று நம்மில் பெரும்பாலானோர் நினைப்பதுண்டு; ஆனால், அது முற்றிலும் தவறாது. உதாரணமாக, அமெரிக்காவின் புகழ்ப்பெற்ற டெட்ராய்ட் நகரத்தில் எழுத்தறிவு பெற்றவர்கள் விகிதம் தமிழ்நாட்டின், கேரளாவின் எழுத்தறிவு பெற்றவர்கள் சதவீதத்தைவிடக் குறைவு” என்கிறார் டெல் கணேசன்.

டெட்ராய்ட் நகரில் திறன் அடிப்படையிலான எழுத்தறிவு பெற்றோர் சதவீதம் 50க்கும் குறைவு என்று பல்வேறு புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

“அமெரிக்காவில் எழுத்தறிவு இல்லாதவர்கள் பெரும்பாலானோர் கறுப்பினத்தை சேர்ந்தவர்கள். இதனால் அவர்களுக்கு வேலைவாய்ப்பும், அடிப்படை வசதியும் மறுக்கப்படுகிறது” என்றும் கூறுகிறார் கணேசன்.

“அமெரிக்க சமூகத்தில் நுழைந்தபோது இனவெறி, பாகுபாட்டுக்கு உள்ளாகி ஜீரோவாக பார்க்கப்பட்ட நான் பொருளாதாரத்தில் வலுவான நிலையை அடைந்தவுடன் தற்போது ஹீரோ போன்று நடத்தப்படுகிறேன். அதாவது, என்னை பொறுத்தவரை, எப்போது அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு கல்வியும், வேலைவாய்ப்பும் கிடைத்து பொருளாதாரத்திலும் முன்னேறுகிறார்களோ அப்போதுதான் அவர்கள் மீதான சமூகத்தின் மனநிலை மாறுவதற்கு வாய்ப்புள்ளது. அதில் அமெரிக்காவின் மத்திய, மாகாண அரசுகளின் பங்கு அளவிடற்கரியது” என்று கூறுகிறார் டெல் கணேசன்.

வந்தாரை வாழ வைக்கும் மாநிலமாக தமிழகம் அறியப்படுவதைப் போன்று, சர்வதேச அளவில் குடியேறிகளின் விருப்பத்திற்குரிய நாடாக அமெரிக்கா தொடருமா என்று அவரிடம் கேட்டபோது, “அமெரிக்கா குடியேறிகளால் உருவாக்கப்பட்ட ஒரு நாடு; அது அவ்வாறே தொடரும். தகுதியும், தெளிவான திட்டமிடலும் இருந்தால் யார் வேண்டுமானாலும் தங்களது ‘அமெரிக்க கனவை’ சாதிக்க முடியும்” என்று கூறுகிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குடியேறிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பது தொடர்பாக பேசிய டெல் கணேசன், “அமெரிக்கா மற்ற நாடுகளை விட மிகவும் வித்தியாசமானது. இங்கு வரலாறு மிக குறுகிய காலத்தில் மாறிவிடும். அதாவது, அமெரிக்க அதிபர் பதவி என்பது டிரம்புக்கு சொந்தமானது அல்ல. அது காலத்திற்கேற்றவாறு மாறக்கூடியது. எனவே, அவரது குடியேற்றம் உள்ளிட்ட கொள்கைகள் ஒட்டுமொத்த அமெரிக்கர்களின் நிலைப்பாடு அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »