Press "Enter" to skip to content

மின்சாரத்தைப் பயன்படுத்த நுகர்வோருக்கு காசு தரும் நிலையை உருவாக்கிய கொரோனா

கொரோனா பெருந்தொற்று காலத்தில் தொழிற்சாலைகள் மூடப்பட்டதாலும், வாகனங்கள் இயங்காததாலும் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு பெருமளவு குறைந்துள்ளது. ஆனால், இந்த மாற்றங்கள் நிரந்தரமாக இருக்குமா?

பொது முடக்கம் காரணமாக உலக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யும் விதத்திலும் பயன்படுத்தும் விதத்திலும் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

அதே போல முடக்கம் காரணமாக சாலைகளில் வாகனங்கள் எதுவும் இயங்காததால், நகரங்களில் வாழும் மக்கள் சுத்தமான காற்றைச் சுவாசித்தார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றப் பிரச்சனைகளை உலகம் எதிர்கொண்டு வரும் நிலையில், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத மின் உற்பத்தி நிலையங்களையும், போக்குவரத்து முறைகளையும் உருவாக்க சரியான தருணம் இதுதான் என வல்லுநர்கள் நம்புகின்றனர். அந்தநிலையை அடைவதற்கு சில முக்கிய சிக்கல்களுக்கு நாம் தீர்வு காண வேண்டும்.

எதிர்காலத்தில் இலவச மின்சாரம்?

எதிர்காலத்தில் மக்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தினால் அவர்களுக்குப் பணம் வழங்கப்படலாம் என்பதை இந்த கொரோனா பெருந்தொற்று நமக்குக் காட்டியுள்ளது.

பொது முடக்கக் காலத்தில் ஐரோப்பா முழுவதும் மின்சார பயன்பாடு 15% குறைந்தது.

அதே சமயம் காற்று வேகமாக வீசியதால் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் உற்பத்தியும் அதிகரித்தது.

ஐரோப்பாவில் அதிக அளவில் நடந்த மின்சார உற்பத்தியாலும், அதன் தேவை குறைந்ததாலும் மின்சாரத்தின் விலை பூஜ்ஜியத்துக்கும் கீழ் சென்றது.

அபரிமிதமான மின்சாரத்தை வைத்திருக்கும் மின்சார நிறுவனங்களைப் பொருத்தவரை, தங்களது மின் உற்பத்தி நிலையங்களை மூடுவதை விட, மின்சாரத்தைப் பயன்படுத்தும் மக்களுக்குப் பணம் வழங்குவது சுலபமான விஷயமாக இருந்தது.

நிகழ் நேர (ரியல் டைம்) மின்சாரக் கட்டணங்களைப் பெற பிரிட்டனில் உள்ள ஏதேனும் ஒரு மின்சார நிறுவனத்துடன் மக்கள் ஒப்பந்தம் போட வேண்டும். பின்னர் மின்சார கட்டணம் பூஜ்ஜியத்திற்கு கீழ் செல்லும்போது, எவ்வளவு பயன்படுத்துகிறார்களோ அதற்கு ஏற்ப பணத்தைப் பெறலாம்.

”பூஜ்ஜியத்திற்கு கீழ் மின்கட்டணம் செல்லும் போது மின்சாரத்தைப் பயன்படுத்தினால், நீங்கள் பிரிட்டன் மின் துறைக்குச் சேவை செய்கிறீர்கள் என அர்த்தம்” என்கிறார் ஆக்டோபஸ் மின் விநியோக நிறுவனத்தைச் சேர்ந்த க்ரேக் ஜாக்சன்,

”அதிக மின் உற்பத்தி நிகழ்ந்தால், மின் விநியோக நிறுவனங்கள் கண்டிப்பாக யாருக்காவது பணம் செலவழித்தாக வேண்டும். அதிக பேட்டரிகளை உருவாக்கச் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குப் பணம் செலுத்த வேண்டும். அல்லது மின் உற்பத்தியை நிறுத்த உற்பத்தி நிறுவனங்களுக்குப் பணம் செலுத்த வேண்டும் அல்லது இந்த சூழ்நிலையின் போது மின்சாரத்தைப் பயன்படுத்தும் மக்களுக்குப் பணம் கொடுத்தாக வேண்டும். மூன்றில் ஏதேனும் ஒரு வழியைத் தேர்வு செய்வதை விட மின் விநியோக நிறுவனங்களுக்கு வேறு வழியில்லை” என்கிறார் ஜாக்சன்.

கடந்த ஏப்ரல் மாதம் ஒரு நாள், ஆக்டோபஸ் மின் விநியோக நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்திய ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கும் 4 பென்ஸ் பணம் பெற்றார்கள்.

புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை நோக்கி நாம் நகரும் போது, வழக்கமான மின் உற்பத்தி நிலையங்களும் மின் விநியோக நிறுவனங்களுக்கு மின்சாரத்தை விற்கும். அதிக அளவிலான மின்சாரம் கிடைப்பதால், மின்கட்டணம் குறையும் வாய்ப்புகள் உள்ளன.

அமெரிக்காவின் எரிவாயு உற்பத்தி நிலையங்கள்

கோவிட் 19 வைரசால் அமெரிக்காவில் பல இடங்களில், நிலத்தடி மாக்கல் பாறைகளில் சிக்கியுள்ள எரிவாயு (ஷேல் கேஸ்) எடுக்கும் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர், மண் மற்றும் ரசாயனம் ஆகியவற்றை அதிக அழுத்தும் கொடுத்து புவியில் செலுத்தி நிலத்தில் இருக்கும் மாக்கல் பாறைகளை உடைத்து, அதன் உள்ளே இருக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயுவை சேகரிப்பார்கள்.

அமெரிக்காவின் மெத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில், ஷேல் எண்ணெய் எனப்படும், மாக்கல் பாறைகளை நொறுக்கி எடுக்கும் எண்ணெயின் பங்கு 63% ஆக உள்ளது. அத்துடன் அதிகளவிலான ஷேல் எண்ணெய்யை அமெரிக்கா ஏற்றுமதி செய்து வருகிறது.

கொரோனா உலகத் தொற்றால் எரிவாயு தேவை குறைந்ததால், ஷேல் எண்ணெய் உற்பத்தி செய்யும் 56% நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன.

அமெரிக்காவின் மிகப்பெரிய ஷேல் எண்ணெய் உற்பத்தி பகுதியான பெர்மியன் பேசினில் 405 துரப்பனக் கருவிகள் இயங்கி வந்த நிலையில் தற்போது அது 175 ஆக குறைந்துள்ளது.

இந்த சரிவு, ஷேல் எண்ணெய் உற்பத்தி நிலையங்களை மூடுவதற்கான அறிகுறியா?

”இந்த எரிவாயு உற்பத்தி நிலையங்களை மூடக் கோரி மக்கள் நெடுங்காலமாகப் போராடி வந்தனர்” என்கிறார் வணிக நிபுணர் மெக்லேன்.

” இப்போது எரிவாயு விற்பனையாகவில்லை என்பதால், இந்த துறையே முடிந்துவிட்டது எனக் கூறமுடியாது. கோவிட் 19க்கு பிறகு இந்த துறை மீண்டும் உயிர்பெறலாம்” என்கிறார் அவர்.

ஷேல் எண்ணெய் உற்பத்தித் துறையைக் காப்பாற்றுவதற்கு அதிபர் டிரம்பும் ஆர்வம் கொண்டுள்ளார்.

எண்ணெய் உற்பத்தியைக் குறைத்து, அதன் விலையை உயர்த்துவதற்கு சௌதி மற்றும் ரஷ்யா எடுத்தும் வரும் முயற்சிகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது.

எனவே, விரைவில் பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை அமெரிக்கர்கள் எதிர்கொள்வார்கள்.

”அமெரிக்கத் தொழில்துறையில் எண்ணெயின் பங்கு மிக முக்கியம். எனவே அதன் விலை அதிகமானால் அதைச் சமாளிப்பது அரசுக்குச் சவாலானதாக இருக்கும்” என்கிறார் எண்ணெய் சந்தை ஆய்வாளர் பாலோ மைசு.

தங்கள் நாட்டில் கிடைக்கும் இயற்கை எரிவாயு மூலம் விலை ஏற்றத்தைச் சமாளிக்கலாம் என அமெரிக்கா நினைக்கிறது.

அணு சக்தி மீது மீண்டும் ஆர்வம்

அணு மின்நிலையங்களில் ஏற்கனவே உள்ள பாதுகாப்பு திட்டங்களால், தற்போதைய கோவிட் 19 சூழ்நிலையை அணு மின்நிலையங்கள் சமாளித்துவிட்டன என அணு சக்தி ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

” அணு மின்நிலையங்களில் பாதுகாப்பு என்பது முக்கிய அம்சமாக உள்ளது. அத்துடன் கோவிட் 19 வைரசைச் சமாளிக்க சில கூடுதல் பாதுகாப்புகளைச் செய்ய வேண்டும். அணுசக்தித் துறையால் இவற்றைச் சுலபமாக ஏற்பாடு செய்ய முடியும். ஊழியர்களுக்குத் தொற்று பாதிப்பு, தனிமைப்படுத்துதல் போன்றவற்றால் அணு மின்நிலையத்தை மூட வேண்டிய அவசியம் வராது” என்கிறார் உலக அணுசக்தி சங்கத்தைச் சேர்ந்த ஜோனதன் கோப்.

அதிக வேலை வாய்ப்பை வழங்குவதற்காக மிகப்பெரிய கட்டமைப்புத் திட்டங்களை மேற்கொள்ளவும், பசுமையான ஆற்றல் மூலங்களை நாடவும் கொரோனாவுக்குப் பிறகு பல நாடுகள் முன்வரும் என்பதால் இந்த துறையில் மிகப்பெரிய வளர்ச்சி இருக்கும்.

அணு சக்தித் துறையில் சமீப காலத்தில் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளே அதிகளவில் முதலீடு செய்துள்ளன.

அதே சமயம், அணு விபத்து மற்றும் அணுக்கழிவுகள் குறித்த அச்சங்களும் தொடர்கின்றன. இது தவிர, நவீன மின் தொகுப்புகளுக்குத் தக்கபடி உற்பத்தியில் ஏற்ற இறக்கங்களை செய்வது அணு மின் நிலையங்களால் முடியாது என்பதும் இன்னொரு பிரச்சனை என்கிறார்கள் வல்லுநர்கள். “நெகிழ்வுத் தன்மை என்பது என்பது அணு சக்தியில் எப்போதுமே பிரச்சனைதான். 24 மணி நேரமும் அணுமின் நிலையங்கள் இயங்குகின்றன. இதில் நேரத்துக்கு ஏற்றபடி உற்பத்தியைக் குறைக்கும் ஆற்றல் இருக்கவேண்டும் என்பதுதான் மின் தொகுப்புகள் எதிர்பார்ப்பது. ஆனால், அணு மின் நிலையங்களில் அப்படி உற்பத்தியைக் குறைக்கும் ஆற்றல் மிகக் குறைவு” என்கிறார் மின்னாற்றல் துறை ஆய்வாளரான டேவ் ஜோன்ஸ்.

ஹைட்ரஜன் எதிர்காலத்தின் எரிபொருளாக மாறுமா?

ஹைட்ரஜன் வாயு எதிர்காலத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.

தண்ணீரிலிருந்து தயாரிக்கப்படும் ஹைட்ரஜன் வாயு, சுற்றுச்சூழலுக்கு எந்த தீங்கும் விளைவிக்காது. பேருந்து, லாரி, ரயில் போன்ற போக்குவரத்து சேவைகளுக்கு பெட்ரோல், டீசலுக்கு பதிலாக இதைப் பயன்படுத்தலாம்

ஏற்கனவே இது தொடர்பாக பல ஆராய்ச்சிகள் வெற்றிகரமான முடிவைத் தந்துள்ளன.

இந்த கொரோனா பிரச்சனைக்குப் பிறகு, எதிர்கால எரிபொருளான ஹைட்ரஜன் எரிபொருள் துறையில் தங்களது முதலீட்டை அதிகரிக்க ஐரோப்பிய ஒன்றியமும், ஜெர்மனியும் திட்டமிட்டுள்ளன.

சுற்றுச்சூழல் சார்ந்த பொருளாதாரம்

நிலக்கரியைப் போலவே, பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருட்களின் எதிர்காலமும் இப்போது நிச்சயமற்றதாக உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் உலகில் பெட்ரோல், டீசல் கார்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், கார்பன் உமிழ்வும் உயர்ந்தது.

மின் உற்பத்திக்குப் பிறகு, உலகில் அதிகளவில் கார்பன் உமிழ்கிறவை கார்களே.

பொது முடக்கத்தால் கார்களும், விமான சேவைகளும் நிறுத்தப்பட்டதால் எண்ணெய் தேவையும் குறைந்தது. அத்துடன் கார்பன் உமிழ்வும் வெகுவாக குறைந்தது. தற்போது கார்பன் இல்லாத தங்கள் நகரங்களை அப்படியே வைத்திருக்க பல நாடுகள் விரும்புகின்றன. அதை செய்ய வேண்டும் என்றால் பெட்ரோல், டீசல் கார்களை குறிப்பிட்ட அளவு குறைக்க வேண்டும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

உற்பத்தி செய்யப்படும் எண்ணெய்யைச் சேமித்து வைக்க இடம் இல்லாததால், தற்போது உலக அளவில் எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், கோவிட் 19க்கு பிறகு உலக நாடுகள் உற்பத்தியைத் துவங்கும்போது எண்ணெய் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது எண்ணெய் விலை அதிகமாக இருக்கும்போது, மக்கள் இயற்கை எரிசக்தி பக்கம் செல்ல அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் எனவும் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

” என்னதான் எண்ணெய் இருந்தாலும், கொரோனாவுக்கு பிறகு உலக நாடுகள் சுற்றுச்சூழல் சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். கார்பனை குறைப்பதில் கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளைப் பின்பற்ற வேண்டும்” என வூட் மெக்கன்சியின் என்ற உலகளாவிய எரிசக்தி ஆராய்ச்சி ஆலோசனை நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் வாலண்டினா கிரெட்ஸ்மார் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »